பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 319

அக்காலத்தில் சத்திரத்தில் வீற்றிருந்த நிமித்தகர்கள் யாவரும் விசாகாவுக்குள்ள நான்கு லட்சணங்கள் சரிவரயிருப்பதைக் கண்டு பல்லின் லட்சணத்தை காணாதவர்களாய் விசாகாவை நோக்கி அம்மே! உம்முட னிருந்தப் பெண்கள் யாவரும் அதிகம் நனையாமல் ஓடிவந்துவிட்டார்களே அதுபோல் நீயும் ஓடிவந்துவிட்டால் உனது வஸ்திரம் அதிகம் நனையாதன்றோ என்றார்கள்.

விசாகா நிமித்தர்களை நோக்கிப் பெரியோர்களே! நான் அவர்களிலும் ஓட சக்த்தியுள்ளவளே ஆயினும் சிலகாரணங்களை உணர்ந்து ஓடாமல் நடந்துவந்தேனென்றாள்.

அன்புமிகுத்த குழந்தாய்! அதன் காரணங்கள் என்னை என்றார்கள். பெரியோர்களே! ஓடுவதினால் நான்குவகை கௌரவப்பழுதுண்டு.

அதாவது, இராஜகோலங்கொண்ட அரசன் ஓடுவானாயின் அவனைக் கண்டோர் மதியார்கள். அலங்காரஞ்செய்துள்ள பட்டத்துயானை ஓடுமாயின் அதனைக் கண்டோர் மதியார்கள். பற்றற்ற ஞானி ஓடுவானேயாயின் அவனைக் கண்டோர் மதியார்கள். கற்புடையப் பெண்கள் ஓடுவார்களேயாயின் அவர்களைக் கண்டோர்களும் மதியார்கள்.

மற்றும் ஓடுவதினால் இன்னோர் குறைவுமுண்டு. எங்கள் தாய் தந்தையர்களால் நாங்கள் விலையாகும் பெண்கள் ஒவ்வோர் அவயங்களையும் விலைமதித்து வைத்திருக்கின்றார்கள்.

அதிலொன்று ஓடுவதினாலும், ஆடுவதினாலும் பழுதடையுமாயின் ஒருவரும் எங்களை விவாகத்திற்கு விரும்பமாட்டார்கள். இதுதான் நான் ஓடாததற்கு மற்றொரு காரணமென்றாள்.

விசாகா பேசிக்கொண்டிருந்த நேரமெல்லாம் அவள் பற்களின் அழகைப் பார்த்தும் அவளது புத்தியின் விருத்தியை அறிந்தும் இத்தகைய லட்சணமுள்ள மங்கையை இதுவரையிலுங் கண்டதில்லை என்று எண்ணி அவளைப்புகழ்ந்து அவளது கழுத்தில் தங்கள் கரத்திருந்த மோகனமாலையை அணிந்து குழந்தாய்! உம்மால் இம்மாலை அழுகுபெற்றதென்றார்கள்.

விசாகா திடுக்கிட்டு பெரியோர்களே! தாங்கள் எவ்விடமிருந்து வந்தீர்களென்றாள்.குழந்தாய்! ஷ்ராவஸ்தியிலிருந்து வந்தோமென்றார்கள் தங்களதிபதியின் பெயரென்னையென்றாள் குழந்தாய்! அவர் பெயர் மிகாரா தனபதியென்றார்கள் பெரியோர்களே! எமதையன்பெய ரென்னையென்றாள் குழந்தாய்! உமதையன் பெயர் புண்ணியவர்த்தன சிறுவனென்றார்கள். மாலை சூடப்பட்ட விசாகா நடந்தவர்த்தமானங்கள் யாவற்றையுந் தனது தாய்தந்தையர்களுக்கு அறிவித்தாள்.

மாலைசூட்டப்பட்ட பெண்கள் யாவரும் மாலைக்குரியவன் மனையைச் சேரவேண்டியது வழக்கமாதலின் அதுபோல் விசாகாவும் ஐஞ்நூறு தேர்களில் தோழிகளுடனும், நிமித்தகர்களுடனும், சிலபெரியோர்களுடனும் பிரயாணத்திற்கு ஆயத்தமானபோது விசாகாவின் தந்தை நிமித்தகர்களை நோக்கி தாங்கள் எவ்விடமிருந்து வந்தீர்களென்றான்.

தனபதி யாங்கள் ஷ்ராவஸ்தி நகரத்திலிருந்து வந்தோமென்றார்கள். அந்நகர தனபதியின் பெயரென்னை யென்றான் மிகாரா தனபதி யென்றார்கள் அவரது புத்திரன்பெய ரென்னையென்றான் புண்ணியவர்த்தன சிறுவனென்றார்கள் தங்கள் தனபதியின் செல்வமதிப்பென்னையென்றான் தனபதி நாற்பது கோடிக் காகுமென்றார்கள்.

அஃது எமது செல்வத்திற்கோர் திரணமாகாது. ஆயினும் என்குமாரத்தி காலதேச வழக்கத்தையும் விவாகக் குறிப்பையும் ஒட்டி எப்போது மாலைசூட்டப்பட்டாளோ அப்போதே ஒருவனுக்குத் துணைவியாகிவிட்டாள். இனி செல்வத்தைப்பற்றி யோசிப்பதில் யாது பயனுமில்லை என்று சம்மதித்துக்கொண்டான்.

விசாகாளுக்கு மாலையணிந்த நிமித்தகர்கள் யாவரும் முன்பு சென்று வர்த்தமானங்கள் யாவற்றையும் மிகாராதனபதிக்கு விளக்கியபோது மிகாரா