பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 339

பிக்ஷீகுழாங்களுக்கு துறவற தன்மத்தைப்பற்றி போதித்துவிட்டு ஜீதாவன விகாரத்திற்குச் சென்றார்.

15. தர்ம சக்ர பிரவர்த்தன காதை

அவர் வரவை எதிர்நோக்கி நின்றிருந்த இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் பின் வருமாறு போதித்தார். ஓ! சகோதிரர்களே! தூய்மெயான (நற்சிந்தனை அல்லது நல் தியானமாம்) சம்யக் ஸமாதி இன்னதென்றும் அதைத் தொடர்ந்துவருபவை இவைகள் என்றும் உங்களுக்கு விளக்குகின்றேன் அவைகளை செவியாரக் கேளுங்கள்.

ஐயனே! கூறியருளும் என்றார்கள்.

பகவன் ஓ! சகோதிரர்களே! நல்தியானமாம் சம்யக் ஸமாதியை பூர்த்தி செய்ய ஏழுவகை கூட்டங்கள் தொடர்ந்துவரும். அவை (1. சம்யக்திருஷ்டி 2. சம்யக் கல்பனா 3. சம்யக் வஸனா 4. சம்யக் கர்மந்தா 5. சம்யக் அஜீவா, 6. சம்யக் வீரியா 7. சம்யக் ஸ்மிருதி) 1. நற்காற்சி 2. நல்லூற்றம் 3. நல்வாய்மெய் 4. நற்செய்கை 5. நல்வாழ்க்கை 6. நன்முயற்சி 7. நற்கடைப்பிடி

ஓ! சகோதிரர்களே! இதில் சம்யக்திருஷ்டியாம் நற்காட்சி முதலில் நிற்கின்றது. ஆனால் சகோதிரர்களே! நற்காட்சி எவ்விதமாய் முதல் நின்றது. ஒருவனுக்கு கெடுதியை கெடுதி என்றும், நல்லவை நல்லவை என்றும் தோன்றுமாயின் அஃதே நற்காட்சி என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! துற்பார்வை என்றால் என்ன?

தர்மம் செய்வது பிரயோசன மற்றதென்றும், நற்கருமத்தால் நற்பலனும், துற்கருமத்தால் துற்பலனும் அடைவதென்பது கிடையாது. இப்பிறவி, மறுபிறவி என்பது கிடையாது. அன்னையும் பிதாவும் தெய்வமெனல் வீண்வார்த்தை என்றும், இவ்வுலகில் பரிசுத்தமும் குற்றமற்ற தபசிகள் கிடையாதென்றும், இப்பிறவியையும் மறுபிறவியையும் தபசிகளால் எடுத்துக்காட்ட முடியாதென்றும் கூறத்துணிவதே துற்பார்வை என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! நற்பார்வை என்றால் என்ன?

ஓ! சகோதிரர்களே! நற்பார்வை என்பது இருவகைப்படும்.

முதலாவது உலகத்திலிருந்து நற்கிரியைகளைச் செய்தால் நற்பலனை அடைவோமென்பது (லோகீக) இல்லறவாழ்க்கைக்குரிய நற்பார்வை. இரண்டாவது சத்தியமார்க்கத்தில் நின்று (லோகுத்தா) துறவியாவோமென்பது உலகத்திற்கு அப்புறப்பட்ட நற்பலனை நாடிநிற்பதும் நற்பார்வையாம்.

ஓ! சகோதிரர்களே! இல்லறத்திலிருந்து நற்கிரியைகளைச் செய்தால் நற்பலனை அடைவோமென்னும் நற்பார்வை என்றால் என்ன?

தர்மம் செய்வது புண்ணியம், பிரயோசனமானது. நற்கருமத்தால் நற்பலனும், துற்கருமத்தால் துற்பலனும் அடைவது உண்மெயே. இப்பிறவி மறுபிறவி என்பது உண்டு. அன்னையும் பிதாவுந் தெய்வங்களே.

இப்பிறவியையும், மறுபிறவியையும் தாங்களும் தெரிந்து விளக்கக்கூடிய பரிசுத்தமும் குற்றமற்ற தபசிகள் இருக்கின்றார்கள். சகோதிரர்களே! இவையே இல்லறத்திலிருந்து நற்கிரியைச்செய்து நற்பலனை அடைவோம் என்னும் நற்பார்வை என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! உலகவாழ்க்கைக்கு அப்புறப்பட்ட சத்திய மார்க்கத்தினின்ற (லோகுத்தா) துறவிகள் நற்பலனை நாடி நிற்கும் நற்பார்வை என்றால் என்ன?

ஞானமுடனும், ஞான சக்தியுடனும், ஞான வீரியத்துடனும், சிந்திப்புடனும், மன பரிசுத்தம் உலகநாட்டமற்ற வழியில் நின்று சத்திய மார்க்கத்தை பின்பற்றுதலே நற்பார்வை. இஃதே உலகவாழ்க்கைக்கு அப்புறப்பட்டு சத்தியமார்க்கத்தினின்று துறவிகள் நற்பலனை நாடிநிற்கும் நற்பார்வை என்னப்படும்,

இரண்டாவது இல்லறத்திலிருந்து துறந்து சத்திய மார்க்கத்தில் பழகுவதினால் உண்டாகும் நற்சித்தமும் இருவகைப்படும்.