பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

342 / அயோத்திதாசர் சிந்தனைகள்

மிச்சா - அஜீவா அதாவது துன்வாழ்க்கை துன்வாழ்க்கையென்றும், சம்யக் - அஜீவா நல்வாழ்க்கை நல்வாழ்க்கையென்றும் பகுத்தறிந்துக் கொள்வானாகில் அவன் நற்பார்வையில் இருக்கின்றான்.

ஓ! சகோதிரர்களே! மிச்சா - அஜீவா துன்வாழ்க்கை எனில் யாது?

சூது, நம்பிக்கைத் துரோகம், குறிச்சொல்லுதல், தந்திரம், அநியாய வட்டி இவைகளில் பழகிவருவதே துன்வாழ்க்கை என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! நல்வாழ்க்கை எனில் யாது?

ஓ! சகோதிரர்களே! நல்வாழ்க்கை இருவகைப்படும்.

முதலாவது - இல்லறத்திலேயே நற் சுகத்தையும், நற்பலனையும் கொடுக்க கூடிய நல்வாழ்க்கையாம்.

இரண்டாவது - இல்லறத்தினின்று துறந்து சத்திய மார்க்கத்தில் பழகுதலினால் உண்டாகும் பரிசுத்தமான நல்வாழ்க்கையாம்.

ஓ! சகோதிரர்களே! இல்லறத்திலேயே நற்சுகத்தையும், நற்பயனையும் கொடுக்ககூடிய நல்வாழ்க்கையெனில் யாது?

கெடுதியான மார்க்கங்களில் சம்பாதித்து புசியாது சத்தியத்திற்காக பாடுபட்டு புசித்து வாழ்வதே இல்லறத்திலேயே நற்சுகத்தையும், நற்பலனையும் கொடுக்கக்கூடிய நல்வாழ்க்கையாம்.

ஓ! சகோதிரர்களே! இல்லறத்தினின்று துறந்து சத்தியமார்க்கத்தில் பழகுவதினால் உண்டாகும் நல்வாழ்க்கைஎனில் யாது?

மேற்கூறிய ஐந்துவகை துன்வாழ்க்கைகளான வாழ்க்கைகளை வெறுத்து நீக்கி விலகிக்கொண்டு பரிசுத்த மனத்துடனும் உலகப்பற்றை விட்டு சத்தியமார்க்கத்தில் நாடி சத்தியமார்க்கப்பிரகாரம் ஒழுகிவரும்படியான இல்வாழ்க்கையே இல்லறத்தினின்று துறந்து சத்தியமார்க்கத்தில் பழகுவதினால் உண்டாகும் பரிசுத்த நல்வாழ்க்கை என்னப்படும்.

ஓ! சகோதிரர்களே! துன் வாழ்க்கையை ஒழித்து நல்வாழ்க்கையை விருத்தி செய்வதற்கு சம்யக்-வீரியா அதாவது நன்முயற்சியைக் கடைபிடிக்க வேண்டும். நற்சித்தத்துடனும், சித்த ஜாக்ரதையுடனும், துற்செய்கையை ஒழித்து சம்யக்ஸ்மிருதி அதாவது நற்கடைபிடித்தல் வேண்டும். ஆக நற்செய்கையைத் தொடர்ந்து வருபவை மூன்றாம். அவை நற்பார்வை, நன் முயற்சி, நற்கடைபிடி என்பவைகளே.

ஓ! சகோதிரர்களே! நற்காட்சி அல்லது நற்பார்வை முதலில் நிற்பதற்குக் காரணம் சம்யக் கல்பனா நல்லூற்றம் யாவரிடத்தில் தோன்றியதோ அவனுக்கு சம்யக் வஸனா நல்வசனம் தோன்றும். நல்வசனம் யாவனிடத்தில் தோன்றிய தோ அவனுக்கு சம்யக் கர்மந்தா நற்கருமந் தோன்றும். நற்கருமம் யாவனிடத்தில் தோன்றியதோ அவனுக்கு சம்யக் அஜீவா நல் வாழ்க்கை தோன்றும். நல்வாழ்க்கை யாவனிடத்தில் தோன்றியதோ அவனுக்கு சம்யக் விரியா நல் முயற்சி தோன்றும். யாவனுக்கு நல்முயற்சி தோன்றிற்றோ அவனுக்கு ஸம்யக்ஸ்மிருதி நற்கடைபிடித்தல் தோன்றும். யாவனுக்கு நற்கடைபிடித்தல் தோன்றிற்றோ அவனுக்கு சம்யக் சமாதி நற்தியானம் தோன்றும். யாவனுக்கு நற்றியானம் உதித்ததோ அவ்விடத்திலேயே முத்தியாம் நிருவாணமென்னும் பரமசாந்தியடைகின்றான். அவனே சுரோதாபதி, சகிர்தாகாமி, அநாகாமி என்னும் இம்மூன்று நிலைகளினின்று விலகி பற்றற்றதும் பரமசுகமுமான அறஹத்துநிலை அடைகின்றான் என பகவன் தமது தர்மசக்ரப்ரவர்த்தனமாம் அறச்சக்கரத்தை விளக்கிக்காட்டி முடித்தவுடன் பிக்ஷீகுழாங்களெழுந்து கைகூப்பி ஆனந்தமடைந்தனர்கள்.

அவ்விடம் விட்டு நீங்கிய அறவாழியான் வைசாலி நகரடைந்தபோது பிக்ஷமார்கள் பகவனை அஞ்சலிகரணஞ்செய்து சுவசித்தங் பரிதபனம் அதாவது இருதயத்தை சுத்திசெய்யும் மார்க்கத்தை போதித்தருளவேண்டுமென வினவ பகவன் கூறுவார்.

ஓ! சகோதிரர்களே! இதயத்தை சுத்திசெய்யும் மார்க்கம் எழுவகைப்படும். அவை 1. சதிபதானங்கள் - நான்குவகை சிந்தனை, 2. வாயமோ - நான்குவித