பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346 / அயோத்திதாசர் சிந்தனைகள்

குடிகளை மீளா துக்கத்தில் ஆழ்த்தலாகாது. அவர்கள் அறியாமெயால் துற்கருமங்களை விளைத்த போதினும் அறக்கருணையால் அவர்களை தண்டித்து அன்பு பாராட்டி அறிவு விருத்தி செய்தல் வேண்டும்.

உமது குடிகளை அழிவின் கூட்டத்தில் சேரவிடாமலும், அநீதி மார்க்கத்தில் நடக்கவிடாமலும் தடுத்து சாதுசங்கங்களுடன் சேரவும், சத்திய தன்மத்தில் நடக்கவுஞ் செய்தல் வேண்டும்.

ஆதுலர்களுக்குப் புசிப்பும், பிணியாளருக்கு கவுடதமும், அநாதைகளுக்கு ஆதரவும் தந்தருளல் வேண்டும்.

அரசாங்கத்து அதிபதியாய் இருக்கின்றோமென்று அகங்கரிக்கலாகாது, அதிகாரத்தில் தன்னை ஒடுக்கிக்கொண்டவனே சகலரையும் அடக்கியாளும் அதிகாரியாவன்.

தன்னைத்தானே அடக்கியாளும் அதிகாரி தன்குடும்பத்தையுந் தன் கிறாமவாசிகளையும் தனது தேசக் குடிகளையும் எளிதில் அடக்கி ஆளுவான்.

நான்குபக்கமும் அடர்ந்திருக்கும் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் அவத்தையாற் சூழப்பட்டிருக்கின்றோம். அவ்வவத்தையின் சதுர்பந்தக் கட்டுகளறவேண்டுமாயின் சத்தியதன்மத்தின் வாளைக்கொண்டே அவற்றை அறுத்து மீளவேண்டும்.

அறிவை விருத்தி செய்துக்கொள்ளுகிறவர்கள் தேகபோகம் சகலத்தையும் வெறுப்பார்கள். அறிவின் வாழ்க்கையில் விழிப்புள்ளவர்கள் சகல மோகங் களையும் தவிர்ப்பார்கள்.

மரமானது பற்றி எரியுங்கால் ஓர் பட்சியும் அதனருகில் அணுகாமல் திகைப்பதுபோல் கோபாக்கினி, காமாக்கினி, லோபாக்கினியால் பற்றி எரியும் உள்ளத்தின்கண் உண்மெய் சேராது திகைத்து பேதமெயால் பிறப்புண்டாகி பிணி, மூப்பு, சாக்காட்டிற்கிழுத்து பின்னும் பின்னுந் துக்கத்திற்கு ஆளாக்கும்.

இதன் சுருக்கத்தை அறிந்தவனே உண்மெய்ப்பொருளை அடைவான். உண்மெய்ப்பொருளை அறிந்தவனே நித்திய வாழ்வைப் பெறுவான். உண்மெய்ப் பொருளை உணராதவன் மாளாப்பிறவியில் சுழன்று மீளாதுக்கத்தில் ஆழ்ந்து காற்றிற் பரக்கும் பதறுபோல் அல்லலடைவான்.

இத்தகைய உண்மெய் ஞானம் ஒருவனுக்கு இல்லாமல் போமாயின் அவன் பகுத்தறிவில்லாதவனேயாவன். பகுத்தறிவில்லாதவன் தோற்றத்தில் மனிதனேயாயினும் மனிதருள் மரமும், மனிதருள் மாடென்றும் எண்ணப்படுவான்.

உண்மெய் ஞான விசாரிணை துறவறத்தைச் சார்ந்த சங்கத் தோருக்குமாகும். இல்லறத்தைச்சார்ந்த குடும்பிகளுக்குமாகும்.

உண்மெய் விசாரிணைக்காய துறவற தன்மசங்கத்தைச் சேருவோரும், பற்றறுக்காது பிறவிக்காளாவார்கள்.

இல்லற தன்மத்தினின்றும் பற்றினை அறுப்போர் உண்மெய்ப்பொருளை அடைந்து நிருவாணம் பெறுவார்கள்.

காம, வெகுளி, மயக்கமாம் பெருவெள்ளமே யாவருக்கும் அபாயமானது. அவ்வெள்ளத்தால் சகலமும் நாசமாகிப்போம். அவ்வெள்ளத்தின் சுழலில் அகப்பட்டவன் ஒருக்காலும் மீளான். பற்றற்ற ஞானமாந்தோணியில் ஏறிக் கொண்டவன் அவ்வெள்ளத்திற்குஞ் சுழலுக்கும் அஞ்சான். ஆதலின் உன் விழிப்பிலும் நித்திறையிலும் சத்கருமத்தை நாடு, சத்கருமத்தின் பேரொலியானது உன்னைக் கூச்சலிட்டழைக்கின்றது. அதனிற் செவிசாய்ப்பாயாக.

நமது கன்மத்தை விட்டு தப்பிப்போம் வழி யாதொன்றும் இல்லை. துற்கன்மவழி துன்பவரையில் கொண்டுபோய்விடும். இத்தகைய வழிகளைக் கண்டறிந்து நடப்பவர்களும் நாமே. அதன் நிலையை அடைபவர்களும் நாமேயாதலின் உமக்குள்ள பேரின்பவமுதம் பேரொலியிட்டழைக்கின்றது அதனை உணர்வாயாக.

நாம் செய்துவரும் கன்மத்தின் பலனை நாமே அனுபவித்துத்தீரல் வேண்டும். விதைத்த விதையே முளைக்கும். ஆதலின் துற்கருமங்களை அணுகவிடாது சத்கருமத்தையே செய்தல் வேண்டும். சத்கன்ம பலன் துக்கத்தை அகற்றும்.