பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 353

(சாவகர்களாம்) குடும்பிகளாவது (உபாஸகர்களாம்) புத்ததன்ம சங்கத்தை பாதுகாப்பவர்களாவது (தாயகர்களாம்) இல்லறத்தினின்று துறவறத்தை நாடி வருவோரை அன்புடன் ஆதரித்து பிச்சாபாத்திரமும் சீவரமுமளிப்பவர் களாவது (அனகாரிகாகளாம்) விவாகம் செய்யாது இல்லறத்திலிருந்தே தன்மத்தைப் போதிப்பவர்களாவது வியாபாரிகளாவது மற்றும் யாவரேனும் அருகில் அணுகுவரேல் அவர்களுக்கு பரிசுத்ததன்மத்தைப் போதித்தும் அவர்களில் எழும் அபரிசுத்தமான பாபகன்மங்களை விலக்கும் வழிகளை போதித்தும் யாவர்பேரிலும் தீங்கு நினையாது மழையானது ஏழை என்றும், தனவான் என்றும், சுகதேகி என்றும், பிணியாளனென்றும், ஆணென்றும், பெண்ணென்றும் வித்தியாசம் பாராது பெய்வதுபோல் சகலருக்கும் ஒரே விதமாய் தன்மத்தைப் போதித்து அன்பை வளர்த்து வருபவர் எவரோ அவரையே முனி என்றழைக்கலாம்.

ததாகதர் போதித்துள்ள சதுர்சத்தியத்தை இடைவிடாது சிந்தித்தும், பழக்கத்திற்குக் கொண்டுவந்தும், அதன் உள்ளடங்கிய அரிய அஷ்டாங்க மார்க்கம், பஞ்சஸ்கந்தம், 40 வித சமதாபாவனா, 12 நிதானங்கள் இவைகளின் விசாரணையிலும் பழக்கத்திலும் தினேதினே விருத்தியான பின் ராஹ, துவேஷ, மோஹம் இவைகளினின்று விடுபட்டும் புசிக்க அன்னமும், படுக்க மஹாசயனமும், உட்கார உயரமான இடமும், தங்க மடமும், சீவரத்தைத் துவைக்கத் தண்ணீரும் ஆகிய இவைகளைத் தேடாது தாமரை இலையின்மேல் தண்ணீர் நிற்பதுபோல் தேகசுத்தம், மனோ சுத்தம், வாக்கு சுத்தம் என்னும் இவைகளில் உட்கார்ந்தும், படுத்தும், உண்டும், சதானந்தத்தில் யாதொரு பற்றுமின்றி இருப்பவரெவரோ அவரையே முனி என்றழைக்கலாம் என பகவன் கூறி முடித்தவுடன் பெருமான் பிரசங்கத்தைப் பொறுமெயுடனும், அன்புடனும் செவிகுளிரக்கேட்டிருந்த பிரஜைகளும் சங்கத்தோர்களும் பகவனை மும்முறை சுற்றிவந்து பாதம் பணிந்து காம்பீரமான பார்வையையுடைய ததாகதரே மாரனை வென்ற வீரரே சரணம் மஹாமுனியே சரணம் சாக்கைய சிம்ஹமே சரணம். 32 இலட்சணமுடைய சுகதோ சரணம் என பன்முறை ஆனந்தத்துடன் இறைஞ்சி பகவனே! இருளிலிருந்தோருக்கு வெளிச்சத்தைக் காட்டினீர். பாப கன்மத்தில் புரண்டுருண்டு சென்ற எங்களுக்கு புண்யகன்மத்தை விருத்தி செய்ய போதித்தீரென ஆனந்தக்கண்ணீர் விட்டு பகவனிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.

18. தந்தையின் இரண்டாமுறை தரிசனகாதை

அக்கால் மகதநாட்டில் சுத்தோதயச்சக்கிரவர்த்தி என்றும், மண்முகவாகு என்றும் பெயர் பெற்றதலைத்தார்வேந்தர் தேகமெலிவை உணர்ந்த அமைச்சர்கள் தனதேகபுத்திரராகும் சித்தார்த்தருக்கறிவிப்பான் வேண்டி வேவுகர்களை அழைத்து சுத்தோதயர் சுக ஈனத்தை விளக்கி நமது கருணைக்கடலாங் கங்கையாதாரரை அழைத்துவரவேண்டுமென்று ஆக்கியாபித்திருந்தார்கள்.

அவ்வேவுகர்களும் கம்மதம்மாவில் தங்கியிருந்த கமலநாதனைக் கண்டு வணங்கி தேவரீர் தமது தந்தை அதிக சுகயீனத்திலிருக்கின்றார் தாமவ்விடம் வந்து உமது தரிசனந் தரல் வேண்டுமென்று இரைஞ்சினார்கள்.

அவ்வார்த்தையை வினவிய அந்தணர் தாதை அவ்விடம்விட்டெழுந்து அரண்மனையை நோக்கிவருங்கால் வேவுகர்கள் விசுவநாதனைநோக்கி ஐயனே! தாங்கள் கால்நடையில் நடக்கவும் அவற்றை யாங்கள் காணவுங் கூடுமோ கிருபாநிதியே! நம்முடன் வரும் யானையின்மீதேனும், ஒட்டகத்தின்மீதேனும் ஒன்றில் ஏறிக்கொள்ளவேண்டுமென்று வேண்டினார்கள்.

அதனைவினவிய அவலோகிதர் வேவுகர்களை நோக்கி அன்பர்களே! நம்முடன் வரும் யானையின்மீதும் ஒட்டகத்தின்மீதும் உங்களுக்கு வேண்டிய ஆகாரங்களின் பாரமே நிறம்பவிருக்கின்றது. அதனுடன் எம்மெயும் நிறப்புவீர்களாயின் அதிகபாரமாகுமன்றோ . அப்பாரந்தாங்கி நடப்பதற்கு யானையும் ஒட்டகமும் சோர்வடையுமன்றோ. அத்தகைய சோர்வுக்கும்