பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

358 / அயோத்திதாசர் சிந்தனைகள்

5.சினேகரும் பந்து மித்திரரும் அவனை வெறுப்பார்கள். சூதாட்டமே மிக்க விருப்புள்ளவனாதலின் விவேகமிகுத்தோர் கூட்டங்களிலும் இவனை சேர்க்க மாட்டார்கள்.
6.சூதாட்டத்தில் மிக்க விருப்புள்ளவனுக்கு இல்லற வாழ்க்கைக்கு ஏதுவாம் ஓர் பெண்ணையுங் கொடுக்க அஞ்சுவார்கள்.

இவைகளே சூதாட்டமிக்கோனுக்கு உண்டாகும் பாவக்கிளைகள் எனப்படும்.

(ஐந்தாவது) சோம்பேறிகளுடன் சேர்ந்து பழகுவதாலுண்டாகும் பாவக்கிளைகள் யாதென்பீரேல் –

1.சூதாட்ட மிகுத்தோர் எங்குளரோ அவர்களிடஞ் சார்தல். –
2.காமிய தூர்த்தர்களுடன் கலந்து திரிதல்.
3.பொய் விருத்தாந்தங்களைப் புலம்பித் திரியுங் கூட்டத்தோருடன் சேர்தல்
4.மதுபானப்பிரியர்களின் கூட்டத்தையே பின்தொடர்ந்து திரிதல்.
5.வஞ்சகமுள்ளோர் கூட்டத்தில் சேர்தல்.
6.துஷ்டதனம் வீண்வழக்கிழைப்பவர் பாற் சேரல்

இவைகளே யாது தொழிலுமற்ற சோம்பேறிகளுடன் சேர்வதால் உண்டாகும் பாவக்கிளைகள் என்னப்படும்.

ஓர் குடும்பியானவன் குடும்ப விருத்திக்குத் தக்க முயற்சியற்று அஜாக்கிரதைக்கு இடங்கொடுப்பதால் உண்டாகும் பாவக் கிளைகள் யாதென்பீரேல் –

1.ஒருவன் காலையில் எழுந்து கழிக்கவேண்டிய கடன்களை யொழித்து தான் செய்யுந் தொழிலை நோக்காது இன்று அதிகக் குளிராயிருக்கின்றது, வெப்பமாயிருக்கின்றது என்னுமோர் போக்குக்காட்டி செய்தொழிலை விடுப்பானாயின் அன்று கிடைக்கக் கூடிய கூலியுமற்று சேர்த்துள்ள திரவியத்தை சிலவிட்டு திகைப்பான்.
2.இவ்வகை அஜாக்கிரதையால் ஒருநாள், இரண்டுநாள், மூன்று நாள் தங்கி முற்றுங் குடும்பச் செலவைக் கருதானாயின் சேர்த்துள்ள திரவியங்கள் யாவும் செலவழிந்து யாரிடங் கடன் கேட்கலாம் என்று நாணுவான்.
3.தொழிலை நோக்கிச் செல்லாது கடன் கொடுப்போன் எவனோ அவனை நோக்கிச் சென்று அவன் யாதாமோர் ஈடுகொடுத்தாலன்றி கடன் கொடேனென்பானாயின் அவனை முறுமுறுத்து வீடு சேர்வான்.
4.திரவிய கஷ்டத்தை உணர்ந்தும் தொழிலை நோக்காது பசியா யிருக்கின்றது தொழிலுக்குச் செல்லேனென்று மனைவியை நோக்கி ஆசைக்குச் செய்த நகை ஆபத்துக்கு உதவவேண்டுமல்லவா உன் ஆபரணங்களில் ஒன்றைக் கொடுமென்பானாயின் மனைவிக்கும் மனத்தாங்கலுண்டாய் தொழிலுக்குச் செல்லாது துட்டு விரயஞ்செய்தது நீக்கி நகைகளையும் விரையஞ்செய்ய ஆரம்பித்தீர் என்பாளாயின் மனையாட்டியை முறுமுறுத்தும் வெளியேறுவான்.
5.நகைகளை விற்றேனும், வீடுவைத்தேனும் பணங்கொண்டு அன்னம் வட்டித்துப் புசித்தபின் திருப்தியாகப் புசித்து விட்டேன், தொழிலுக்குச் செல்லலாகாதென்று நின்று விடுவானாயின் உள்ள நகைகளும் மற்றும் பொருட்களும் விரயமாகின்றதேயென்று மனைவி முணுமுணுக்க எக்காலுங் கேட்கா முணுப்பால் ஏக்கங்கொண்டு விழிப்பான்.
6.தொழிலின் முயற்சியையும் அதன் விருத்தியையுங் கருதாது பொருட்களை விற்பதும் புசிப்பதுமே முயற்சியாயிருந்து பெண்டு பிள்ளைகளும் வெறுக்க பெற்றோர் உற்றாரும் நிந்திக்க குடும்பத்திற்கே துவேஷியாய் குற்றங்காலிடுவான்.

இவைகளே தனது அஜாக்கிரதையால் செய்தொழிலைவிட்ட பாவக்கிளைகள் என்னப்படும்.

சுடலை நடராஜன் பின்னும் சிகாளனைநோக்கி குடும்பத்தில் துக்க மற்றவாழ்க்கை மிக்க அரிதாகும்.

அதாவது குடும்பிகளுக்குள் மூன்றுவகை நேயர்கள் தோன்றுவார்கள்.

1.ஒருவன் மதிமயங்கக் கள்ளருந்தியிருக்குங்கால் சினேகம் பாராட்டுவான்.