பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 363


இத்தகைய ஐந்து நற்செய்கைகளும் மைந்தர்கள் தந்தைதாயாருக்குச் செய்யும் ஒழுக்கங்களாகும்.

குடும்பத்தோருக்கு ஆசிரியனாயுள்ளவன் ஐந்து வகை சிறப்பில் மிகுத்தோனாய் இருத்தல்வேண்டும்.

1. பொய் பேசாதவனும் பேராசை இல்லாதவனுமாய் இருத்தல் வேண்டும்.

2. கலை நூற்களையும், கணித நூற்களையும் மிக்க ஆராய்ந்தவனாய் இருப்பதுமன்றி நல்லொழுக்கங்களையே போர்வைபூண்டவனாய் இருத்தல் வேண்டும்.

3. குடும்பிகளுக்குத் தோன்றும் துற்கால நற்காலச் செயல்களை ஆராய்ந்து துற்கருமசெயல்களை அகற்றவும் நற்கருமச் செயல்களைப் பெருக்கவுஞ் செய்யல்வேண்டும்.

4. மக்கள் பருவமாய்ந்து வித்தியா புத்திகளை ஊட்டி வதுவை பருவமாய்ந்து பாலதான பொருத்தத்திற்குத் தக்க மங்கையைப் பொருத்தி தன்மகன்மத்தை நடத்தல் வேண்டும்.

5. இத்தகைய கன்மகுருக்கள் எக்காலுங்குடிகள் மீது கண்ணோக்கம் வைத்து ஞானத்தின் ஒழுக்கமும் சீலத்தின் பெருக்கமுமுற்று வாழ்வு பெறச்செய்யல் வேண்டும்.

இவ் ஐந்துங் குடும்பிகளுக்காய் கன்மகுருக்கள் செய்யவேண்டிய நல்லொழுக்கங்களாகும்.

குடும்பியே இல்லற மாணாக்கர்கள் ஒழுக வேண்டிய ஒழுக்கங்கள் ஐந்து வகைப்படும்.

1. ஆசிரியரை மாணாக்கன் எழுந்து பணிந்து அவருக்கு வேணவுபசரணைச் செய்து அவருக்கு ஆசனம் ஈய்ந்து உட்காரவைத்து பயபக்தியுடன் அவரெதிரில் உட்காரவேண்டும்.

2. அவர் கொடுக்கும் பாடங்களை உறுதியுடன் மனதிற் பதியச் செய்து ஆசிரியர் கேட்கும்போதெல்லாம் விளக்கவேண்டியது.

3. தானே காலந்தவிராது ஆசிரியனை அடுத்து பாடங்கேட்டு அதனளவில் நிற்றல்வேண்டும்.

4. ஆசிரியருக்கு வேண்டியவைகளை உதவிபுரிந்து அவரை ஆதரித்துவரல் வேண்டும்.

5. கற்றவைகளை மேலும் மேலும் விருத்திசெய்து ஆசிரியர் பெயரை எங்கும் புகழ்பெறச் செய்யல் வேண்டும்.

இவ்வைந்துங் குடும்பிமக்கள் ஆசிரியருக்குச் செய்யும் ஒழுக்கங்களும் செயல்களுமாகும்.

குடிம்பியே மனையாளன் தனது மனைவியை நடத்திவரவேண்டிய ஒழுக்கங்கள் ஐந்துவகைப்படும். அவையாவன –

1. மனையாளன் தன்மனைவியை உள்ளன்பினாலும், அரைவணைப்பினாலும் ஆதரிப்பதுடன் பெண்ணென்னும் உருவே பேதமெயென்றுணர்ந்து கற்பினிலையில் நிற்கக்கூடியவழியில் நடாத்திவரல் வேண்டும்.

2. கற்பினிலையின் வழிகளைக்காட்டாது அவள் மனம்போனடம்பச் செயலில் விட்டு வீணே பழிகூறி அருவெறுக்கலாகாது.

3. இஸ்திரிகளுக்குத் தங்கட் கணவர்களே காவலாளிகளாதலின் மிருதுவான மொழியாலும், மேலான குணத்தாலும் பாதுகாத்தல் வேண்டும்.

4. குடும்பி சேகரிக்கும் பொருட்கள் யாவற்றிற்கும் குடித்தனக்காரியே பாதுகாப்புடையவளாதலின் சேகரிக்கும் பொருட்கள் யாவையும் அவளிடமளித்து அவற்றை சிதரவிடாமற் சேர்க்கவும், விருத்திச் செய்யவும் வேண்டிய விதிகளைக் கற்பித்துவரல்வேண்டும்.

5. குடும்பியானவன் தன்சம்பாத்தியத்திற்குத்தக்க ஆடையாபரணங்களை அளித்து வரவுக்குத் தக்க சிலவிலும் கிடைத்தவரையில் போதும் என்னும் திருப்தியிலும் இருக்கவேண்டிய இல்லற தன்மங்களை ஊட்டி பாதுகாக்க வேண்டும்.