பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

366 / அயோத்திதாசர் சிந்தனைகள்


1. எஜமானன் படுக்கையறைக்குச் சென்றப்பின் அவனுக்கு வேணபொருட்களை சேகரித்து வைத்துக்கொண்டு எஜமானன் எழுந்திருக்கும் முன் எழுந்து வேண பொருட்களை முடித்துவைத்தல் வேண்டும்.

2. எஜமானன் படுக்கையறைக்கு சென்றப்பின் ஏவலாளர் படுக்கைச் செல்லுவதுடன் எஜமானன் பொருட்கள் யாவும் கள்ளர் கைபடாவண்ணம் காப்பாற்றல் வேண்டும்.

3. எஜமானன் கொடுத்துள்ள வேலைகளை ஏவலாளர் அதி ஊக்கமாகவும், அதி ஜாக்கிரதையாகவுஞ்செய்து எஜமானன் மனதை திருப்த்தி செய்தல் வேண்டும்.

4. எஜமானனால் எந்தெந்த வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அந்தந்த வேலைகளை சரிவர முடிக்காமல் வேறுவேலைகளைத் தங்கள் மனம்போனவாறு தொடுத்து கெடுக்கலாகாது.

5. எஜமானன் சங்கதிகளையேனும், எஜமானன் வீட்டு சங்கதிகளையேனும் வெளியாருக்குத் தெரிவித்து வீண் கலகங்களுக்கேது செய்யாமல் எஜமானனை சிறப்பித்துவரல் வேண்டும்.

இவ்வைந்துவகை ஒழுக்கங்களே ஏவலாளர் எஜமானனுக்கு நடந்துக் கொள்ள வேண்டிய ஒழுக்கங்களாகும்.

குடும்பியே! குடும்பத்தோருள் சிரமணர்களாம் சமணமுனிவர்களையும் அவர்கள் தங்கியுள்ள வியாரங்களையும் பாதுகாத்து வருபவர்களை உபாசகர்களென்று கூறப்படும். அத்தகைய உபாசகர்கள் பிக்ஷூக்களென்னும் சமணமுனிவர்களிடம் நடந்துக்கொள்ளவேண்டிய ஒழுக்கங்கள் ஐந்து வகைப்படும்.

1. உபாசகர்கள் என்னும் அடியார்கள் சமணமுனிவர்களாம் ஞானகுருக்கள்பால் தங்கள் அன்பை காயமாகிய தேகத்தால் செலுத்தல் வேண்டும்.

2. உபாசகர்களாகிய வடியார்கள் தங்கள் ஞானகுருக்களாகிய சமண முனிவர்கள் பால் தங்கள் அன்பை ஈகை என்னுங் செயலால் செலுத்துதல் வேண்டும்.

3. உபாசகர்களாம் அடியார்கள் சமணமுனிவர்களாம் ஞானகுருக்கள் பால் தங்கள் அன்பை எண்ணமென்னுமனத்தால் செலுத்தல் வேண்டும்.

4. உபாசகர்களாகிய வடியார்கள் தங்கள் ஞானகுருக்களாம் சமண முனிவர்கள் மீது முழு அன்பு பாராட்டி அவர்கள் ஞானசாதனங்களுக்கு யாதாமோரிடையூறுமின்றி பாதுகாப்பதுடன் வேணபுசிப்புமளித்து ஆதரித்து வரல்வேண்டும்.

5. உபாசகர்களாம் அடியார்கள் சமணமுனிவர்களாம் ஞானகுருக்களுக்கு ஞானத்தை விருத்தி செய்யும் உபகாரிகளாகும் ஞானத்தந்தையர்களாதலின் அவர்களுக்கு யாதொரு கவலையும் அணுகவொண்ணாமல் கார்த்து ஞானசாதனத்தை முதிரும்படி செய்யல்வேண்டும்.

இத்தகைய ஐந்து ஒழுக்கங்களே ஞானகுருக்களுக்கு அடியார்கள் நடந்துக்கொள்ளவேண்டியவைகளாகும்.

குடும்பியே! பிக்க்ஷூக்களாம் சமண முனிவர்கள் உபாசகர்களாம் அடியார்களுக்குப் போதித்துவரும் ஒழுக்கங்கள் ஐந்துவகைப்படும்.

1. பிக்க்ஷூக்களாம் சமணமுனிவர்கள் உபாசகர்களாம் அடியார்களுக்கு பாபகன்மமீதென்றும், புண்ணியகன்மமீதென்றும், பாபகன்ம துற்பலன் ஈதென்றும், புண்ணியகன்ம நற்பலன் ஈதென்றும் விளக்கிபோதித்துவரல் வேண்டும்.

2. உபாசகர்களாம் அடியார்களை பாபிகள் கூட்டத்திற் சேரவிடாமலும், பொய்யர்கள் கூட்டத்தில் அணுகவிடாமலும் போதித்து நீதிநெறியமைந்த அன்பர்கள் பால் நெருங்கி இன்னும் அன்பைப் பெருக்கி வாழ்வடையும்படி போதித்தல் வேண்டும்.

3. உபாசகர்களாம் அடியார்கள் மறந்தும் துற்கருமத்தை நாடாது நற்கருமத்திலேயே நிலைக்கச்செய்யல்வேண்டும்.