பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 367


4. உபாசகர்களாம் அடியார்கள் முன்பு கேட்டிராத தன்மங்கள் யாவையும் ஊட்டி இதயத்திற் சேர்ந்துள்ள களங்கங்களென்னும் அழுக்குகளாம் காமவெகுளி மயக்கங்களை அகற்றும் போதகஞ்செய்யல் வேண்டும்.

5. உபாசகர்களாம் அடியார்கள் எவ்விதத்தும் இல்லறத் தொல்லைகளற்று துறவற விருப்பமுற்று சகலபற்றுக்களையும் அற்று சுகவாரிபெறும் சுருக்கத்தைப் போதித்துவரல் வேண்டும்.

ஆக இவ்வைந்தும் உபாசகர்களாம் அடியார்களுக்கு பிக்க்ஷூக்களாம் சமணமுனிவர்கள் போதிக்கும் தன்மபோதங்களாகும்.

சருவசீவதயாபரன் இவ்வரிய உபதேசத்தை முடித்தவுடன் குடும்பியாகிய சிகாளன் பின்வருமாறு கூறலாயினன்.

நடவரசே! தங்களது போதனை மிக்க கெம்பீரமானது. மறைந்திருந்த பொருளை விளக்கிய மாமறையோனே! திகைதப்பி மெலிந்து நிற்போர்க்கு வழிகாட்டிய தேசிகனே! இருட்டறையில் தீபமேற்றி உள்ள பொருளைத் தெள்ளறக் காட்டுவதுபோல் அஞ்ஞானவிருளை அகற்றி மெய்ஞ்ஞானமாம் மெய்ப்பொருளை விளக்கும் மாதவனே! உமதடைக்கலம், உமது தன்மத்தில் அடைக்கலம், உமது சங்கத்தில் அடைக்கலம் என்று கூறி மும்முறை சிரம்வணங்கி எழுந்து சங்கறநிறையோய், இவ்வடியோனையும் உமது சங்கத்திற் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்று இறைஞ்சினான்.

அவற்றை வினவிய அவலோகிதர் குடும்பியாகிய சிகாளனைநோக்கி அன்பனே! இன்னுஞ் சிலநாள் நீர் குடும்பத்தினின்று பாசபந்தப்பற்றுக்களின் வாசனைகளையுமகற்றி சங்கத்திற் சேர்ந்துக்கொள்ளுவீராயின் அலையற்ற கடல்போல் சுகவாரி என்னும் நிருவாணத்தைப் பெறுவீரென்று சொல்லிப் போய்விட்டார்.

20. மத்திம பதிபதா காதை

பகவான் சாவித்தி நகரம் ஜீதாவனத்தில் தங்கியுள்ளபோது பிக்க்ஷூ குழாங்களுக்கு போதித்த ஸாஸனமாவது:-

ஓ! சகோதிரர்களே! பேதைமெயிலிருந்து கன்மங்கள் அல்லது செய்கைகள் உண்டாகின்றன. செய்கைகளிலிருந்து உணர்வு உண்டாகின்றது. உணர்ச்சியிலிருந்து அருவுறு உண்டாகின்றது. அருவுருவிலிருந்து வாயில்கள் உண்டாகின்றது. வாயில்களிலிருந்து ஊறு உண்டாகின்றது. ஊறிலிருந்து நுகர்வு உண்டாகின்றது. நுகர்விலிருந்து வேட்கை உண்டாகின்றது. வேட்கையிலிருந்து பற்று உண்டாகின்றது. பற்றிலிருந்து கருமத்தொகுதி உண்டாகின்றது. கருமத்தொகுதியிலிருந்து பிறப்பு உண்டாகின்றது. பிறப்பிலிருந்து மூப்பும், மரணமும், வலியும், அழுகையும், துன்பமும், கவலையும், ஏக்கமுமாகிய இவைகள் உண்டாகின்றன. துக்கமென்கின்ற சகல ராச்சியத்திற்கும் இதுதான் உற்பத்தி.

அவிஜ்ஜி பஸ்ச்சா ஸங்கார
ஸங்காரா " விஜ்ஞானா
விஜ்ஞானா " நாமரூபா
நாமரூபா " ஸலாயதன
ஸலாயதனா " பஸ்ஸோ
பஸ்ஸோ " வேதனா
வேதனா " தன்ஹா
தன்ஹா " உபாதானா
உபாதானா " பவோ
பவோ " ஜாட்தி
ஜாட்தி " ஜெயா மரணா;

ஸோகா, பரிதேவா; துக்கா, தோம்னாஸா; உபாயஸா, சாம்பாந்தே.

ஓ! சகோதிரர்களே! அவித்தை பேதைமெயை முற்றுந்துறப்பதால் செய்கைகள் போக்கப்படுகின்றது. செய்கைகளைப் போக்குவதனால் உணர்ச்சி போக்கப்படுகின்றன. உணர்ச்சியைப் போக்குவதனால் அருவுரு போக்கப்படுகின்றன. அருவுருவைப் போக்குவதனால் வாயில் போக்கப்படுகின்றன. வாயில் போக்கப்படுவதனால் ஸ்பரிஸம் போக்கப்படுகின்றது.