பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 387


வானமானது யாதொரு பிரிதிபலனையுங்கருதாது பூமியில் பெய்து சகல சீவராசிகளையுந் தோற்றவைக்கின்றது.

பூமியும் யாதொரு பிரிதிபலனையுங் கருதாது சகல சீவராசிகளுக்கும் உணவீய்ந்து உயிர்ப்பிச்சை அளிக்கின்றது.

இவ்விரண்டின் செயலையுங் கண்ணுற்றுவரும் நீங்கள் உங்கள் இதயங்களிலும் மற்றவர்களின் பிரிதிபலனைக் கருதாது அன்பைப்பெருக்கி ஈகையையே இயல்பாகக் கொள்ளல் வேண்டும்.

அவ்வகை அன்பை ஆதாரமாகவும், ஈகையை இயல்பாகவுங் கொண்டு மேழிச்செய்வீரேல் உங்கள் பூமியும் பண்ணையூன்றி வானமுங்கோறிய காலத்திற் பெய்து பயிறுகளும் பெருகி தானிய விருத்தியும் உண்டாகும். குடிகளும் சுகமுற்று அரசாங்கமுஞ் சிறப்புற்று அகமகிழ்வதால் அறிவின் விருத்தியை நாடும் மகாஞானிகளும் விருத்திபெற்று தன்னையுணர்ந்து தற்பரமாகி நற்சீர்திருத்த விருத்தியால் சருவசீவர்களையுந் தன்னிற்றானே விருத்தியடையுஞ் செயல்களில் நிறுத்தி சுகம்பெறச் செய்வார்கள்.

அத்தகைய அன்பின் ஆதாரமும் ஈகையின் இயல்புமற்று மேழியைப் பற்றுவீர்களாயின் பூமியுமழுந்தா, வானமுஞ் சுறுங்கும், பயிறுங் கருகும், தானியமுங் குறையும், குடிகளும் க்ஷீணமடைவார்கள், கோனுங் குதூகலங் குறையும், ஞானிகளுந்தியங்குவர்.

இத்தகைய ஞானிகளின் திகைப்பினால் சருவ சீர்த்திருத்தங்களுங் குறைந்து தேசத்தின் சிறப்புங்கெட்டு பற்பல விஷபீடிதங்களால் பதிகுலைந்து போவீர்கள்.

இவ்வகையாய்ப் பதிவிட்டு மற்றோர் பதியடைந்து மதிகலங்குவது சுகந்தருமோ அன்றேல் இருந்தபதியிலிருந்து மதிகலங்காதவை சுகந்தருமோ என்றார்.

அதனை வினவிய பள்ளராம் வேளாளத் தொழிலாளர்கள் அறவாழி யானை வணங்கி ஐயனே இருந்தபதியிலிருந்து இதயசுகம் பெறுவதே இனிய தென்றார்கள்.

அன்பர்களே! நீங்கள் வாசஞ்செய்யும் வயலோ கிராமமென்னப்படும். கிராமமென்பதின் நிலையோ சகல தானியங்களையும் நிறப்பியுள்ளக் களஞ்சியம் என்னப்படும். அக்களஞ்சியமோ சருவசீவர்களுக்கும் உயிரளிக்கும் உயிர்ப் பென்னப்படும்.

அத்தகைய உயிர்ப்பிற்கு ஆதாரமாகும் உங்களுள்ளங்களில் அன்பையும், ஈகையையும் சதாநிறுத்தி பயிறிடும் வேளாளத் தொழிலை நடாத்துவீர்களாயின் சகல சீவராசிகளின் சுகங்களுக்கு ஆதாரமாவதுடன் நீங்களும் சுகித்து வாழ்வீர்களென்றோதி அவர்களைவிட்டு விலகி நெய்தநிலஞ்சார்ந்தார்.

அசோதரை நெஞ்சுவிடுதூது-மகா ராஜாதுறவு

தியர் பள்ளரார்ப்ப வெழுந்து-வயற்புடைசூ ழேறிகுணங்களெலாமுரைத்து நெய்தனிலஞ்,
சாரவெழுந்து தகும்பரவர் - நேரும்.

அருங்கலைச்செப்பு.- மருதப்பத்து

நஞ்சையுறநீர் நறுநெல்விளைகரும்பு, புஞ்செய் பலனாம்பனி
ஏறிநீரோட்டு மெழிலும் பலனுங், கூறிநின் றீய்ந்தான் குரு
ஆடும்பரப்பு மதன்பலனைக்காட்டும், வீடுஞ் சுகமதுவேயாம்
தென்னை கமுகு தெளிபலாபுன்னை, முன்னீர் விளைவாமுணர்
வேளாண்மெய்கொண்டு வினைஈகையாதல், மாளாமெய் ஆண்ட மனம்.

பின்கலை நிகண்டு

புரந்தரித்திடுதலாலே புரந்தரனென்னு நாமம்
வரந்தரும் பிண்டிவேந்தன் வாக்கிலிந்திரனே பெற்றா
னிருந்தவனாதிகால மியற்றிய திப்பாற் கேண்மின்
சரந்தநீர் வயல்களாலே சூழ்ந்தவூர் கிராமமாமே.

கடற்கரையோரமாய் நெய்த நிலத்தை அடுத்தபோது அங்குள்ள கரையோர்களாகும் பரவர்கள் யாவரும் பகவனை வந்து வணங்கி, ஐயனே நீவிர் யாவீர், வந்த காரணம் யாதென்று வினவினார்கள்.

அக்கால் அருகன் பரவர்களை நோக்கி உங்கள் தொழில் யாது போஷிப்பு எவ்வகை என்றார்.