பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இத்தியாதி கேடுகளும் ஆதி கடவுள் என்னும் மொழி வழுவி ஒரு கடவுள் என்னும் மொழிதழுவியக்கால் பொருளற்ற பலகடவுள் தோன்றிப் பாழாயின.

சிவஞானவிளக்கம்

கவ்வுண்டு நாசிமுனை காலால் கனலெழுப்பி
வவ்வுதனை யொவ்வாக் கமாட்டாமல் - தெய்வம்
ஒருவனே யென்பார் ஒன்று நூறாகித்
திரிவரே வீணே தினம்.

கடவுள் - தெய்வம் - யீசன் - பரன் - சிவன் எனத் தோன்றியப் பெயர்கள் ஒலிபற்றியப் பெயரா, செயல்பற்றியப் பெயரா, அதில் மக்கள் பெயரா, தெய்வப் பெயரா அங்ஙனந் தெய்வப் பெயராயின் அத்தெய்வங்கள் ஆகாயத்தினின்று தோன்றியவர்களா, மக்களினின்று தோன்றியவர்களா. அவற்றையும் விசாரித் துணர்வாரில்லை. கடவுளென்றும், தெய்வமென்றுந் தோன்றிய ஏழாவது தோற்றப் பெயர்கள் யாவும் ஆறாவது தோற்ற மக்களுள் பற்றற்றான் பற்றாகும் உண்மெய்ப் பற்றினின்று நாமரூபமென்னுந் துவிதமற்று தாய்வயிற்றினின்று பிறந்த பிறப்பற்று தானே தானே யத்துவிதமாய் மாற்றிப் பிறக்குஞ் செயல்பற்றியப் பிறப்பின் பெயர்களாம்.

பட்டினத்தார்

நீற்றைப்புனைந்தென்ன நீராடப்போயென்ன நீமனமே
மாற்றிப்பிறக்க வகையறிந்தாயில்லை மாமறை நூல்
யேற்றுக்கிடக்குது எழுகோடி மந்திர மென்னகண்டாய்
ஆற்றிற்கிடந்துந் துறைதெரியாம லலைகின்றயே.

இருபிறப்பாளர் என்னும் அந்தணநிலையடைந்த ஏழாவது தோற்ற சாந்த தேயுவகநிலை அடைந்தவர்களின் பெயரை ஏற்று ஒரு கடவுள் உண்டா ஒரு தெய்வம் இல்லையா என்று உசாவுங் கடாக்களுக்கு உரைமொழியின்றி ஆகாயப்பூ புதிதோ பழயதோ என்போனுக்கு மாற்ற முரைக்காததுபோல் மவுனமுரலே மற்றாகும்காரணஞ் சொன்னதைச் சொல்லுங் கிளிபோல் பேச்சிலாடுவதுங் சுவர்க்கோழிப் பாடும்போல் கூச்சற்போடுவதுமாகிய விசாரிணையற்ற மக்களுடன் வாதுகூறல் இருதிற சுகமற்றுப்போம்.

தாயுமானவர்

எனதென்பதும் பொய் யானெனல்பொய் யெல்லா மிறந்தவிடங்காட்டு
நினதென்பதும் பொய் நீயெனல் பொய் நிற்கு நிலைக்கே நேசித்தேன்
மனதென்பதுவோ வென்வசமாய் வாராதைய நின்னருளோ
தனதென்பதுக்கு மிடங்காணேன் தமியே னெவ்வா றுய்வேனே
விசாரிணையில் விவேக மிகுத்தோர் வாக்கை நோக்குவார்களாக.

- 1:26; டிசம்ப ர் 11, 1907 –

(இத்தொடர் கட்டுரையும் தொடர்ச்சியாக வராமலும், நிறைவு பெறாமலும் நின்று விட்டது)

5. ஆடிமாதத்தில் அம்மனை சிந்திக்கும் விவரம்
பின்கலை நிகண்டு

மரகதவல்லி பூக மர நிழலுற்ற வஞ்சி
பரம சுந்தரியியக்கி பகவதி அம்மை யெங்க
ளருகனை முடி தரித்தா ளம்பிகையறத்தின் செல்வி
தருமதேவதை பேரம்பா லிகையென்றுஞ் சாற்றலாமே.

ஆயிரத்தி ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு தென் பரதகண்டத்துள் புந்நாட்டை அரசாண்டவனும் சீவகன் தாய்மாமனுமாகிய சாக்கைய சுந்திரவாகு என்பவனுக்கு ஓர் பெண்குழந்தை பிறந்து அம்பிகாதேவி என்னும் பெயரிட்டனந்த சீராட்டி வளர்த்து வந்தார்கள். பெண்களின் பேதை பருவமாகும் ஏழுவயதுக்குள் இனிய அமுதென்னும் தமிழட்சரங்களையும் மொழிகளையும் ஊட்டி அறிவை வளரச் செய்யுங்கால் பெதும்பை வயதாகும் பதினோராம் ஆண்டில் நமது அருகனாகும் புத்தபிரான் செயலையும் அவர் குணாதிசயங் களையும் நாளுக்கு நாள் கேள்வியுற்று அவர் பதுமாசன முற்றிருந்ததைப்போல் ஓர் சிறியச் சிலைசெய்து அதை தன் முடியிற் கட்டிக் கொண்டு இடைவிடா நீதியின் சாதனங்களால் அவரை சிந்தித்துவந்தாள்.