பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 391


இத்தகைய உத்தமமங்களங்களில் நிலைத்த புருஷனை காமனுங் காலனும் அணுகான் உலகமக்களாலும் அவனை வெல்லமுடியாது சகலகீர்த்திப்பெற்ற பெரியோனாகியும், ஜாக்கிரதையில் நடப்பவனாகியும் இருப்பான். அவனே உலகத்தில் ஜெயசுபமங்களனாவான். என மங்களகரத்தை விளக்கியவுடன் அநாதபிந்தக வாச்சிரமவாசிகள் யாவருமெழுந்து மங்களநாதனைநோக்கி அவலோகிதா! உலகத்திற் தோன்றும் சிற்றின்பச்செயல்கள் யாவும் அவமங்களமென்றும், பேரின்பச்செயல்கள் யாவும் மங்களமென்றுந் தெரிந்துக் கொண்டோம், ஆனந்தநிலையை விண்டோம், சதா சுகங்கண்டோம். இத்தகைய சத்தியதன்மத்தை உணராது அசத்தியதன்மத்தில் நடப்பது அழிவுக்கேதுவென்று தெள்ளற தெளிந்தோம். இவற்றிற்கு யாது கைம்மாறு செய்வோமென வணங்கி நின்றார்கள்.

அவர்களன்பின் வாக்கையும் ஆனந்த நோக்கையுங்கண்ட அருகன் சமணீர்காள்! தங்களுக்குள் மங்களத்தை விரும்பும் அன்பர்கள் தங்களுள்ளத்துள் வஞ்சினம், சூது, குடிகெடுப்பு இவற்றை நிறப்பி வைத்துக்கொண்டு மங்களத்தை நோக்குதல் அவமங்களமேயாம். காமியம், பொறாமெய், கள்ளருந்தலாகியச் செயலினின்று மங்களத்தை நோக்குதல் அவமங்களமேயாம். விரோதசிந்தை, வீண்டம்பம், வெகுளியினின்று மங்களத்தை நோக்குதல் அவமங்களமேயாம். தற்புகழ்ச்சி, தானென்னும் அகம்பாவம், தன்னையறியாது நின்று மங்களத்தை நோக்குதல் அவமங்களமேயாம். தானே சுகிக்கவேண்டும் ஏனையோர் சுகிக்கலாகாதென்னும் எண்ணத்தையும், தானே பிரபுவாக வாழ்தல்வேண்டும் ஏனையோர் பிரபுவாக வாழலாகாதென்னும் எண்ணத்தையும், தானே தக்கவாடையாபரணங்களை அணைதல் வேண்டும் ஏனையோர் அணையலாகா தென்னும் எண்ணத்தையும், தானே சகலகலை பண்டிதனாக விளங்க வேண்டும் ஏனையோர் பாண்டித்தியம் அடையலாகாதென்னும் எண்ணத்தையும், இதயத்தில் நிறப்பிக்கொண்டு மங்களத்தை நோக்குதல் அவமங்களமேயாம்.

களவுச்செயல் மிகுத்தவனைக் கள்ளனென்றும், லோபச்செயல் மிகுத்தவனை லோபி என்றும் அழைப்பதுபோல் மங்களச் செயல் மிக்கோனை ஜெய மங்களனென்றும் அழைப்பார்கள்.

இத்தகைய மங்களமானது சுகச்செயலாலும், அன்பின் மிகுதியாலும் விளங்குமேயன்றி வாழைக்கமுகை நாட்டுவதாலும், வாத்தியகோஷங்களாலும் விளங்கமாட்டாது.

ஒருநாள் ஒருவன் வாயலில் மணப்பறை அடிக்கின்றான். அதே வாயலில் மறுநாள் பிணப்பறை அடிக்கின்றான். இவ்விரு சுபாசுபச்செயல்களில் எவற்றை மங்களமென்னலாம் எவற்றை அமங்களமென்னலாம். சுபம் அசுபமென்பதும், இறப்பு பிறப்பென்பதும், நித்திறை விழிப்பென்பதும், வேண்டுதல் வேண்டாம் என்பதுமாகிய துவித பாபங்களற்ற நிலையே நித்திய வாழ்க்கையாகும் ஜெயசுபமங்களமென்னப்படும்.

இத்தகைய மங்களத்தையே மணமெனக்கருதி மனக்களிம்பற்று மகாநிருவாணம் பெருகுகவென ஆசிகூறிப் போய்விட்டார்.

26. உபதேச காதை

புத்த பகவான் இராஜமாகிரஹத்திலுள்ள கழுகுமலை உச்சியில் தங்கியுள்ளபோது ஆனந்தனைநோக்கி யாவரும் ஒன்றுகூடுங்கள் என ஆக்கியாபித்தார்.

ஆனந்தன் பகவனது வாக்கை ஏற்று யாவரையும் வரவழைத்தபின் பிக்க்ஷு குழாங்களை நோக்கி போதிக்கத்தொடங்கினார்.

ஓ! சகோதிரர்களே! சகோதிரர்கள் ஒருபெருத்த கூட்டங்களில் சந்திக்கும்போது ஒன்றாக யாவரும் கூடி சந்தியுங்கள். உட்காரும்போது யாவரும் ஒன்றாக உட்காருங்கள். எழுந்திருக்கும்போது யாவரும் ஒன்றாக எழுந்திருங்கள். சங்க நிபந்தனைகளை நிறைவேற்றும்போது யாவரும் ஒன்றாக நிறைவேற்றுங்கள். தம்மசாஸனத்தில் கூறியுள்ள சத்தியங்களில் ஒன்றை