பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

406 / அயோத்திதாசர் சிந்தனைகள்


துறவுமடக்கமுந் தூய்மெயுந் தவமு
மறவினை யோம்பலு மறத்தினை மறுத்தலும்
மனையினீங்கிய முனைவர்தமறமே.

காஷாயந் தரிக்கவேண்டியவன்

லௌகீக உடைதரித்து குருபீடத்திற்குரிய காஷாய உடுப்புகளைக் கையிலேந்திக் கொண்டு தன் ஆசிரியனோடு மண்டபத்திற்குள் பிரவேசித்து பௌத்த பிக்க்ஷுவாம் திரிபிடகாச்சாரி பிரதான நாயகருக்கு முன்னால் நமஸ்கரித்து எழுந்து நின்று பின்வருமாறு சொல்லுவான்.

சிஷ்யன் : அடியேன் பெரியோர் முன்னிலையில் விண்ணப்பம்செய்ய அநுக்கிரஹம்புரியுங்கள். பெரியோரே, அடியேனைக் குருபீடத்தில் சேர்த்துக்கொள்ளப் பிரார்த்திக்கின்றேன். மறுபடியும் பெரியோரே, அடியேனைக் குருபீடத்தில் சேர்த்துக்கொள்ளப் பிரார்த்திக்கின்றேன். மற்றும் மூன்றாவது தடவை பெரியோரே, அடியேனைக் குருபீடத்தில் சேர்த்துக் கொள்ளப் பிரார்த்திக்கின்றேன்.

பெரியோரே அடியேன் பேரில் கிருபைவைத்து, அடியேன் சகல துக்கங்களினின்றும் விடுபட்டு, நிருவாணமாகிய பேரானந்த கதியை அடையும் பொருட்டு இக்காஷாயத்தை எடுத்துக்கொண்டு, அடியேனுக்கு உபதேசம் புரிந்தருளுங்கள். மூன்று தரம் சொல்லப்பட வேண்டும்.

குருநாயகன் : காஷாய உடுப்பைக் கையில் வாங்கிக்கொள்ளுகிறார்.

சிஷியன் : அடியேன்பேரில் கிருபைவைத்து அடியேன் சகல துக்கங்களினின்றும் விடுபட்டு நிருவாணமாகிய முத்திப் பதவியை அடையும் பொருட்டு அக்காஷாயத்தைக் கொடுத்தருளி அடியேனுக்கு உபதேசம் புரிந்தருளுங்கள். (மூன்றுதரம் சொல்லப்படவேண்டும்.)

குருநாயகன் : (காஷாயத்தைக்கொடுத்து) தேகத்தினது ரோமம், நகம், தந்தம், தோல், மாமிசம், நரம்பு, எலும்பு, எலும்பிலுள்ள ஊன், ஈரல், இருதயம் ஈரற்குலை, நுரைஈரலைச்சார்ந்திருக்குஞ் சவ்வு, மண்ணீரல், சுவாசாசயம், இரைப்பைக்கும் ஆசனத்திற்கும் இடையிலுள்ள குடல், மணிக்குடல், இரைக்குடல், மலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம், வியர்வை , நிணம், கண்ணீர், நிணநீர், உமிழ்நீர், சளி, வெண்நீர், மூத்திரம் என்கிற யாக்கை நிலையாமெயைக் குறிக்கின்ற தஸபஞ்சகத்தை உச்சரித்துக்கொண்டு மேற் சொல்லிய உடையிலுள்ள மஞ்சள் நூலை கழுத்தில் கட்டுவார். பிறகு சிஷ்யன் எழுந்து உடுத்திக்கொண்டிருந்த லௌகிக உடையைக்களைந்துவிட்டு காஷாயத்தை உடுத்திக்கொள்ள வெளிச்செல்லுவான்.

உடையை மாற்றிக்கொள்ளும்போது பின்வருமாறு சொல்லிக் கொள்வான். ஞானத்துடன் இவ்வுடையை அணிகிறேன். குளிர், வெப்பம், காற்று முதலியவற்றால் பீடிக்கப்படாமலும், கொசு, சர்ப்பம் முதலிய விஷ ஜந்துக்களால் ஹிம்சிக்கப் படாமலும், கேவலம் அம்மணமாயிராமலும் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டுமே அணிந்துக்கொள்ளுகிறேன். அதாவது அடியேன் உடைதரித்துக் கொள்வது ஆவசியமாயிருத்தல் பற்றியே அல்லது அழகுக்காகவன்று.

உடுத்திக்கொண்ட பிறகு தன்குருநாயகன் பக்கத்தில் வந்துநின்று பின்வருமாறு கூறுவான்.

அடியேன் பேச அருள்புரியுங்கள், அடியேனது துஷ்கிருத்தியங்களை எல்லாம் க்ஷமித்தருளுங்கள். அடியேனுக்கு உண்டான யோக்கியதையும் கௌரவமும் எல்லாம் குருவினது அநுக்கிரஹமேயன்றோ . அண்ணலே, அடியேன் ஈடேறுவதற்கு மும்மணிகளாம் மூன்று அடைக்கலங்களையும், பத்து சீலங்களையும் உபதேசித்தருளுங்கள்.

சிஷ்யன் : முழந்தாளிட்டு மறுபடியும் கேட்பான்.

மும்மணிகள்

புத்தங் சரணங் கச்சாமி, தம்மங் சரணங் கச்சாமி சங்கங் சரணங் கச்சாமி.
துத்யம்பி.- புத்தங் சரணங் கச்சாமி, தம்மங் சரணங் கச்சாமி சங்கங் சரணங் கச்சாமி.
தத்யம்பி.- புத்தங் சரணங் கச்சாமி, தம்மங் சரணங் கச்சாமி சங்கங் சரணங் கச்சாமி