பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 413


தூரவே விலகிநின்று சாந்தரூபத்தில் எவ்வகையால் அக்கினியை வளர்ப்போம், அன்பே ஓருருவாய ரூபத்தில் எவ்வகையால் அக்கினியை வளர்ப்போம், தருமமே ஓர் வடிவாய தேகத்தில் எவ்வகையால் அக்கினியை வளர்ப்போம், ஈகையே பேருருவாய ரூபத்தில் எவ்வகையால் அக்கினியை வளர்ப்போம் என்றும் பெருங்கூச்சலிட்டு அவற்றைக்கொளுத்துங் கொள்ளிக்குக் காரணர் அவரது ஏகபுத்திரர் இராகுலரே என்று சகல கூட்டத்தோருஞ் சம்மதித்து அவரது புத்திரரைக் கொண்டே தீ மூட்டிவிட்டார்கள்.

காசிக்கலம்பகம்

கேயூர மூரக்கிளர்தோளகிலேசர்
மாயூர மூருமொரு மைந்தற்குத்-தீயூரு
மவ்வேலையீந்தா ரடி தொழும்பு செய்தொழுகு
மிவ்வேலை யீய்ந்தா ரெமக்கு.

சித்தார்த்தரது தகனத்தின் மறுநாள் ஏழரசர்களும், சங்கத்தோர்களும் வந்துசேர்ந்தார்கள். சாக்கையர்களும், மல்லர்களும் அவ்விடமே கார்த்திருந்தும் சந்தனக்கட்டைகளை அதிகமாக அடுக்கி தகனித்தபடியால் அக்கினி தணியாமலிருந்தது. அரசர்களோ அவரது அஸ்தியையும் சாம்பலையும் கொண்டுபோய் பக்தி மாறாதிருப்பதற்காய கட்டிடங்களைக் கட்டி அவற்றுள் வைத்துக்கொள்ளவேண்டுமென்று ஆரம்பித்ததின்பேரில் அத்தணலை தண்ணீர்விட்டு அவிக்கப்படாது பால்விட்டவிக்கவேண்டுமென்னும் அன்பின் மிகுதியால் குடங்குடமாகப் பால் கொண்டுவந்தவித்து அஸ்திகளை எடுக்குங்கால் அரசர்களுக்குள் எமக்குமக்கென்னும் வாதுகள் பெருகி கலகத்திற்காயத்தமான போது சங்கத்து அறஹத்துக்களாம் அந்தணர்கள் தருமச்சக்கிரப் போதனை யூட்டி சாந்தத்தை நிறப்பி அரசர்களின் வாதுகளை அகற்றி அவர்கட் பிரியம் போல் அஸ்திகளையும், சாம்பலையும் எடுத்துப்போம்படி செய்துவிட்டார்கள்.

அரசர்கள் கொண்டுபோன அஸ்திகளை ஏழு இந்திரவியாரங்கள் கட்டி அதனதன் மத்தியில் புதைத்து அஸ்தியாம் அங்கலய அயிக்கியபீடம் தெரிந்துக் கொள்ளுவதற்காய் உயர்ந்த பச்சைக் கற்களாம் மரகதங்களாலும், வைரங்களாலும் குழவிபோல் செய்து அவ்விடம் புதைத்து அஸ்திவைத்துள்ள இடங்கண்டு அறவாழியானை பக்திசெய்யும் வழி தேடிக்கொண்டார்கள்.

அரசபுத்திரர்களாகிய கோபாலர்களோ சிறு சிறிய பேழைகளை செய்துவந்து குருவை தகனஞ்செய்த சாம்பலாம் மாபூதியை அவைகளிலடக்கஞ் செய்து வைத்துக்கொண்டு காலைக்கடனை முடித்து தேகசுத்தம் முடிந்தவுடன் சிறு பெட்டியிலுள்ள மாபூதியாம் சாம்பலை சற்குருவின் சிந்தனையும் தருமமும் மாறாதிருக்க புத்த, தன்ம, சங்கமென்னும் மூன்றையும் சிந்தித்து மூன்று கோடுகளாக நெற்றியில் பூசி அவ்விடம் மிகுந்துகிடந்த சந்தனக்கட்டைகளையும் எடுத்து அறஹத்துக்களாம் தென்புலத்தோர் உத்தரவின்படி உரைத்து புருவமத்தியில் பொட்டிட்டு புருஷோத்தமனை சிந்திக்கும்படி ஆரம்பித்துக் கொண்டார்கள். சாக்கையக் குடும்பத்தோர்களும் சித்தார்த்தரது ஏகசடையைக் கத்திரித்து இஸ்திரீகள் கூந்தலுடன் முடிந்துகொண்டதுடன் புருஷர்கள் வெள்ளியினாலும், பொன்னினாலுங் கூடுகள் செய்து அதனுள்ளடக்கி குருவின் சிந்தனை மாறாதிருக்க கழுத்தில் அணிந்துக் கொண்டார்கள்.

அஸ்தியைப் புதைத்த அங்கலய பீடமாம் லய அங்க பீடத்தையும் ஏகசடையாம் அங்க பாகத்தையும் இலிங்கமென வழங்கி குரு சிந்தனை மாறாது தன்மசிந்தனையில் லயித்திருந்தார்கள்.

சாக்கைய வம்மிஷவரிசையோர் சற்குருவை தகனஞ்செய்தவிடத்துள்ள மகாபூதியாம் சாம்பலின்மீது ஓர் இந்திரவியாரங்கட்டி மகாபூதியென்னுமோர் பெயரளித்தார்கள். மற்றும் நாதனை தகனஞ்செய்தவிடத்திற்கு ஜகந்நாத மென்னும் ஓர் பெயரையும் அளித்தார்கள். நாதனது அஸ்தியை அடக்கஞ்செய்த ஓர் தேசத்திற்கே அஸ்திநாதபுரமென்னும் ஓர் பெயரையும் அளித்தார்கள்.

அதே காசியம்பதியில் பகவன் ஆதியில் தன்மசங்கத்தை நாட்டி ஆதிவேதம் போதித்தவிடத்தில் பெரும் வியாரங்கட்டி பகவன் சின்முத்திரா ரூபத்தையும்,