பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/441

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 431

இருப்போர் தங்களையொத்த மனுக்களை மனுக்களென நேசியாமலும், தங்களையொத்த சீவராசிகளைக் காக்காமலும், அவர்கள் தாழ்ந்தசாதியார்கள் அவர்களைத் தலையெடுக்கவிடாமல் நசிக்கவேண்டுமென்றும், பசுக்களை நெருப்பிலிட்டு சுட்டுத்தின்ன வேண்டுமென்றும், சதாகியாபகத்திலிருப்பவர்களுக்கு கருணை என்பது இருக்குமோ, சிலகால் புலிக்கும், பாம்புக்கும், தேளுக்கு இருப்பதுபோல் தங்கள் பெண்டுபிள்ளைகள் மீதில் மட்டும் இருக்கலாம். இத்தகையக் கருணை அற்றோரை மக்கள் சிறப்புச்செய்வரோ, கற்றோர்களென மதிப்புறுவரோ, விவேக மிகுத்தவர்கள் எனக் கொண்டாடுவரோ, அக்கருணாகரக்கடவுளேனும் அருகில் சேர்ப்பரோ, ஒருகாலுஞ் சேர்க்கார், மூன்றுமுறை குளிக்கினுஞ் சேர்க்கார், நான்கு முறை ஜெபிக்கினுஞ் சேர்க்கார், ஏழுமுறைத் தொழுகினுஞ் சேர்க்கார். கருணையற்றோர் ஏதோ தங்கள் முயற்சியினால் கிஞ்சித்து சுகமுற்றுவாழினும் அவ்வஞ்சக் கூற்றே வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போலத் தங்களையும் தங்கள் உற்றாரையும் சீர்குலைக்கும் என்பது திண்ணம். ஆதலின் முயற்சியாற் சிறப்புறினும் தன்னை ஒத்த சிறப்பை ஏனையோரும் பெறவேண்டுமென்னும் நன்னோக்கங்கொண்டு தன்னைப்போலவே பிறரையும் நேசித்துக் கருணையைப் பெருக்குவார்களென்று நம்புகிறோம்.

- 6:20; அக்டோபர் 23, 1912 –

91. பௌத்தர்களின் அறிகுறி

பௌத்தர்கள் என்னும் புத்தசங்கமாம் தெய்வ சபையைச் சேர்ந்தவர்களை ஏனையோர்கள் அறிந்துகொள்ளும் அறிகுறிகள் யாதெனில்:–

ஒவ்வோர் பௌத்தர்களுந் தங்கள் படுக்கையை விட்டு உதயத்தில் எழுந்திருக்குங்கால் ஆனந்த எண்ணமுடன் “நமோ புத்தா” என்று எழுந்து அவர் ஓதியுள்ள நீதியையும் நெறியையும் சிந்தித்து வெளிவருவதே முதற் பூசையாகும்.

ஏன் அவரை சிந்தித்து எழுந்திருத்தல் வேண்டுமென்னில் அவர் நம்மெப்போல் ஒத்த மனிதனாகத் தோன்றி சருவசீவர்களின் ஈடேற்றத்தையும் சீர்திருத்தத்தையுங் கருதி தனது சக்கிரவர்த்தி பீட சுகத்தையுந் துறந்து மனைவி மகவின் பாசபந்தங்களையும் மறந்து தானடைந்த நித்தியகாட்சியை உலகமக்கள் யாவருங்கண்டு கடைத்தேறுமாறு வோடு எடுத்திரந்து தன்சுகம் பாராது ஏனையமக்கள் சுகத்தை நாடி நீதிநெறிகளைப்புகட்டி ஞானவழியில் நடத்தி அழியா சுகவாழ்க்கை அருளி சருவசீவர்களுக்குங் கருணாகரன் என்னும் நன்மெ சொரூபியாக விளங்கிய ஆதியங்கடவுளாதலின் துயிலெழுங் காலவரை முதலாவது சிந்தித்து எழ வேண்டுமென்பது அறிகுறியாம்.

இரண்டாவது, நம்மெ ஆண்டுவரும் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோரை சிந்தித்துப் போற்றுவது இரண்டாவது பூசையாகும்.

அவர்களை ஏன் போற்றி பூசிக்க வேண்டியதென்னில், அவர்களது நீதியும், நெறியும், கருணையு மிகுத்த வரசாட்சியில் சுகச்சீர் பெற்று வாழ்வதுடன் கள்ளர் பயம், காமியர் பயம், துஷ்டர் பயம், மிருக பயம், விஷவியாதி பயங்கள் யாவையும் அகற்றிக் காத்து ரட்சித்துவருவதினால் அவர்களைப்போற்றி விசுவாசிக்க வேண்டுமென்பது அறிகுறியாம்.

மூன்றாவது, தாய்தந்தையரைப்போற்றி வணங்கி ஆனந்திக்கச் செய்வதுமே மூன்றாம் பூசையாகும்.

அவர்களை ஏன் போற்றிவணங்க வேண்டுமென்னில் அவர்களே கருப்பிணியடைந் தீன்று அமுதூட்டி சீராட்டி தாராட்டி ஈ எறும்பு அணுகாது பாதுகாத்துப் போஷித்து கல்வி விருத்தி கைத்தொழில் விருத்திக்கு ஆளாக்கி உலகில் ஓர் மனிதன் மனுஷியென உலாவ வைத்துள்ளவர்களவர்களேயாதலின் தாய் தந்தையரை அன்புடன் போற்றி வணங்கி மனங்குளிரச்செய்து ஆனந்திக்க வேண்டுமென்பது அறிகுறியாம்.

இவ்வகையாக உலகரட்சகனை சிந்தித்தும், ஆளும் அரசரை விசுவாசித்தும், தாய் தந்தையரை நேசித்தும் வரும்படியான முக்கியச் செயலும் அடையாளமுமே