பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/445

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 435

பொருள் அதிகரித்தபோது அறிவு பெருத்தலே ஞானம் என்றும் வகுத்து வழங்கிவந்தார்கள். ஓர் கிரியையை சரிவரநடத்துவதால் யோகமாம் அதிர்ஷ்டமுண்டாகி அறிவு பெருகியகியானத்தினால் உலக சீர்திருத்தங்களுக்கு முதல்வனாகத் தோன்றுவதுடன் தனக்குள்ள துற்செயல் நற்செயல்களை ஆராய்ந்து துற்செயல்கள் யாவையுந் தனது கியானமாம் ஞானத்தால் அகற்றி நற்செயலாம் நன்மெயை கடைபிடித்து நிருவாண சுகம் பெறுவான் என்னும் கருத்தால் கிரியா சரியை யோக ஞானத்தை வழங்கி வந்தார்களன்றி இவர்களது சிருஷ்டியால் சாமிகளையுண்டுசெய்து சிலாலயங் கட்டி மதக்கடைபரப்பி அதனால் சீவிக்கும் அஞ்ஞான சோம்பேறிகளுக்கும் பெளத்தன்ம ஒழுக்க மொழிகளுக்கும் பொருள் பொருந்தவே பொருந்தாவாம். சரியை என்பது சிலாலயத்தைத் தொழுதலென்னும் பொருளைத்தருமா, கிரியை என்பது மந்திரஞ் செய்தலென்னும் பொருளைத் தருமா யோகம் என்பது மூச்சை அடக்குதல் என்னும் பொருளைத்தருமா, ஞானமென்பது வீடுபே றென்னும் பொருளைத் தருமாவெனத் தட்டிக்கேட்பாரில்லாமல் தங்கடங்கள் மதக்கடைகளைப் பரப்பித் தங்கள் தங்களுக்கான சீவன வழிகளைத் தேடிக்கொண்டார்கள். மற்றும் வேறில்லை யென்றறிவீராக.

- 6:30; சனவரி 1, 1913 –

96. நிதானம்! நிதானம்!! நிதானம்!!!

உலகத்தில் மநுமக்கள் செய்துவரும் தானங்களில் அன்னதானம், வஸ்திரதானம், கோதானம், பூதானம், சுவர்ணதானம் முதலிய முப்பத்திரண்டு தானங்களிலும் விசேஷித்தது நிதானமே பெரிதென்னப்படும். அதாவது, மனிதன் உண்பதிலும் நிதானம், உடுப்பதிலும் நிதானம், குளிப்பதிலும் நிதானம், சயனிப்பதிலும் நிதானம், பேசுவதிலும் நிதானம், நடப்பதிலும் நிதானம், ஈவதிலும் நிதானம், இரப்பதிலும் நிதானம், வித்தையிலும் நிதானம், விவசாயத்திலும் நிதானம், வியாபாரத்திலும் நிதானம், பணம் சம்பாதிப்பதிலும் நிதானம், பணத்தை செலவு செய்வதிலும் நிதானம், பெண்ணைக் கொள்ளுவதிலும் நிதானம், பெண்ணைக் கொடுப்பதிலும் நிதானம், பிள்ளைகளைப் புசிப்பூட்டுவதிலும் நிதானம், பிள்ளைகளை வளர்ப்பதிலும் நிதானம், பிள்ளைகளுக்கு வித்தியா விருத்தி செய்வதிலும் நிதானம், குடும்பவாழ்க்கைப்புரிவதினும் நிதானம், குடும்பத்தோருடன் கூடிவாழ்தலிலும் நிதானம், பெண்களுடன் வார்த்தையாடலிலும் நிதானம், பெரியோர்களிடம் சங்கைத்தெளிவதிலும் நிதானம், சரித்திரங்களையும் சாஸ்திரங்களையும் விசாரிப்பதிலும் நிதானம், சண்டை சச்சரவுகளைக்கண்டு ஒதுங்குவதிலும் நிதானம், ஞானாசிரியனை இன்னானென்று அறிந்து கொள்ளுவதிலும் நிதானம், ஞானசாதனம் புரிவதிலும் நிதானம், பஞ்சபாதகங்களை அகற்றுவதிலும் நிதானம், பற்றறுக்கும் வழிகளை அறிந்து நடப்பதிலும் நிதானம், மனமாசு களைக் கழுவுதலிலும் நிதானம், மனோலயம் அறிந்தடங்குதலிலும் நிதான முற்று ஒழுக்கத்திலும் சீலத்திலும் உயர்ந்தோர்மாட்டே உலகமென்பதாதலின் மக்களென்னுந் தோற்றத்தில் இத்தகைய நீதிமார்க்கத்தில் ஒழுகி மானியாகி மானிடனென்னும் பெயரைப் பெருகின்றான். அவ்வகை மானியாகிய மனிதன் தனது நிதானமற்று உலகவாழ்க்கைப் புரிவானாயின் மனிதனென்னும் பெயரற்று ஐந்தாவது தோற்றமாம் மிருகங்களுக் கொப்பாவாரென்றே கூறுவர். இத்தகைய மானியாகும் நிதானமறியாதோரும் மக்களினது தோற்றம் அறியாதோரும் மக்களென்னும் உருதோன்றியும் மிருகங்களுக்கு ஒப்பாய சீவகாருண்யம் இல்லாதோரும் ஞானக்கண் இல்லாதாயினும் ஊனக்கண்ணிருந்தும் தம்மெய்யொத்த மக்களை மக்களாகப் பாவிக்காதோரும், தங்களை உயர்ந்த சாதியோர் என்று உயர்த்திக்கொண்டு ஏனையோரைத் தாழ்ந்த சாதியென வகுத்துத் தலையெடுக்கவிடாமற் தாழ்த்தி வருகின்றார்கள். அத்தகையாகத் தாழ்த்தப் பட்டோர் உயருங்காலம் நெருங்கிவிட்டது. அக்கால் உயர்ந்தோர் கதி தானே தாழ்ந்து தலையெடுக்கவிடாதென்பது சத்தியம் சத்தியமேயாம்.

- 6:33; சனவரி 22, 1913 -