பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/457

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 447


இத்தகைய சத்தியதன்மமானது இந்திய தேசமெங்கும் நிறைந்திருந்த காலத்தில் மாதம் மும்மாரி பெய்யவும் பயிறுகள் ஓங்கவும் குடிகள் சிறக்கவும் கோனுயரவுமாயிருந்தவற்றிற்கு பூர்வ பௌத்த சரித்திரங்களும் பௌத்த மடங்களுமே போதுஞ் சான்றாகும். தற்காலம் தோன்றியுள்ள பிரிட்டிஷ் ராஜாங்கமானது பௌத்தன்ம அரசாட்சிக்கு மேலாகவே நின்று குடிகளை சீர்திருத்தும் வித்தை புத்திகளை யூட்டி தங்களைப்போல் சகல குடிகளும் சுகம்பெற்று வாழ்கவேண்டுமென்னுங் கருணையால் காத்து இரட்சித்தும் வருகின்றார்கள் இத்தகையாய நீதியும் நெறியுமமைந்த செங்கோலின் கீழ் வாழ்குங் குடிகளோ வஞ்சினமும் பொறாமெயும் பொய்யும் பொருளாசையிலும் நிறைந்து குரு விசுவாசமும் இராஜ விசுவாசமுங் குறைந்து ஒருவருக்கொருவர் சாதி வித்தியாசத்தால் சீறிச்சினந்து மதவித்தியாசங்களால் தங்களை மறந்து மடிந்து வருகின்றபடியால் நாளுக்குநாள் மழைகுன்றியும் ஏககாலத்திற் பெருகியும் மக்களை மடிப்பதுபோதாது பஞ்சமும் பெருவாரி நோய்களுந்தோன்றி கருணை தங்கிய ராஜாங்கத்தார் ஏதேது வழிவகைகளைத் தேடி காத்து வரினுங் குடிகள் சுகமின்றியே அல்லலடைந்து வருகின்றார்கள். இவற்றிற்குக் காரணமோ வென்னில் குடிகளுக்குக் கருணை என்பதும் அன்பு என்பதுமாயக் குணமே அற்றுள்ளபடியால் தவமிகுத்த ஞானிகளின் தோற்றமேயில்லாமற் போய் விட்டது. தபோபலமிகுத்த அறஹத்துக்களாம் அந்தணர்களில்லாமற் போய்விட்டபடியால் மழை குன்றிமாநிலந் தீய்ந்து வருகின்றதென்பது சத்தியம் சத்தியமேயாம்.

இத்தேசத்தில் அந்தணர்களென்னும் பிராமணர்களும் வேதாந்திகளும் வேதாந்திகளின் மடங்களும் அனந்தமாக இருக்கின்றபடியால் தவமிகுத்தோரு மிருப்பார்களென்று சிலர் படாடம்பங் கூறினுங் கூறுவர். அவர் கூற்று அவலமேயாம். தங்களுக்குத் தாங்களே அந்தணர்கள் பிராமணர்களென்று அப்பெயரைச் சொல்லிக்கொள்ளுங் கூட்டத்தோர் பெருந்தொகையினராயினும் வேஷ அந்தணர்கள் வேஷப்பிராமணர்களாவாரின்றி யாதார்த்த அந்தணராகார்கள். யதார்த்த பிராமணரொருவரிருப்பரேல் மழை குன்றாவாம். அது கொண்டே நமதறச் செல்வி அவ்வை "நல்லாரொருவருளரேல் அவர் பொருட்டெல்லார்க்கும் பெய்யுமழை” என்றுங் கூறியுள்ளாள். வேதாந்திகளும் வேதாந்திகளின் மடங்ளோவென்னில் தவபலமிகுத்தோர் பெயர்களாய அந்தணர் பிராமணர்கள் என்னும் பெயரை அதற்கு ஒவ்வாதவர்கள் யாவரும் பூண்டுள்ளதுபோல் தீவினை ஒழிக்கத் திடமில்லாதார் யாவரும் வேதாந்திகளென்னும் வெறு வேஷமிட்டு விதரணையற்றக் குடிகளை வஞ்சித்து வயிற்றை வளர்த்துவருகின்றார்களன்றி அவர்களும் யாதார்த்த வேதாந்திகளாகார்கள். அவர்கள் வசிக்குமிடங்களுக்கும் வேதாந்திகள் மடமென்னும் பெயர் பொருந்தாது. பொருந்தும் பெயர் யாதென்னிலோ கஞ்சாமடம், அவனென்ன சாதி இவனென்ன சாதியென வினவும் அஞ்ஞானிகள் வாசஞ்செய்யும் மடங்களே யாகும். யதார்த்த வேதாந்திகளுளரேல் கால மழை தவிராவாம் காலமழை வேண்டுவோர் யதார்த்த தபோபலத்தோரை நிலை நிருத்துவார்களென்று நம்புகிறோம்.

- 7:25; நவம்பர் 26, 1913 –

107. சுழிமுனை

வினா. இந்துக்களின் நவீன நூற்களுக்கு (காப்பு) உ என்னும் சுழி எழுத்தை தலப்பில் வரைந்துள்ளது. அதனந்தரார்த்தம் யாது, இலக்கணம் என்னை, எக்காலத்தில் எவரால் எழுதப்பட்டது?

ஆதிகாலமாம் ஆதிவேதமிருந்தக்காலத்து ஓலைச்சுவடிகளிலன்றோ சகலகலை நூற்களும் வரைந்துள்ளது. இவைகளை நவீனமாய் காகிதத்திலச்சடித்து ஒரு கட்டாய் கட்டி “காகிதம்” என்று பெயரிடாமல் புத்த அகமென்று பெயரிட்ட காரணம் யாது, இப்புத்தகமுண்டாவதற்குமுன் இப்பெயருண்டா? இல்லையா ஆதலால் யாரால் இப்பெயர் தரப்பட்டது?

கே. மீறையய்யா, கெமன்டயின் பர்மா