பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/469

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 459

நல்கூர்வேள்வியார் வெண்பாவிற்கு வேலூர் மார்க்கலிங்க பண்டாரமவர்கள் இயற்றியுள்ள கருத்துரையினாலுந் தெரிந்துக்கொள்ளலாம் என்று தன்னிடத்துள்ள திரிக்குறள் ஓலைப்பிரிதி ஒன்றையும் எமக்களித்துள்ளார்.

நல்கூர்வேள்வியார்

உப்பக்க நோக்கி யுபகேசிதோண் மணந்தா / னுத்தரமா மதுரக்கச்சென்ப - விப்பக்க
மாதானுபங்கி மறுவில் புலச்செந்நாப் / போதார் புனற்கூடற்கச்சு.

கருத்துரை : உத்தரமா மதுரைக் கச்சென்ப = வட மதுரைக் கச்சனென்னுமரசன், உப்பக்கநோக்கி = தன துள்விழிபார்வை தியான காலத்து, உபகேசி தோண்மணந்தான் = மனைவி உபகேசியென்பவளைச்சேர்ந்து, விப்பக்க = விட்டகுறையாமல், மாதானுபங்கி = உபகேசி கருப்பத்திற் கட்டுண்டு, மறுவில்புலச்செந்நாப் = உருவிற் செவ்விய நாவல்ல தெய்வப்புலவரென்று சகலராலு மதிக்கத்தக்க, புனற்கூடற்கச்சு = சாந்தநிலைக்கூடும் பாக்களை, போதார் = போதித்தார் வள்ளுவநாயனாரென்பதாம்.

தந்தை மதியல்லவோ அடண்ணே வந்தவிதிகள் எல்லாம் என்று மேதாவியர் கூறியுள்ள வாக்குக்கு ஆதாரமாய் தந்தையார் உள்விழிநோக்கின் மகத்துவக் காலத்துத் தோன்றிய மகவென்று விளக்குவான்வேண்டி நல்கூர்வேள்வியார் மேற்குறித்துள்ள வெண்பாவைக் கூறியிருக்கின்றார்.

தந்தைமதியா லுண்டாம் மைந்தன் செயலை நாயனாருந் தனது குறட்பாவில் முன்பே விளக்கியு மிருக்கின்றார்.

குறள்

மகன்றந்தைக்காற்று முதவியிவன் றந்தை / யென்னோற்றான் கொல்லெனுஞ்சொல்.

திருவள்ளுவநாயனார் சாக்கைய அரச வம்மிஷ வரிசையைச் சார்ந்தவர் என்பது வள்ளுவர் வம்மிஷ வாளியால் விளங்குவதுமன்றி அரசர்களாகவும், ஞானகுருக்களாகவும், கன்ம குருக்களாகவும், விளங்கியதை பௌத்த சரித்திரங்களினாலும் கலை நூற்களினாலும் திரிக்குறளின் சராம்சத்தினாலுந் தெரிந்துக்கொள்ளலாம்.

திருவள்ளுவநாயனார் தந்தை கச்சனென்னும் அரயன் வடமதுரையை ஆண்ட அனுபவம் கொண்டு நாளதுவரையில் அந்நாட்டை கச்சயம் என்றும், கச்சம் என்றும் வழங்கிவருகின்றார்கள்.

மணிமேகலை

கச்சயமாளுங் கழற்கால்வேந்தன் / றுச்சயனென்போ னொருவன்கொண்டன.

சிங்கள பௌத்தர்கள் வாசஞ்செய்யும் இலங்காதீவத்தைப் பறையர்கள் ஊர் என்று இராமாயணக்கீர்த்தனையில் பாடிவைத்துக் கொண்டது போல் சாக்கையர் அரசவம்மிஷத்தவரும் ஞானமிகுத்த பௌத்தபிராமணப் பரம்பரை யோருமாகிய திருவள்ளுவநாயனாரைப் பறைச்சிக்கும் பார்ப்பானுக்கும் பிறந்தார் என்னும் பெரும் பொய்க் கட்டுக்கதையை ஏன் இயற்றினார்கள் என்றும் அவற்றை எவ்வெவ்வகையாய் எவ்வெவ்வவரால் எவ்வெக்காலங்களில் வரைந்துள்ளாரென்றும் விளங்கக்கூறுவாம்.

2:3, சூலை 1, 1908

இத்தேசமெங்கும் வேஷப்பிராமணர்கள் விரிந்து விவேகமற்றவர்களால் சிறந்த பௌத்த அரசர்களையும், பெளத்த குருக்களையும், வேஷப் பிராமணர்களை மதியாத பௌத்தக்குடிகளையும் பறையர்களென்றுந் தாழ்ந்தசாதிகளென்றும் இழிவுகூறி கழுவிலுங் கற்காணங்களிலும் வதைத்துக் கொன்றதுமன்றி பௌத்த மடங்களையும் அபகரித்துக் கொண்டு பறைய ரென்னும் பெயரெங்கும் பரவவைத்து இழிவடையச் செய்தற்கு பலவகை ஜெந்துக்களுக்கும் இப்பெயரைக் கொடுத்து வழங்கிவரச் செய்தார்கள். ஈதன்றி அரிச்சந்திர புராணமென்னும் பொய்க்கதையும், நந்தன் சரித்திரமென்னும், பொய்க்கதையும், கபிலர் அகவலென்னும் பொய்க்கதையும் இயற்றி அவைகளாலும் இப்பறையனென்னும் பெயரைப் பரவச்செய்தார்கள்.