பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/472

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

422 / அயோத்திதாசர் சிந்தனைகள்

பெற்றானாம். அப்பெருஞ்சாகரன் திருவாரூர் புலைச்சியைச் சேர்ந்து பகவன் என்பவரைப் பெற்று அவர் வளர்ந்தப்பின்பு,

பிரம்ம வம்மிஷத்தில் தவமுனி என்பவர் அருண்மங்கை என்னும் பிராமணமாதைச் சேர்ந்து ஓர் புத்திரியைப் பெற்றுவைத்து விராலி மலைக்குத் தவஞ்செய்யப் போய்விட்டாராம். (தாய் எங்குபோனாளோ தெரியவில்லை.) அப்பெண்குழந்தையை உரையூர் பெரும்பறையன் கண்டெடுத்து வளர்த்து வருங்கால் அச்சேரியில் உள்ளோர் எல்லாம் மண்மாரியால் மடிந்து இப்பெண் ஒருத்தி மட்டிலும் பிழைத்து மேலூர் அகரத்தில் நீதியையன்வீட்டில் வளர்ந்து பகவன் என்பவருக்கும் ஆதி என்பவளுக்கும் நீதி ஐயன் ஐந்துநாளைய விவாகமும் மங்களஸ்நானமுஞ் செய்தபின்னர் வெளியேறி ஏழுபிள்ளைகளைப் பெற்றதாக விரித்துவிட்டார். நாயனார் தோன்றிய காரணத்தையும் எவ்வகையில் எழுதியிருக்கின்றார்கள் என்னில்,

இன்ன அரசன் காலம், கலியுலக இன்னவருட காலம் என்னும் யாதொரு காலமுமின்றி முதற்சங்கம், நடுச்சங்கம், கடைச்சங்கம் என்னும் நிலை யற்ற சங்கத்தோர் ஓர்காலத்தில் சிவனென்பவரை அவமதித்துவிட்டதாகவும் அந்த கோபத்தால் சங்கத்தை அழிக்கவேண்டி பிர்மாவை திருவள்ளுவராகவும், சரஸ்வதியை அவ்வையாகவும், விஷ்ணுவை இடைக்காடராகவும் பூமியில் அவதரிக்கச்செய்தாராம். அற்ப வித்வான்களை ஜெயிக்கலாகாத சிவன் அவதாரம் செய்யும் அதிகாரத்தை எவ்வகையில் நடத்தினரோ விளங்கவில்லை.

இப்பெரும் பொய்களுடன் விசாகப்பெருமாளையர் மூன்றாவது அச்சிட்டுள்ளத் திரிக்குறளில் நாயனார் வள்ளுவர் வீட்டில் வளர்ந்தாரென்று எழுதியிருக்கின்றார்.

ஆறாவது, முத்துவீரப்பிள்ளையும் வேதகிரி முதலியாரும் அச்சிட்டுள்ள திரிக்குறளில் நாயனார் வேளாளர் வீட்டில் வளர்ந்தாரென்றும் எழுதியிருக்கின்றார்கள்.

இத்தகையப் பொய்யிற்குப் பொய் பெரும் பொய்களை விரித்து அரசவம்மிஷ வரிசையோரும் பௌத்த பிராமண பரம்பரையோருமாகிய திருவள்ளுவநாயனாரை பறைச்சிக்கும் பாப்பானுக்கும் பிறந்தார் என்னும் ஓர் கட்டுக்கதையும், திருவாரூர் புலைச்சிமகன் பகவனுக்கும், பிராமணன் பிராமணத்தி மகள் ஆதிக்கும் திருவள்ளுவநாயனார் பிறந்தாரென்னும் மற்றோர் கட்டுக்கதையும் எழுதி பாழ்படுத்தி விட்டார்கள்.

இப்பாழும் பொய்க்கதைகள் யாவும் புத்தபிரான் சரித்திரமும் அவரது தன்மங்களும் மறைந்திருந்தவரையில் மெய்யாகவே நம்பி நாசமடைந்தார்கள்.

அவருடைய தன்மம் பரவியபோது பொய்யின்னதென்றும் மெய்யின்னதென்றும் விளங்கி இக்கட்டுக்கதையை ஒடிக்கி விளக்கியிருக்கின்றோம்.

நாயனார் பறைச்சிக்கும் பாப்பானுக்கும் பிறந்தார் என்னும் கதையை யாவரேனும் மெய்யென்று கூறி வெளிவருவரேல், திரிக்குறளை ஒவ்வொருவர் அச்சிட்டு வெளியிடுங்காலங்களில் புதுப்புது பொய்களைப் பெருக்கியிருப்பதையும் உம்பளநாட்டு சிலாசாசனங்களையும் கொண்டு இஃது பொய்க்கதை என்றே இன்னும் விளக்க எதிர்பார்த்திருக்கின்றோம்.

2:5, சூலை 15, 1908


2. நாவலர் பட்டமும் பரிசு திட்டமும்

உலகின்கண் மத்திய ஆசியாகண்டமென வழங்கும் மகத நாட்டில் ஒலிவடிவமாக வழங்கி வந்த மகடபாஷையாம் பாலியினிலையால் அவலோகிதராகும் புத்தபிரான் சகட பாஷையாம் சமஸ்கிருதத்தையும் திராவிடபாஷையாம் தமிழையும் உற்பத்திச்செய்து வரிவடிவாக்கி சகட பாஷையை பாணினியாருக்கும், திராவிட பாஷையை அகஸ்தியருக்கும் போதித்து எங்கும் பரவச்செய்த காலத்து வடநாட்டில் தமிழ்பாஷை கிஞ்சித்து பரவியிருப்பினும் பெரும்பாலும் தென்னாட்டில் அகஸ்தியரால் பரவிற்று.