பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/475

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 465

சீவகசிந்தாமணி

கொடுவெஞ் சிலைவாய்க்கணையிற் கொடிதாய் / நடுனாளிரவின்னவைதான் டிகுமா
னெடு வெண்ணிலவின் னிமிர்தேர்பரியா / தடுமாரெழினின்றறனேயருளே.

இதற்காதரவாய் அறனை மறவேலென்னும் வாசகமுமுண்டு. அறக் கடவுளின் செயலாகும் அஷ்டாங்கமார்க்கத்தை பற்றுவோர், பாசபந்த பற்றுக்கள் யாவையும் அறுத்தற்குப் பாதையதுவே ஆதலின் அறன் செயலாம் பற்றினை விரும்பு ஆசை கொள்ளும் என்றாள்.

திரிக்குறள்

பற்றுகபற்றற்றான் பற்றினை யப்பற்றை / பற்றுகபற்றுவிடற்கு

அறன், அறமென்னும் மொழிக்கு யீகையென்னும் பொருளை யேற்பதாயின் இல்லறம், துறவறம் நல்லறம் பொல்லறம், மெய்யறம், பொய்யறமாகும் இம்மொழிகளுக்கு எப்பொருள் பொருந்தும்.

செல்வப்பொருளுள்ளவனுக்கு யீகை என்னும் மொழி ஏற்குமேயன்றி, செல்வப்பொருள் இல்லாதவனுக்கு ஈகை என்னும் மொழி பொருந்தாவாம். ஆதலின் அறமென்னும் மொழி சகலருக்கும் பொருந்தும் சத்தியதன்ம மொழியேயாம்.

2. ஆறுவதுசினம்

ஆறுவது - தணியத்தகுவது, சினம் - கோபமேயாம்.

அறன் செயலென்னும் பற்றற்றான் பற்றை விரும்பக்கூறி, உடனே கோபாக்கினியை தணிக்கவேண்டுமென்று கூறியக் காரணம் யாதென்பீரேல் :-

சகல நற்கிருத்திய செயல்களையும் கெடுக்கக் கூடியவை சினமென்னும் கோபமேயாதலின் அறவாழியான் செயலை விரும்புவோர், அகக் கொதிப்பாகுங் கோபத்தை ஆற்றவேண்டும் என்று கூறியுள்ளாள்.

தன்னை சகல தீங்குகளினின்றும் தப்பித்துக் கொள்ள எண்ணமுடையவன் தன்னிடத்தெழும் கோபத்தைக் காக்கவேண்டும் என்பதாம்.

திரிக்குறள்

தன்னைத்தான்காக்கிற் சினங்காக்கக் காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.

பாம்பாட்டி சித்தர்

மனமென்னுங் குதிரையை வாகனமாக்கி / மதியெனுங் கடிவாளம் வாயிற்பூட்டி
சினமென்னுஞ் சீனிமேல் சீராயேறி / தெளிவுடன் சாரிவிட்டாடாய் பாம்பே.

அறப்பளீசுரசதகம்

கோபமே பாபங்களுக்கெலாந் தாய்தந்தை கோபமே குடி கெடுக்குங்
கோபமே யெவரையுங் கூடிவரவொட்டாது கோபமே துயர் கொடுக்குங்
கோபமே பொல்லாது கோபமே சீர்கேடு கோபமே யுரவறுக்குங்
கோபமே பழிசெயுங் கோபமே பகையாளி கோபமே கருணை போக்குங்
கோபமே யீனமாங் கோபமே யெவரையுங் கூடாம லொருவனாக்குங்
கோபமே மறலிமுன் கொண்டுபோய் தீய நரகக்குழியினிற் றள்ளுமால்
ஆபத்தெலாந்தவிர்த் தென்னையாட்கொண்டருளு மண்ணலெம தருமெய்மதவேள்
அனுதினமு மனதினினை தருசதுரகிரிவள ரறப்பளீ சுரதேவனே

வேமனசதகம்

கோபமுன்னநரக கூபமுஜெந்துனு / கோபமுன்னகுணமு கொஞ்சமகுனு
கோபமுன்னபிரதுகு கொஞ்சமைபோவுனு / விஸ்வதாபிராம வினரவேமா.


3. இயல்வது கரவேல்

இயல்வது - உன்னால் செய்யத்தகுவது ஆகிய வித்தையை, கரவேல் - ஒளியாதே.

உனது அறிவின் விருத்தியினாலும், கேள்வியினாலும், விடாமுயற்சியினாலும், இயல்பினாலும் உன்னால் தெரிந்துக் கொண்ட வித்தையை நீமட்டிலும் அனுபவித்து சுகியாமல் ஏனையோரும் அவ்வித்தையைக் கற்று சுகிக்கும் வழியைக் காட்டவேண்டுமென்பதாம்.