பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/484

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

474 / அயோத்திதாசர் சிந்தனைகள்

திரிக்குறள்

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தி / னல்லற் படுப்பதூஉமில்.

விவேகசிந்தாமணி

கற்பகத்தருவைச் சார்ந்த காகமு மமிர்த முண்ணும்
விற்பன விவேகமுள்ள வேந்தரைச் சேர்ந்தோர்வாழ்வார்
இப்புவிதன்னி லென்று மிலவுகாததிடு கிள்ளைப்போல்
அற்பரைச் சேர்ந்தோர்வாழ்வதரிதரி தாகுமம்மா

20. தந்தைதாய்ப்பேண்

தந்தை - தகப்பனையும், தாய் - அன்னையையும், பேண் - பாதுகாப்பாயென்பதாம்.

நாம் மதலைப்பருவத்திலிருக்குங்கால் பசியறிந்து அமுதூட்டியும் ஈ, எறும்பணுகாது பாதுகாத்தும் அன்னம் ஊட்டியும், வித்தியா விருத்தி காட்டியும் சீர்பெறச் செய்தவர்களாதலின் அவர்கள் உபகாரத்தை என்றும் மறவாது யாதாமோர் தொழில் செய்வதற்கு ஏதுவின்றி தடியூன்றி தள்ளாடி கண் பஞ்சடைந்து பாலுங்கடைவாய்ப்பட்டு மூப்புதானமுற்றக்கால் அவர்களுக்கு வேணமுதூட்டி யாதோர் குறைவுமின்றி அதியன்பு பாராட்டி பாதுகாத்தல் வேண்டும். அத்தகைய பாதுகாத்த பிற்பலன் தன் மக்களாற் தானனுபவித்தல் கூடும். தன் மக்களைத் தான்மிக்க அன்புடன் காப்பாற்றுவது போல் தன்னையும் தன் தாய் தந்தையர் காப்பாற்றியிருப்பார்களென்று உணர்ந்து அவர்கள் மூப்புக் காலத்தில் யாதொரு கவலையும் அணுகவிடாமல் போஷிக்க வேண்டுமென்பது கருத்து.

அறநெறிதீபம்

அன்னைபிதா சுற்றத்தை அன்புமிகக் காப்பதுவும்
பின்னமறப் பெற்றோரை பிழையணுகா தோம்புதலும்
தன்மகவுந் தானுமிகு சன்மன்மா வாழ்க்கை பெறுங்
கன்மமதாம்நற்கரும காட்சியதன்பயனாகும்.

21. நன்றிமறவேல்

நன்றி - ஒருவர் செய்த நல்லுதவியை, மறவேல் - என்றும் மறவாதே யென்பதாம்.

சகலராலும் இஃது நல்லுதவி, நற்போதம், நல்லீகை என்று கூறும் நன்றியென்னும் செயலால் சுகம்பெற்றும், அச்சுகத்தை அளித்தோன் செயலை மறப்பதாயின், மறுச்சுகமடைவதற்கும் அவனிடம் செல்லுவதற்கும் சங்கை, முன்செய்த நன்றியாம் உதவியை மறந்தவனாச்சுதே மறுபடியும் இவனுக்கு உதவிபுரியப்போமோ என்று மறைவான்.

ஆதலின் மக்கள் மற்றொருவர் செய்த தீங்குகளை மனதில் தங்கவிடாமல் நீக்கிவிடவேண்டியது. ஏனென்பீரேல், அத்தீங்காகிய எண்ணங்கள் உள்ளத்தில் பதிந்து மற்றவர்களுக்கும் தீங்குகளிழைத்து தாங்களும் தீங்குகளுக் குள்ளாகி மாறா துக்கத்தை அனுபவிப்பார்கள்.

அதுபோல் ஒருவர்செய்த உதவியை உள்ளத்திலூன்றி செய் நன்றியை மறவாதிருத்தலால் அந்நன்றியே ஏனையோருக்கு நன்னன்றியருளி உள்ளக் களங்கம் நீங்கி சதானந்தத்தை அனுபவிப்பார்களென்பது கருத்து.

திரிக்குறள்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல / தன்றேமறப்பது நன்று.

அறப்பளீசுரசதகம்

செய்நன்றி மறவாதபேர்களு மொருவர்செய் தீமெயை மறந்தபேரும்
திரவியந்தரவரினி மொருவர்மனையாட்டிமேல் சித்தம் வையாதபேரும்
கைகண்டெடுத்த பொருள் கொண்டுபோய்பொருளாளர் கையிற் கொடுத்தபேரும்
காசியினி லொருவர்செய் தருமங்கெடாதபடி காத்தருள் செய்கின்றபேரும்
பொய்யொன்று நிதிகோடி வரினும் வழக்கழிவு புகலாத நிலைகொள்பேரும்
புவிமீது தலைபோகு மென்னினுங்கனவிலும் பொய்யை யுரையாதபேரும்
ஐயவிங் கிவரெலாஞ் சத்புருஷரென்றுலகி லகமகிழ்வ ரருமெய்மதவேள்
அநுதினமு மனதினினை தருசதுரகிரிவள் ரறப்பளீசுரதேவனே