பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/499

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 489

58. துன்பத்திற் கிடங்கொடேல்

துன்பத்திற்கு - உபத்திரவமுண்டாவதற்காய, இடம் - ஆதரவை, கொடேல் - நீ எக்காலுங் கொடாதே யென்பதாம்.

அதாவது, சூதாட்டத்திற்கு இடங்கொடுத்தலுந் துன்பம், கொலைபாதகனுக்கு இடங்கொடுத்தலுந் துன்பம், கள்ளருந்துங் களியாட்டலுக்கு இடங்கொடுத்தலுந் துன்பம், வியபசாரிகளுக்கு வீடு கொடுத்துவைத்தலுந் துன்பம், பொய்யைச்சொல்லித் திரிபவனென்றுணர்ந்தும் அவனுக்கிடங்கொடுத்தலுந் துன்பம்,

சூதாட்டம், கட்குடி, வியபசாரம், திருட்டு, பொய், கொலை முதலிய ஈனச்செயலை உடையார்க்கு இடங்கொடுத்தல் கேடுண்டென்பதை உலக வழக்கப் பழமொழியால் ஈனனுக்கு இடம் கொடுத்தால் இல்லிடம் பாழென்பதையுந் தெரிந்துக்கொள்ளலாம்.

ஈனச்செயலை உடையார்க்கு இல்லிடங்கொடுப்பின் அதிகாரிகளால் அவர்களுக்குந் துன்பம், இல்லங்கொடுப்பவனுக்குந் துன்பம் உண்டாவது நிட்சயமாதலின் துன்பத்தை உண்டு செய்யுஞ் செயலுக்கு யிடங்கொடேலென்று வற்புறுத்தியுள்ளாள்.

காக்கை பாடியம்

வானவர்க் கரசன் வாய்மெ யுணர்ந்து / யீனச்செயலுக் கிடந்தரா தகற்றி
மோனவரம்பி லுற்று நிலைத்து / ஞானத்தானம் நல்குவரன்றே

59. தூக்கிவினைசெய்

தூக்கி - சீர்தூக்கி, வினை - ஒவ்வோர் தொழிலையும், செய் - நீ செய்யக்கடவாய் என்பதாம்.

நீ செய்யப்படும் ஒவ்வோர் தொழிலையும் சீர்தூக்கி நிதானித்துச் செய்யவேண்டு மென்பதாம்.

குறுந்திரட்டு

ஆராய்ந்து செய்பவனே யறிவுள்ளோனாம் / அடக்கமறிந்தடைபவனே யருளுள்ளோனாம்
பூராயம் பேசுபவன் பொறியற்றோனாம் / பொய்கூறு நாவுடையோன் புழுவுற்றானாம்
பேராயக் கீர்த்தியது வேண்டுமென்போன் / புவனத்து பேடியெனப் போற்றுவோனாம்
தீராத வினைகடக்குந் தெப்பங்கொண்டு / திறைகடலைக் கடப்பவனே தீரனாமே.

60. தெய்வமிகழேல்

தெய்வம் - தேய்வகமாம் உள்ளொளி கண்டோரை, யிகழேல் - நீ தாழ்வ செய்யாதே என்பதாம்.

அதாவது, மக்களென்னும் ஆறாவது தோற்றத்திற்கு மேலாம், ஏழாவது தோற்றமென்னும் தெய்வமென்போனை, ஆறாவதுதோற்றமான மநுகுலத்தோன் இகழ்வானாயின், அக்கொடுமொழியால் உள்ளக் களிம்பாம் வஞ்சகமிகுத்து தாழ்ந்த பிறவிக்கேகி தவிப்பானென்பது கருத்து.

மநுமக்களுள் இராகத்துவேஷ மோகமென்னும் முக்குற்றங்களைக் கழற்றி பாசபந்தப் பற்றுக்களை அறுத்து நித்திய சீவனாம் நிருவாணம்பெற்று தேவனென்றும், தெய்வமென்றும் பெயர் பெற்றோனின் ஞானசாதன சிறப்பையும், அவனது பற்றற்ற முயற்சியையுங் கண்டு புகழ்ச்சி செய்வதைவிட்டு இகழ்ச்சி செய்வானாயின் அவனை மநுபிறவி என்னாது தாழ்ந்த மிருகபிறவி என்றே கூறத்தகும்.

மக்கள் தோற்றங் கடந்து தெய்வ தோற்றம் அடைதல்.

சீவகசிந்தாமணி

ஊன்சுவைத் துடம்புவீக்கி நரகத்திலுரை தனன்றோ
வூன்றினா துடம்புவாட்டி தேவார யுரைத நன்றோ
வூன்றியிவ் விரண்டினுள்ளு முறுதிநீயுரைத்திடென்ன
வூன்றினா தொழிந்துபுத்தே வாவதே யுறுதியென்றான்.

விவேகசிந்தாமணி

ஆசாரஞ்செய்வாராகி லறிவொடு புகழுமுண்டாம்
ஆசார நன்மெயானா லவனியிற் றேவராவர்