பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

496 / அயோத்திதாசர் சிந்தனைகள்


பற்களில் விஷப்பையைச் சேர்த்துவைத்துள்ள ஜெந்துக்களுடன் பழகுவதாயின் எக்காலத்திலேனும் ஓர்கால் அப்பையிலுள்ள விஷத்தை வெளியிடுதற்கு வழிதேடும். வழிதேடுங்காரணமோ அதன் மீறிய கோபமேயாம். அக்கோபத்தால் கடித்துவிடுத்த விஷமானது பழகியவன் தேகமுழுவதும் பரவி நஞ்சமைந்துவிடுவதுடன் நசிந்தும்போகின்றான். ஆதலின் நஞ்சுள்ள ஜெந்துக்களுடன் பழகலாகாதென்பது கருத்து.

78. பிழை படச் சொல்லேல்

பிழை - குற்றம், பட - உண்டாகச், சொல்லேல் - பகராதே யென்பதாம்.

அதாவது துஷ்டர்கள் தங்களுக்குள்ள வன்னெஞ்சங், குடிகெடுப்பு, பொறாமெய், நீச்சச்செயல் முதலிய நிறைந்துகொண்டு குற்றமற்றப் பெரியோர்களைக் கண்டவுடன் வெகுண்டு தங்களது நீச்சகுணச்செயலால் அவர்களைப் பிழைபடக்கூறுவது சுவாபமாகும்.

எவ்வகையிலென்பீரேல் மிலேச்சகுண மிகுத்தோர்களையும், நீச்சசெய லமைந்தோர்களையும் பெரியோர் நெருங்காமலும் தங்களிடம் நெருங்க விடாமலும் இருப்பது வழக்கமாகும்.

அத்தகைய விவேகமிகுத்தப் பெரியோர்செயலைக் காணும் அவிவேக மிகுத்த நீச்சர்கள் தங்கள் துஷ்டகுண மாறாது விவேகிகளை பழிகூறுதலும், பலவகையாய்ப் பழித்தலும் உடையவர்களாய் நிற்பர்.

அவ்வகைப் பெரியோர்களைப் பழித்தால் அவர்களுக்குண்டாகும் மனத்தாங்கலின் கொதிப்பே பழித்தவனையும், பழித்தோன் குடும்பத்தோரையும் பாழாக்கும் பழவினைத் தொடராதலின் குற்றமற்றப் பெரியோர்களைப் பழிக்கலாகாதென்பது கருத்து.

இதனந்தரார்த்தங் கண்ட ஞானத்தாய் பெரியோர்களைப் பிழைபடச் சொல்லேலென்று கூறியுள்ளாள்.

79. பீடு பெற நில்

பீடு - வல்லமெய், பெற - உண்டாகத்தக்க நிலையில், நில் - நிற்கக்கடவா யென்பதாம்.

தேகமானது தக்க வலுவுள்ளவரையில் யாதொரு தொழிலுக்கும், முயற்சிக்கும் அஞ்சாது எடுத்த காரியங்களை முடிப்பதற்கேது ஆவதன்றி பற்பல பிணிகளுந் தோன்றி உபத்திரவஞ் செய்யாவாம்.

பீடு குறைந்தக்கால் எடுக்கும் முயற்சிகளும் சோர்வடைவதன்றி தேகத்திற் பற்பலவியாதிகளும் தோன்றி உபத்திரவத்தை உண்டு செய்யும் ஆதலின் ஒவ்வோர் மக்களுந் தங்களது தனங்குறையினும், தானியங் குறையினும், தேகபிலங் குறையாது வாழ்தல் சுகநிலையாகும்.

சிற்றின்பப்பெருக்கத்தினால் தேகசுகத்தைக் குறைத்துக்கொள்ளுவதும், பணம் சேர்க்கும் விஷயத்தால் புசிப்பைக் குறைத்து தேக சக்தியைக் குறைத்துக் கொள்ளுவதும், அநுபவமறியா பொய் வேதாந்த வேஷத்தால் தேகசக்தியைக் குறைத்துக் கொள்ளுவதும், உள்ள வழக்கமாதலின் திரிகாலச் செயலு முணர்ந்த ஞானத்தாய் பொய் விரதங்களாலும் பொய் வேதாந்தத்தாலும் பொய் பொருளாசையாலும் புசிப்பை அகற்றி தேகத்தின் பீடுரையாது ஒடுக்கி பாழடைவார்களென்றுணர்ந்து பீடுபெற நில்லென்று கூறியுள்ளாள்.

80. புகழ்ந்தாரைப் போற்றிவாழ்

புகழ்ந்தாரை - மற்றவர்களால் புகழத்தக்க பெரியோர்களை, போற்றி - நீயுந்துதிசெய்து கொண்டாடி, வாழ் - வாழ்க்கடவா யென்பதாம்.

அதாவது வித்தையில் மிகுத்தப் பெரியோரென்றும், புத்தியில் மிகுத்த பெரியோரென்றும், ஈகையில் மிகுத்த பெரியோரென்றும், சன்மார்க்கத்தில் மிகுத்த பெரியோரென்றும் புகழ்ந்து அவர்களை போற்றி வாழ்வது ஒழுக்க மிகுத்த உலகத்தோர் சுவாபமாகும் அவற்றைக் கொண்டொழுகும் நீயும் அவ்விவேக மிகுத்த புருடர்களைப் போற்றி வாழக்கடவாயென்பதாம். அத்தகைய விவேக மிகுத்த மேன்மக்களாம் பெரியோர்களைப் போற்றி வாழ்தல்,