பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/512

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

502 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கைவல்லியம், மீளாகதி, நிருவாணம், பரகதி, சிவம், முத்தி, அமுதம் என வழங்கிவந்தார்கள், நாளதுவரையில் வழங்கியும்வருகின்றார்கள்.

பின்கலைநிகண்டு

கேடிலா விபவருக்கம் கேவலத்தோடு சித்தி / வீடு கைவல்லியமே மீளாதகதியே நூலோர்
பாடு நிர்வாணத்தோடு பரகதி சிவமே முத்தி / நீடு மீரைந்தும் மோட்சம் அமுதமும் நிகழ்த்தலாமே

மனுடன் வாணமென்னும் பற்றுள்ளவரையில் பிறவியிற் சுழன்று மாளாதுக்கத்தை யனுபவித்து வருவது இயல்பாம். மாறிமாறி பிறந்து கொண்டேவரும் துக்கத்தை ஒழிக்க வேண்டியவன் நிருவாணமென்னும் பற்றற்ற நிலையடைவானாயின் மாளா பிறவியு மற்று பிறப்பினால் உண்டாகுந் துக்கமுமற்று வீடென்னும் அழியாநிலை அடைகின்றான்.

அவனே உலக பாசபந்த இளமெய் முதுமெய்யாம் முத்தினோன், மோக்கமுற்றோன், நிருவாணமடைந்தோனென்று கூறப்படுவான். மரண மென்னும் நித்திரையை ஜெயித்தானென்றுங் காலகாலனென்றுங் கூறப்படும்.

(இரண்டு வரிகள் தெளிவில்லை )

ஔவை குறள்

(தெளிவில்லை )

சீவகசிந்தாமணி

மாதவன் சரிதமுந் துறந்த வண்ணமு / மேதமின் றியம்பு மினடிகளோவென்ப
போதலர் புனைமுடி யிறைஞ்சியேத்தினான் / காதலிற் கணந்தொழக் காவன் மன்னனே

வேறு

இன்பமற்றென்னும் பேரானெழுந்த புறகற்றை தீற்றித்
துன்பத்தை சுரக்கு நான்கு கதியெனும் பதியறுத்து
நின்ற பற்றார்வ நீக்கி நிருமலன் பாதஞ்சேரி
னன்புவிற் றுண்டு போகிச் சிவகதி யடையலாமே.

102. உத்தமனாயிரு

உத்தமனாக - உன்னை சகலரும் நல்லவனென்று சொல்லத்தக்கதாக, இரு - நீவீற்றிருக்கக்கடவாயென்பதாம்.

மக்களுள் மத்திபனென்றும் உத்தமனென்றும், அதமனென்றும், வழங்க கூடிய நிலையில் அதமனையும், மத்திபனையும்நீக்கி உத்தமனையே உலகம் கொண்டாடுவது இயல்பாதலின் ஞானத்தாய் உத்தமனா யிருமென்று கூறியுள்ளாள்.

103. ஊருடன் கூடிவாழ்

ஊருடன் - மநுக்களாம் கிராமவாசிகளுடன், கூடி - சேர்ந்து, வாழ் - வாழக்கடவா யென்பதாம்.

அதாவது ஒருவருக்கொருவர் விலகி வாழ்க்கை புரிவதினால் ஆபத்துக்குதவாமல் அல்லலடைய நேரிடுமென்றறிந்த ஞானத்தாய் மக்களுள் ஒருவருக்கொருவர் உபகாரிகளாயிருக்கவேண்டுமென்ற கருத்தால் குடிகள் சேர்ந்து வாழ்க்கை பெற ஊருடன் கூடிவாழ் என்று கூறியுள்ளாள். மேன்மக்கள் வாக்குதவிராது சேர்ந்து வாழ்ந்து வந்த பௌத்த தன்ம அரசர்களும் குடிகளும் வாழ்ந்த இடங்களை சேரி, சேரி என்று வழங்கிவந்தார்கள்.

சீவகசிந்தாமணி

தேனுலா மதுசெய் தோதை தேம்புகை கமழ வூட்டி
வானுலா சுடர்கண்மூடி மானகரிரவு செய்யப்
பானிலா சொரிந்து நல்லா ரணிகலம் பகலைச் செய்ய
வேனிலான் விழைந்த சேரி மேலுலகனைய தொன்றே.

104. வெட்டெனப்பேசேல்

வெட்டென - மனந்துண்டிக்கத்தக்க கடினவார்த்தைகளை பேசேல் - மறந்தும் பேசாதே யென்பதாம்.

கடின வார்த்தைகளில் அனந்தக் கேடுண்டாவதை உணர்ந்த ஞானத்தாய் வெட்டெனப் பேசேலென்று விளக்கிக் கூறியுள்ளாள்.