பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/520

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

510 / அயோத்திதாசர் சிந்தனைகள்

17. கீழோராயினுந் தாழ வுரை

கீழோராயினும் - உம்மெ யடுத்து யாதாமொன்றைக் கேட்போர் யேழைகளாயினும், விவேகமற்றவர்களாயினும், தாழவுரை - மிருதுவாக்கியத்தா லவர்களுக்கு பதிலுரைக்கக்கடவா யென்பதாம்.

விவேகமிகுத்த மேலோர்களிடம் அவிவேகிகளாம் கீழோர் ஒன்றைநாடி சென்றக்கால் அவர்களை அன்புட னழைத்து வேண்டியவற்றை விசாரித்து உபசரித் தனுப்புவார்களாயின் அதன் சார்பால் அவிவேகிகளாகும் கீழோர்களுக்கும் ஓர் நற்கிரித்தியம் உதயமாமென்பது கருத்தாம்.

18. குற்றம் பார்க்கின் சுற்றமில்லை

குற்றம் பார்க்கின் - குடும்பமென்று கூடியவிடத்து தொடுத்த மொழி, எடுத்தச்செயல் யாவற்றிற்குங் குற்றங்கூறித் திரிவதாயின், சுற்றமில்லை - குடும்பத்தோரென்னும் பெயரில்லாமற்போம் என்பதாம்.

ஓர் குடும்ப விவகாரத்துள் சொல்லுக்குச்சொல் குற்றம் பிடித்தலும், செய்கைக்கெல்லாங் குற்றம் பிடித்தலுமாகிய கொறூரச் சிந்தையை விருத்தி செய்வதால் குடும்பமென்னும் பெயரற்றுப்போவதுடன் வாழ்க்கையுங் குன்றுமென்று உணர்ந்த ஞானத்தாய் குடும்பமென்னும் வாழ்க்கையில் எடுத்த செயலுக்கெல்லாங் குற்றம் பார்ப்பார்களாயின் சுற்றத்தோரென்னும் உரன்முறையோர் இல்லாமற்போய்விடுவார்களென்று கூறியுள்ளாள்.

19. கூரம்பாயினும் வீரியம் பேசேல்

கூரம்பாயினும் - உம்மிடத்துள்ள அம்பு மிக்கக் கூருள்ளதாயினும், வீரியம் - மிக்க வல்லமெயாகப், பேசேல் - பதங் கூறாதே யென்பதாம்.

அதாவது அம்பு கூரியதாயினும் வின்னாணி சோர்வுற்றுப்போம். வின்னாணி தளராநிற்பினும் மெய் சோர்வுற்றுப்போம். மெய்சோர்வுராது வல்லமெயுற்றிருப்பினும் காலக்கேடயரும் ஆதலின் காலபலம், தன்பலம், வில்லின்பலம், நாணின்பலம், எதிரியின்பலம் யாவையும் நோக்காதுதனது அம்பு கூரியதாயினும் அம்பைநம்பி வீரியம் பேசலாகாதென்பது கருத்து.

20. கெடுவதுசெய்யின் விடுவதுகருமம்

கெடுவது செய்யின் - செய்யுந் தொழிலில் கேடுண்டாமாயின், செயலை - அவ்வினையை, விடுவது - அவற்றுடன் விட்டுவிடுவதே, கருமம் - அழகாகும் என்பதாம்.

எடுத்துச் செய்யும் கருமத்தில் கேடுண்டாமென்று உணர்வாராயின் அக்கருமத்தைக் கருவிகளுடன் விட்டுவிடவேண்டுமென்பது கருத்தாம்.

தொடுத்த கருமத்தால் கேடுண்டென்று உணர்ந்தும் அதே கருமத்தை முடிக்க முயல்வானாயின் அவன் கெடுவதுடன் அவன் சந்ததியாரும் கெட்டு அவனை அடுத்த கருமிகளும் கருவிகளும் பாழடைந்து போமென்றுணர்ந்த ஞானத்தாய் கெடுதியுண்டாகுந் செயலை விடுவதே கருமமென்று கூறியுள்ளாள்.

21. கேட்டிலுறுதி கூட்டுங்குறைவை

கேட்டில் - தன சம்பத்தேனும், தானிய சம்பத்தேனுங் குறைந்து கெடினும், உறுதி - பொருள் போச்சுதே யென்றுள்ளங் கலங்காது திறத்தில் நிற்பானாயின், குறைவை - குறைந்தபொருள் யாவும், கூட்டும் - சேருமென்பதாம்.

மக்கள் சேர்த்துவரும் தானியம் குறைந்ததென்றும், தனங் குறைந்த தென்றும் கலங்காது முன்னவற்றை சேகரித்த முயற்சியிலிருப்பானாயின் குறைந்த வஸ்துக்கள் யாவும் நிறைந்து போமென்பது கருத்தாம்.

22. கைப்பொருடன்னின் மெய்ப்பொருட்கல்வி

கைப்பொருள் - ஒவ்வொருவர்க் கைகளால் ஆளும் தனப் பொருள், தானியப் பொருள், தன்னினும் - அதனினும், மெய்ப்பொருள் - அழியாப்பொருள் யாதென்பீரேல், கல்வி - அறிவை விருத்திபெறச் செய்யுங் கலை நூற்களே என்பதாம்.