பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/540

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

530 / அயோத்திதாசர் சிந்தனைகள்

12. குலமகட்கழகு கொழுனனைப் பேணுதல்

நற்குடும்பத்திற்பிறந்த பெண்களுக்கு அழகு யாதெனில், தன் கணவனையே கடவுளாகவும், காப்பவனாகவுங்கருதி அவனுக்கு நீராட்டலை அங்கசுத்தமாகவும், அன்னமூட்டுதலை அபிஷேகமாகவும், அவன் கால்கரங்களைப் பிடித்துப் பூசுதலே பூசையாகவும், அவன் உத்திரவளித்துள்ள வாக்கியங்களை மந்திரமென்றெண் எண்ணி நடத்தலே சிறப்பென்பது கருத்து.

13. விலைமகட் கழகு மேனிமினுக்குதல்

விலை கொடுத்து வாங்கும் அடிமைப் பெண்களுக்கு அழகு யாதெனில், எக்காலுந் தங்கள் தேகத்தை சுத்தத்தில் வைக்கவேண்டுமென்பது கருத்து.

14. அறிவோர்க் கழகு கற்றுணர்ந்தடங்கல்

அறிவுள்ளோரென்று கூறுதற்கு அழகு யாதெனில், தான் கற்ற கலை நூற்களுக்கு அளவாய் அடங்கி சகலருக்கும் உபகாரியாக விளங்குதல் அன்றேல் சகலராலும் நல்லவனென்று நன்கு மதிக்கப் பெறுதலே சிறப் பென்பது கருத்து.

15. வறியோர்க்கழகு வருமெயிற் செம்மெய்

ஏழைகளாகி மிக்க துக்கத்தை அநுபவிப்போர் நடந்துக்கொள்ள வேண்டிய அழகு யாதெனில், இந்த தேகம் மறைந்து மறுதேகம் எடுக்கினும் அதனிலேனும் சுகத்தை அனுபவிக்கும்படியாக எடுத்த தேகத்தின் துக்கத்தை மிக்கக் கருதாது நன்மார்க்கத்தில் நடத்தலே சிறப்பென்பது கருத்து. (அதனால்),

16. தேம்படு பனையின் றிரபழத்தொருவிதை

வானுறவோங்கி வளம்பெற வளரினும்
ஒருவர்க்கிருக்க நிழலாகாதே

ஆதலின் பனைவிதையானது மிக்கப் பருத்திருப்பினும் அதின் மரமானது ஒருவர் தங்கிநிற்பதற்கு நிழலிராதென்பது கருத்து.

17. தெள்ளியவாலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர்க்கயத்துச் சிறுமீ ன்சினையினும் நுண்ணியதாயினு
மண்ணல் யானை அணிதேர்ப்புரவி யாட்பெரும்படையோடு
மன்னர்க்கிருக்க நிழலாகும்மே.

ஆலமரத்தின் விதையானது மீன்சினைக்கொப்பாய சிறியதாயிருப் பினும் அதன் மரத்தின் நிழலோ இரத கஜ துரக பதாதிகளுடன் அரசனும் வந்து தங்குவதற்கு நிழலைத் தருமென்பது கருத்து.

(அதுபோல்),

18. சிறியோரெல்லாம் சிறியோரு மல்லர்

சிறுவயதாயிருப்பினும் அவர்களை சிறியவர்களென்று அவமதிக் கலாகாது. காரணம், விவேகத்தில் பெரியோர்களாயிருப்பார்கள்.

19. பெரியோரெல்லாம் பெரியோரு மல்லர்

வயதில் முதிர்ந்தோர்களாயிருப்பினும் அவர்களைப் பெரியோர்களென் றெண்ணப்படாது. காரணம், விவேகமற்றிருப்பார்கள்.

20. பெற்றோரெல்லாம் பிள்ளைக ளல்லர்

பெற்றப் பிள்ளைகள் யாவரையும் தன்னுடையப் பிள்ளைகளேயென்று நம்பப்படாது காரணம், தாய் தந்தையரைக் கவனியாத களியாட்டத்திலிருக்கும் பிள்ளைகளுமுண்டு.

21. உற்றோரெல்லா முறவின ரல்லர்

மிக்க உரியவர்களென்று சொல்லும் படியான குடும்பத்தோர் யாவரும் உறவினராகமாட்டார்கள் காரணம், உறவினர் உரிமெயாம் சுகதுக்கங்களைப் பொருந்தினிற்பர்.