பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/545

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 535

64. காலையும்மாலையும் நான்மறையோதா
அந்தணரென்போ ரனைவரும்பதரே

காலையிலும், மாலையிலும் நீதிநெறியமைந்த நல்வாய்மெய்களை ஓதியுணராது வேஷத்தினால் தங்களை அந்தணரென்று கூறித்திரியும் அனைவரும் பதருக்கொப்பாவர்.

65. தன்னையுந் தனது தேயமக்களையும்
முன்னின்றுகாரா மன்னனும்பதரே

தனது ராட்சியபார வாட்சியையும், தனக்குள் அடங்கிவாழுங் குடிகளையும் முன்பின் ஆராட்சியினின்று காப்பாற்றாத மன்னனும் பதருக்கொப்பாவான்.

66. முதலுளபண்டங்கொண்டு வாணிபஞ்செய்
ததன்பயனுண்ணா வணிகரும் பதரே

திரவியமுதலைக்கொடுத்து சரக்கை வாங்கிவந்து வியாபாரத்தைப் பெருக்கி அதன் பலனைப் பெறாது வியாபாரியெனத்தோன்றியும் வீணே யலைந்து திரிபவனும் பதருக்கொப்பாவான்.

67. ஆளாளடிமை யதிநிலமிருந்தும்
வேளாண்மெயில்லா வீணரும்பதரே

வேணபூமியும் ஆள் அடிமைகளுமிருந்து உழுது பயிர்செய்துண்ணும் புருஷவல்லபமற்றவனும் பதருக்கொப்பாவான். (அதுபோல்),

68. தன்மனையாளைத் தாய்மனைக்ககற்றி
பின்பவட்பாரா பேதையும் பதரே

தனது மனையாளை அவள் தாய்வீட்டிற்கு அநுப்பிவிட்டு மறுபடியும் அவளை அழைக்காமலும், அவளை கவனியாமலும் இருப்பவன் எவனோ அவனும் பதருக்கொப்பாவான்.

69. தன்மனையாளைத் தன்மனையிருத்தி
வுன்னியே யுணராவுலுத்தனும்பதரே

தனது மனையாளைத் தனதுவீட்டி லிருக்கச் செய்து அவளுக்கு அன்னமும் ஆடையுமளிக்காது வேறு சிந்தையால் உப்புத் தூண்போல் உளுத்துப்போவோனும் பதருக்கொப்பாவான்.

70. தன் ஆயுதத்தையும் தன்கைப்பொருளையும்
பிறர்கையிற்கொடுக்கும் பேதையும்பதரே

தனக்கென்றுள்ள ஆயுதத்தையும் தனது திரவியத்தையும் அன்னியன் கையிற்கொடுத்துவிட்டு விழிப்பவனும் பதருக்கொப்பாவான்.

71. வாய்பறையாகவும் நாக்கடிப்பாகவும்
சாற்றுவதொன்றை போற்றிக்கேண்மின்

நாவின் சொற்களையே மேளம்போற் பறைந்துக்கொண்டும் அச்சொற் களைக்கொண்டே சுட்டுத்திரியும் வகைகள் யாவற்றையும் எடுத்துரைக்கின்றேன் செவிசாயங்கோளென்று கூறலுற்றாள்.

72. பொய்யுடை யொருவன் சொல்வன்மெயினால்
மெய்போலும்மே மெய்போ லும்மே

பொய்யைச் சொல்லித்திரிவோன் அதைச் சொல்லும் வல்லபத்தினாலும், சாதுரியத்தினாலும் மெய்யைப்போற் கூறுகின்றான்.

73. மெய்யுடையொருவன் சொற்சோர்வதனால்
பொய்போலும்மே பொய்போலும்மே

மெய்யைச் சொல்லும் படியானவன் அவற்றை சொல்லும் வல்லபக்குறைவாலும் சொற்சோர்வினாலும் பொய்போல் திகைப்பன்.

(ஆதலினால்)