பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/554

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

544 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இதை அநுசரித்தே நாளது வரையில் சாதிபேதமற்ற திராவிடர்கள் தங்கள் அரசபீடங்களையும் பௌத்த மடங்களையும் இழந்துவிட்டபோதினும் அவர்களுக்குக் கருமத்தலைவர்களாயிருந்து சுபாசுப காரியங்களை நடத்தி வருகிறவர்களும் வள்ளுவர்களேயாகும்.

இத்தகைய வள்ளுவர், சாக்கையர், நிமித்தக ரென்னும் கருமத் தலைவர்களுக்குள் திருவள்ளுவ நாயனார் கருமத்தலைவர் வம்மிஷவரிசையிற் தோன்றிய கச்சனென்னும் அரசனுக்குப் பிறந்து புத்தசங்கஞ் சேர்ந்து முதநூலாம் திரிபிடகத்திற்கு வழி நூலாகும் திரிக்குறள் இயற்றியிருக்கின்றார். பாகுபலி நாயனார், மார்க்கலிங்க பண்டாரம் இவர்களின் கையேட்டுப் பிரதிகள்.

பின்கலை நிகண்டு

பூமலி யசோகி நீழற் / புனைந்தவெம் மடிகள்முன்னா
ளேமமா முதனூற்சொல்ல / வள்ளுவ ரியன்றபாவால்

தாமொரு வழிநூற்சொல்ல / சார்புநூற் பிறருஞ்சொல்ல
தோமிலா மூன்றுநூலுந் / துவமென வுதித்தவன்றே.

சார்பு நூற்களோ வென்னில் ஒளவையா ரியற்றியுள்ள திரிவாசகமும், திருமூலர் இயற்றியுள்ள திரிமந்திரமும், நீதி நூல் ஞான நூற்களென்பவை களுமேயாம்.

புத்தபிரானால் ஓதியுள்ள திரிபீட வாக்கியம், திரிபேதவாக்கியம், திரிமறைவாக்கியம், திரிசுருதி வாக்கியமென வழங்கும் முதநூலாதாரங் கொண்டே இந்திர தேசத்திலுள்ள சகல மதங்களுந் தோன்றியுள்ளபடியால் ஒவ்வொரு மதஸ்தரும் தமிழ் பாஷையில் வரைந்துள்ள வழிநூலாந் திரிக்குறளில் ஒவ்வோர் பாடல்களை எடுத்துக்கொண்டு திருவள்ளுவர் மதம் எங்கள் மதம் எங்கள் மதமெனத் தங்கள் மதங்களை சிறப்பித்துக்கொள்ளுவது இயல்பாம். திருவள்ளுவருக்கோ மதமென்பது கிடையாது. தங்கள் மதமே மதம், தங்கள் தேவனே தேவனென்று கூறி மதக்கடை பரப்பி சீவிப்பவர்கள் யாரோ அவர்களுக்கே மதம் என்பது சான்றாம். திரிபிடகத்தை புத்த தன்ம மென்றும், திரிக்குறளை திருவள்ளுவர்தன்மமென்றே கூறத்தகும்.

நமது பத்திரிகையில் வரைந்துவரும் பூர்வத்தமிழொளி முடிந்தவுடன் திருவள்ளுவ நாயனார் திரிக்குறளை வரையப்போகின்றோம். அக்கால் நூலாசிரியர் பிறப்பு வளர்ப்பும், நூலுக்கு முதலும், பத்துப் பாடலால் புத்தரை சிந்தித்திருக்கும் கடவுள் வாழ்த்தும், அவற்றிற் கூறியுள்ள இந்திரராம் புத்தரது மகத்துவமும், புத்தேளுலகின் சுகமும் தெள்ளறவிளங்கும்.

4:4, சூலை 6, 1910

12. தமிழினை இயற்றியவர்

வினா : நமது சுயபாஷையாகும் தமிழினை இயற்றினவர் சிவனெனக் கூறுகின்றார்களே அச்சிவன் எச்சரித்திர சார்பினர். இப்பாஷைக்குள் தமிழென்றும், திராவிடமென்றும் பெயருண்டாய காரணமென்னை.

வி. கோபாலன், சென்னை .

சிவனென்பதும், சிவகதி நாயகனென்பதும், சிவகதிக்கு இறைவ னென்பதும், சங்கறநிறையோன் என்பதும், காமதகனன் என்பதும், காலகாலன் என்பதும், புத்தபிரானுக்குரிய சகஸ்திர நாமங்களுள்ளடங்கியவைகளேயாகும். இவற்றுள் சித்தார்த்தித் திருமகன் நம்மெய்ப்போன்ற மநுட வடிவாகத் தோன்றி பெண்சாதி பிள்ளையுடன் சுகித்து தன் சாதன முயற்சியால் பொய்யை அகற்றி மெய்யை விளக்கி புத்தரென்றும் இராகத்துவேஷ மோகத்தை அகற்றி, பேரன்பின் சுகத்தைவிளக்கி சிவனென்றுங் காரணப் பெயர்களைப் பெற்றவர் புத்தபிரானேயாகும். சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழினையும், ஆதியாக வரிவடிவில் போதித்தவரும் புத்த பிரானேயாகும்.

இவ்விருபாஷைகளை இயற்றியதுகொண்டே அருங்கலை நாயக னென்றும், அருங்கலைவினோதனென்றும், மற்றும் பெயர்களை அளித்துள் ளார்கள்.