பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

572 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(க.)விவேகவிருத்தியால் வேண்டுமென்னும் விருப்பும், வேண்டா மென்னும் வெறுப்புமற்ற விண்ணவர்கோன் சீரடியாம் அறஹணடிகளைச் சார்ந்து அவர்கள் விசாரணையால் தங்களுக்குள்ள விருப்பு வெறுப்பற்ற துக்கநிவர்த்தியுண்டாகி எக்காலும் சுகநிலை அடைவார்களென்பது கருத்து.

(வி.) மக்களுள் வேண்டுமென்னும் அவாவே மிகுந்து வேண்டாமென்பது அற்று பாசபந்தமுற்று மாளாப்பிறவிபெற்று துக்கசாகரத்திற் சுழல்வது இயல்பாதலின் புத்தபிரான் அத்தகைய சுழலில் அகப்படாமலும், துக்கசாகரத்தில் அழுந்தாமலும், மாளாப்பிறவிக்கு ஏகாமலும்,பாசபந்தத்திற்சிக்காமலும் இஃது வேண்டும், அஃதை வேண்டாமென்று பற்றாமலும் என்றும் இடும்பை யற்று சதாசுகத்தில் நிலைத்ததன்றி தனது சங்கத்தோர்களாம் அடியார்களையும் தன்மயமென்னும் அறஹணவடிகளாக்கி என்றும் கெடா ஆனந்த சுகத்தில் விடுத்த அநுபவக்காட்சியால் விருப்பு, வெறுப்பற்ற சங்கமாம் அடிகளைச் சேர்ந்தவர்கள் இடும்பையென்னும் பலவகைத் துன்பங்களில் அழுந்தாது சுகநிலை பெறுவரென்னுந் துணிபுகொண்டு வழிநூலார் கூறியவற்றிற்குப் பகரமாக, மணிமேகலை ஆக்கியோன் வணிகசாத்தனார் சங்கத்திற் சேர்ந்த சமணமுநிவர்களில் சித்திபெற்ற சாரணர்களையே அடிகளென்பதற்கு, “நிலத்திற் குழித்து நெடுவிசும்பேறிச், சலத்திற்றிரியுமோர் சாரணன் தோன்ற, மன்னவனவனை வணங்கிமுன்சென் றென்னு யிரனையாளிங் கொளித்தாளுள், என்னளொருத்தியைக் காணிரோவடிகேள்” என்றும், மற்றும் புத்தரை தியானிக்குமிடத்து “மாரனை வெல்லும் வீரனின்னடி, தீநெறிக்கடும்பகை கடப்போய் நின்னடி, பிறற்கற முயலும் பெரியோர் நின்னடி, துறக்கம் வேண்டா தொல்லோய் நின்னடி, யென் பிறப்பொழிய விருந்தோய் நின்னடி, கண் பிறர்க்களிக்குங் கண்ணோய் நின்னடி, தீமொழிகடிந்த செவியோய் நின்னடி, வாய்மொழி சிறந்த நாவோய் நின்னடி, நரகர் துயர்கெட நடப்போய் நின்னடி, யுரகர் துயர் மொழிப்போய் நின்னடி, வணங்குதலல்லது வாழ்த்துதலென்னா” என்னும் அவரது அடிகளை சிந்தித்து அறவணவடிகளைச்சார்வோரே ஆனந்தவாழ்க்கைப் பெறுவரென்பதை வீரசோழிய உதாரணச்செய்யுள், "இருட்பாரவினை நீக்கி யெவ்வுயிர்க்குங் காவலென, வருட்பராந்தனி சுமந்தவன்று முதலின்றளவு, மதுவொன்றி மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும் பொதுவன்றிநினக்குரித்தோ புண்ணியனின் றிருமேனி" என்றும் அறநெறிச்சார ஆக்கியோன் முனைப்பாடியார், “குற்றங் குறைத்து குறைவின்றி மூவுலகில் நற்றமரைத்தாங்கருள் பரப்பி - முற்ற உணர்ந்தானைபாடாத நாவல்லவல்ல, சிறந்தான்றாள் சேராத்தலை", என்றும் கூறியுள்ள சார்புலோர் ஆதாரங்கொண்டே வேண்டுதல் வேண்டாமெயென்னும் வினையினீங்கிய இறைவனின் அடியைச்சார்ந்தோர் தங்களது வினையாம் இடும்பை நீங்கி எக்காலும் சுகவாழ்க்கைப் பெறுவார்கள் என்பது விரிவு.

5.இருள் சேரிருவினையுஞ் சேரா விறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

(ப.) இறைவன் - வேந்தனாம்புத்தரோதிய, பொருள் சேர் - மெய்ப் பொருளுணர்ந்து, புகழ்புரிந்தார்-சிறக்க பெற்றவர், மாட்டு இடத்து, இருள்சேர்- அஞ்ஞானத்தை விருத்தி செய்யும், இருவினையும்-இரண்டுவகை கன்மங்களும், சேரா- அணுகாவென்பது பதம்.

(பொ.) இறைவனாம் தருமராசனால் ஓதிவைத்த மெய்ப்பொருளை அடைந்து மேதினியிற் சிறந்தோரிடத்து வினைகளிரண்டும் அணுகாவென்பது பொழிப்பு.

(க.) இறைவரி கொள்ளும் அரசனாகத் தோன்றி துக்கநிவர்த்தி அறிவான் வேண்டி துறவு அடைந்து ஓதாமல் உணர்ந்து உண்மெயாம் மெய்ப் பொருளடைந்து இருவினயற்று சதாநிலையுற்று சகலமக்களுக்கும் ஓதிய பொருளையுணர்ந்து புகழ்பெற்றோரை இருவினைகளுஞ்சேராவென்பது கருத்து.