பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 581

சிறப்புறுவது இயல்பாம். அதாவது கடலினது உவர்நீரில் உப்பற்ற சுத்தநீரைத் துளிர்ப்பதாயின் பவழங்கொடி பரவுவதற்கும், சிப்பிமுத்து குழூஉவதற்கும், மட்சங்கள் ஆகாரம் பெறுவதற்கும் நீர்மெயாம் அத்தகைய சுத்தநீர் பெய்யாமல் போமாயின் நெடுங்கடலினது நீர்மெயாம் சீர்மெயுங் குன்றுமென்பது விரிவு.

நாயனாதிகாரர்காப்பியம்

வானமாலியுங் காய்வதேதெனப் புவிவதைப்ப
மானமாவுற வெஞ்சுடர் மாரியே படைகொண்
டூனமாக்கென வுச்சியி லம்பிடி பொழிந்து
தானமேகரை வாக்கினசரிவுநீர் தோற்றம்
பல்லுயிர்க் கொருதந்தையாம் பருதியவ்வுயிரைக்
கொல்லுகுத்தலைக் கூவெனந்தாயுளத் திரங்கிச்
செல்வியை திறைத்தெரிசன மறைக்கவும் காக்குக்
கல்வியின் முலைப்பால் சுரந்தளித்தெனக் காண்டும்

8.சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கு மீண்டு.

(ப.) வானம் - மழையானது, வறக்குமேல் - சுருங்குமாயின், வானோர்க்கு - மக்களுட் சிறந்த தேவர்களுக்கு, சிறப்போடு உற்சாகத்துடன், பூசனை - பூசித்த லாகியச் செயல்கள் யாவும், மீண்டும் - துணிந்தும், செல்லாது - நடவாது என்பது பதம்.

(பொ.) வானஞ் சுருங்குமாயின் தேவர்களைக் கொண்டாடும் பூசனையுஞ் சுருங்குமென்பது பொழிப்பு.

(க.) ஆறாவது தோற்றமாகிய மக்கள் ஏழாவது தோற்றமாகிய தேவர்களை உற்சாகஞ்செய்தலும் பூசித்தலுமாகிய சிறப்புகள்யாவும் மழைப்பெய்யாவிடின் நடவாவென்பது கருத்து.

(வி.) முட்டையில் பிறப்பும், வேர்வையில் பிறப்பும், விதையில் பிறப்பும், கருப்பையில் பிறப்புமாகிய நான்குவகை யோனியுள் எழுவகைத் தோற்றங்களை ஆராய்ந்தறிந்த சமணமுனிவர்கள், கருப்பைத் தோற்ற நரரிலிருந்து மக்களும், மக்களிலிருந்து நிருவாணம்பெற்ற தேவர்களுந் தோற்றுவதைத் தெள்ளற விளக்கியுள்ளார்கள். அவர்களது சிறப்பைக் கொண்டாடுவது இந்திரர்தேய மக்களின் இயல்பாம். அத்தகையோரைக் கொண்டாடும் இயல்பின் காரணமோ வென்னில் மக்களுக்குள்ள காமவெகுளி மயக்கங்களால் உண்டாம் பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசையாகிய மூன்றினது ஆசாபாசப் பற்றுக்களில் ஆழ்ந்து மாளாப்பிறவியில் தோய்ந்து துக்கத்தைப் பெருக்கிக் கொண்டே துன்பம் அடைவார்கள். காம வெகுளி மயக்கங்களால் உண்டாம் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசையால் உண்டாம் ஆசாபாசப் பற்றுக்களை அறுத்து மாளாப்பிறவியில் உண்டாம் பிணியினது துக்கம், மூப்பினது துக்கம், மரணத்தினது துக்கங்கள் யாவையும் அகற்றி நித்தியானந்த முற்று இரவு பகலற்ற நிருவாணம் பெற்று தேவர்களென்னும் ஏழாவது தோற்றமடைந்த பேரானந்த சிறப்பைக் கண்ணாறக் காணும் ஆறாவது தோற்ற மக்கள் அவர்களை சிறப்பிப்பதும், ஆனந்தங் கொண்டாடி பூசிப்பதும் இயல்பாம். அத்தகைய பூசிப்பும் சிறப்பும் மழையினது பெருக்கத்தால் உண்டாமேயன்றி மழை சுருங்குமாயின் இராதென்பது விரிவு.

9.தானந் தவமிரண்டுந் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனில்.

(ப.) வானம் - மழையானது, வழங்காதெனின் - பெய்யாமற்போமாயின், தானமும் - முப்பத்திரண்டு தானங்களும், தவமிரண்டும் - ஞானசாதனமுடன் இரண்டும் நடவாமல் போவதுடன், வியனுலகம் - தேவலோகமும், தங்கா - நிலையா என்பது பதம்.

(பொ.) வானினது ஈகை ஒன்று குறையுமாயின் மற்ற எச்சுகமும் நிலையா என்பது பொழிப்பு.

(க.) காலமழைச் சரிவறப் பெய்யாது காய்ந்துபோமாயின் நரரது நற்செயலால் மக்களாவதும், மக்களது ஈகையின் பெருக்கத்தால் தவமிகுதியாவதும்,