பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 583


(வி.) மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மூவாசைகளுமற்று நல்லொழுக்கத்து நிலைத்து தீவினை ஒழித்து உண்மெய் உணர்ந்து முநிவுறும் பெருமெய் உண்டாதற்குக் காரணம் புத்தாகமம் என்னும் பனுவலாம் ஆதிவேதம் என்பது கண்டு நீத்தாரது சிறப்பைக் கூறுமிடத்து நீத்தற்குக் காரணமாயுள்ள முதநூல் விசாரிணைத் துணிபை விளக்கியவற்றிற்குப் பகரமாக சார்பு நூலார் சூளாமணி ஆக்கியோன் தோலாமொழி தேவர் "ஆதிநாளரசர் தங்கலருங்குல அமைந்துமாக்கி, யோதநீருலகின் மிக்க ஒழுக்கமுந் தொழிலுந்தோற்றித், தீது தீர்ந்திருந்தபெம்மான் திருவடி சாரச்சென்று, நீதி நூற்றுலங்கக்காத்து நிலந்திருமலரநின்றான்" என்பவற்றுள் (பனுவல்) என்பது நூலின் பெயரென்பதை பின்கலைநிகண்டின் ஆக்கியோன் மண்டலபுருடன் "தந்துரைபுனைந்துரைத்தல் சார்ந்த பாயிரத்தினோடு, முந்திய பதிகமேநூன் முகமுக உரையுமப்பே, ரந்தமா மாகமத்தோடாரிடம் பிடகமற்றுந், தந்திரம் பனுவலோடு சமயஞ்சூத்திரமு நூற்பேர்” என்பதின் ஆதாரமே வேண்டும் பனுவலின் விரிவாம்.

2.துறந்தார்பெருமெ துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று.

(ப.) துறந்தார் - பற்றற்றவர்களின், பெருமெ - சிறப்பிற்கு, துணைக்கூறின் - உவமெய்க்கூறவேண்டின், வையத்து - பூமியின்கண், இறந்தாரை - மரணமடைந் தோரை, எண்ணிக்கொண்டற்று - இத்தனையோரெனக் கணக்கெடுப்பதற்கு ஒக்கும் என்பது பதம்.

(பொ.) பற்றற்ற மகாஞானிகளின் சிறப்பினைக் கூறப்புகுவது பற்றும் மிகுத்திறந்தவர்களை எண்ணிப்பார்ப்பதொக்கும் என்பது பொழிப்பு.

(க.) பூமியின் கண் தோன்றி தோன்றி இறந்தவர்களின் கணக்கைக் கண்டறியக் கூடாததைப்போல் துறந்த மகாஞானிகளின் சிறப்பை எடுத்துக் கூறுதலும் அரிதென்பது கருத்து.

(வி.) உலகத்தில் தோன்றி மறையும் மநுமக்களில் ஓர் குடும்பத்தில் பிறந்தபோதே இறத்தலும், பாலதானத்தில் இறத்தலும், குமரதானத்தில் இறத்தலும், மூப்புதானத்தில் இறத்தலுமாகியக் கணக்கைக் கண்டறிதலே மிக்க அரிதாயிருக்க பூமி எங்கணுந் தோன்றி தோன்றி இறந்தவர்களின் கணக்கைக் கண்டெடுப்பது இயலாததுபோல் உலக பாசபந்த பற்றுக்களினின்று துறந்த மகாஞானிகளது சிறப்பையும் அவர்களது மகத்துவத்தையும், அவர்களது நித்தியானந்தத்தையும், அவர்களது என்றும் அழியா நிலையையும் எடுத்துக்கூற இயலாது என்பவற்றிற்குப் பகரமாக சீவகசிந்தாமணி ஆக்கியோன் திருத்தக்கதேவர் "பற்றார் வஞ்செற்ற முதலாகப் பாம்புரிபோன், முற்றத்துறந்து முனிகளாயெல்லாரு, முற்றுயிர்க்குத்தீம்பால் சுரந்தோம்பியுள்ளத்து, மற்றிருள் சேரா மணி விளக்குவைத்தாரே” என்றும், வாசிஷ்டம் “சரமழைகணெய்தன் மலர்மழையை ஒக்குந் தழற்பள்ளி பனிநீரில் சயனம் ஒக்குஞ், சிரமறிதல் சுகமுறு நித்திறையை ஒக்குந் தெகமறிவது கலவைச் செறிப்பூச்சொக்கும், நிரவதிகநாராச மருமம்பாய்தநெடுங்கோடைச்சிவிரியினன் னீரை ஒக்கும், விரகரியவிடயமெனும் விடவிடூசி விவேக மிகுத்தவர்க்கலால் விலக்கொணாதே” என்றுஞ் சார்பு நூலோர் கூறிய விவேகமிகுத்தத் துறவோர் சிறப்பைக் கூறுதற்கு இயலா என்பது விரிவு.

3.இருமெ வகை தெரிந்தீண் டறம்பூண்டார்
பெருமெ பிறங்கிற் றுலகு.

(ப.) இருமெய் - யாக்கை இரண்டினுடையவும், வகைதெரிந்து கூறுபாடுகளை அறிந்து, யீண்டறம் - மீண்டுந் தன்மத்தைச்செய்ய, பூண்டார் - உறுதிகொண்டோரே, உலகு - பூமியின்கண், பிறங்கில் - மேலாய, பெருமெய் - சிறப்பு மெய்பெற்றார்களென்பது பதம்.

(பொ.) அந்தரங்கம் பயிரங்கமென்னும் இருவகை யாக்கையை உணர்ந்து சத்திய தன்மத்தில் நடப்போரே உலகத்தில் சிறந்தோர்களென்பது பொழிப்பு.