பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

588 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) உலகத்தில் தோன்றியுள்ள மநுக்களில் எத்தேச எப்பாஷைக் காரனாயிருப்பினும் தன்மத்தைப் பூர்த்திசெய்து தண்மெமிகுத்த சாந்த நிறைவால் சருவ உயிர்களுக்கும் தண்மெயுண்டாம் அன்புகொண்டு சங்கங்களை நாட்டி சத்தியதன்மத்தை ஊட்டி சதா சுகத்தில் நிலைக்கச்செய்யும் சாந்தரூபிகளையே அறவோர்களென்றும், அந்தணர்களென்றும் அழைக்கப் பெற்றதற்குச் சார்பாய் சீவகசிந்தாமணி ஆக்கியோன் திருத்தக்கதேவர் “திருமறுமார்பனை திலகமுக்குடையனை, யருமறை தாங்கிய வந்தணர் தாதையை, யருமறை தாங்கிய வந்தணர்தாதைநின், னெரிபுரைமரைமல ரிணையடிதொழுதும்" என்றும் சங்கத்து சமணமுநிவருள் தோன்றியுள்ள அந்தணர்கள் யாவருக்கும் தாதையாக விளங்கும் புத்தபிரானே ஆதி அந்தணரென்பது போன்ற விரிவாம்.

4. அறத்தினது வலிதென்னும் தன்மத்தின் சிறப்பு

அதாவது சாக்கைய முநிவரால் போதித்துள்ள அறத்தால் மெய்ப் பொருளும், மெய்ப்பொருளால் பேரின்பமும், பேரின்பத்தால் வீடுபேறும் உண்டாமென்பதினால் விளங்கும்.

1.சிறப்பீனுஞ் செல்வமுமீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு.

(ப.) உயிர்க்கு - மக்களுக்கு, சிறப்பீனும் - அழியாப் புகழைத் தருதற்கும், செல்வமுமீனும் - அழியாப்பொருளை பெறுதற்கும், அறத்தினூஉங் - தன்மத்தைவிட, ஆக்க - ஆதரிக்கக்கூடியவன், எவனோ - வேறெவனாயினு முளனோ வென்பது பதம்.

(பொ.) மக்களுக்கு அழியா சிறப்பைத் தருதற்கும், மெய்ப்பொருளை விளக்குதற்கும் ஆதாரமாயுள்ளது தன்மமேயன்றி வேறொருவனாலும் ஆகாதென்பது பொழிப்பு.

(க.) தன்னைத் தலைமெயாக்கிக் கொள்ளுவதற்கும், தன்னை அடிமையாக்கிக் கொள்ளுவதற்குந் தனது ஈகையும் அன்புமே ஆதாரமாயுள்ளது போல தான்பெறும் அழியாப்புகழுக்கும், அழியாப்பொருளுக்கும் தனது தன்மமே துணையன்றி வேறொரு வரும் துணையாகாரென்பது கருத்து.

(வி.) ஆனந்த ஈகையும், அன்பின் பெருக்கமும், சாந்த உருவமுமே பரிநிருவாண சுயம்பிரகாச தோற்ற தேவர் தன்னுருவமாதலின் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் அவாவாம் பற்றினை அறுத்தற்கு மூலம் தன்மமென்றறிந்த மேலோர் தன்னைத்தானறிந்து அடங்கற்குத் தானே தானே தலைவனாதலின் தனதழியாமெய்ப் புகழுக்கும், தனதழியாமெய்ப் பொருளுக்கும் தனது தன்மமே ஆதாரமன்றி வேறொருவனும் ஆதாரமில்லை யென உணர்ந்து வரைந்துள்ள வற்றிற்குப் பகரமாக அறநெறிச்சார ஆக்கியோன் முனைப்பாடியார் "தனக்குத் துணையாகித் தன்னை விளக்கி, இனத்து ளிறைமெயுஞ் செய்து - மனக்கினிய, போகந்தருதலாற் பொன்னே அறத்துணையோ, டேகமானண்பொன்றுமில்" என்றும், மகாபுராணம் "இத் துணைத்தரும தானங்களிம்மெயின், மெத்திய செல்வமுஞ்சுதருமேவிநீண், முத்தியின் மான மேற்பொலிவர் மூதுரைப், பத்தியின்றானமே பலிக்க வேண்டுமால்" என்றும், சிவதன்மோத்திரம் “மகவினை யாலாகத்தின் வருத்தந்தன்னான் மாநிதியான் மற்றுமுள பொருள்களாலுந், தகைபெறு வானவராலுங் காதலின்றேற் சாதிக்கப்படுவதன்று தருமந்தானே, யுவகையுறவாதரவாற்சிறிதே தேனுமுதவியிடிலறமதனாற் பெரிதுண்டாகும், அகநெகலு மாதரவுமதியா தாரென்றறியா தாரென் பெறுவரன்னோவன்னோ " என்னும் தன்மமே சகலசீருக்கும் சுகத்திற்கும் ஆதாரமென்பது விரிவு.

2.அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலினூங் கில்லை கேடு.

(ப.) அறத்தினூஉங் - தன்மத்திற்கு மேற்பட்ட, ஆக்கமும் - சுகாதாரமும், இல்லை - வேறொன்றுங் கிடையாது, அதனை - அத்தன்மத்தை, மறத்தலினூங்