பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/602

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

592 / அயோத்திதாசர் சிந்தனைகள்

யாருயிர்க் கருளைச்செய்யிற், பறவையு நிழலும்போலப் பழவினையுயிரோடோடி, மறவியொன்றானுமின்றி மனத்ததேசரக்குநல்லான், கறவையிற் கரக்குந் தன்னாற் காமுறப்பட்டவெல்லாம்” என்றும் அவனவன் செய்யும் அறத்தின் ஆற்றல் அவனவன் எண்ணிய வெண்ணம் முடிதலே காட்சி என்பது விரிவு.

8.வீழ்நாள் படா அமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.

(ப.) வீழ்நாள் - கழிந்த நாளெல்லாம், நன்றாற்றி - நல்லறத்தை, படாஅமை செய்யாதொழிந்த, னஃதொருவன் - ஒருவன், வாழ்நாள் - மற்றும் வாழ்நாள் முயற்சியாவிற்கும், வழியடைக்குங்கல் - தடைகளுண்டாகிக்கொண்டே வருமென்பது பதம்.

(பொ.) தன்மத்தைச் செய்தவன் முயற்சி முட்டுபடாது முடிவதுபோல் தன்மத்தைச் செய்யாதோன் முயற்சி முடியா என்பது பொழிப்பு.

(க.) மலைமீதேற முயற்சிப்போனுக்கு அடுத்தடுத்து கற்குன்றுகள் தடையுண்டாகி இழிவதுபோல், ஈகையற்ற லோபிகளெடுக்கும் முயற்சிகள் யாவற்றிற்கும் லோபத்துவத் தடைகளே முன்னின்று கெடுக்குமென்பது கருத்து.

(வி.) ஈகையற்ற குணம் எவனிடம் நிறைந்துள்ளதோ அவனிடம் சீவகாருண்யங் கிடையாது. சீவகாருண்யம் எவனிடத்தில்லையோ அவனை சருவசீவர்களும் விரோதிப்பர். அத்தகைய சருவசீவர்கள் மத்தியில் ஈகையற்றோன் செய்யும் இச்சாசெயல்கள் யாவற்றிற்கும் இடுக்கமாகியத் தடைகளுண்டாவது இயல்பாம். கடந்தநாள் யாவற்றிலும் ஈகையற்ற லோப வாழ்க்கை அமைந்தோன் இனி கடக்கவேண்டிய நாளில் எடுக்கு முயற்சிகள் யாவுங் கெடுமென்பதாதலின் கடக்குநாளிலேயே தன்மத்தைச் செய்யின் தடை அகலுமென்பதற்குச் சார்பாய் பாசமாட்சி"இன்றியமையா விருமுதுமக்களைப், பொன்றின்மெகண்டும் பொருள்பொருளாய்க்-கொள்பவோ, வொன்றும் வகையா னறஞ்செய்கவூர்ந்துருளிற், குன்றும் வழி தடுப்பதில்” என்பதற் காதாரமாக வாழ்நாளை வீணாளாக்காது அறஞ்செய்ய வேண்டுமென்பதே விரிவு.

9.அறத்தான் வருவதே யின்ப மற்றெல்லாம்
புறத்த புகழு மில.

(ப.) அறத்தான் - தன்மச் செயலால், வருவதே - தோன்றுவதே, இன்பம் - அழியா சுகம், மற்றெல்லாம் - வேறு வகையால், புறத்த - அன்னியரிடத்தே, புகழுமில - கீர்த்தியும் சுகமும் இல்லை யென்பது பதம்.

(பொ.) தன்மத்தின் பெருக்கமாம் நல்லறத்தால் சுகமுங் கீர்த்தியும் உண்டாமன்றி ஏனையவற்றால் யாதும் உண்டாகாதென்பது பொழிப்பு.

(க.) அறமென்பது அன்பு, ஈகை, சாந்தமென்னும் மூன்றினையுமே பீடமாகக் கொண்டுள்ளதால் அறத்தின் மிகுதியே சுகத்திற்கும் சிறப்பிற்கும் ஆதாரமென்றும் மற்றவையால் அல்லவென்பதுங் கருத்து.

(வி.) அறமென்பது தன்மம் ஒன்றைமட்டிலுங் குறிக்காது மக்களுக்கு நீதிநெறிகளைப் புகட்டுதலுந் தன்மம், தன்னுயிர்போல் பிறருயிரை நேசிப்பதுந் தன்மம் தன்சுகம்போல் பிறர்சுகமுங் கருதுவது தன்மம், தன் துன்பம்போல் பிறர் துன்பத்தை ஆற்றுதலுந் தன்மம், தனக்குண்டாந் துக்கமே பிறருக்கும் உண்டாமெனக் கருதி அவற்றை நீக்குதலுந் தன்மம், தனக்குண்டாம் பெருந் திரவியத்தை தன்னையடுத்தோருக்கும் ஈய்ந்து தன்மயமாக்கிக்கொள்ளுவது தன்மம், தானடைந்த நிருவாண பேரானந்தத்தை ஏனையோருமடைய வேண்டுமெனப் போதிப்பதுந்தன்மமாதலின் அவற்றாலடையும் பேரின்ப சுகமே சுகம், அழியாப் புகழே புகழென்பது கண்டு அறத்தால் வருதலே இன்பமென்று கூறியவற்றிற்குச் சார்பாய் அறநெறிச்சார ஆக்கியோன் முனைப்பாடியார், "தனக்குத் துணையாகித் தன்னைவிளக்கி, இனத்துளிறைமெயுஞ்செய்து - மனக்கினிய,