பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/604

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

594 / அயோத்திதாசர் சிந்தனைகள்


2.துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.

(ப.) துறந்தார்க்குந் - இல்லறத்தைவிட்டு நீங்கி துறவறமாஞ் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், துவ்வாதவர்க்கும் - அவ்வகைத் துறவடையா வாதுலர்க்கும், மிறந்தார்க்கும் - மரணமடைந்தோர்க்கும், மில்வாழ்வானென்பான் - இல்லாளுடன் குடும்பியென வாழ்பவனே, துணை - உதவி யாவனென்பது பதம்.

(பொ.) புத்தசங்கத்தைச்சார்ந்து துறந்தவர்களுக்கும், அங்ஙனந் துறவாத கூன் குருடு சப்பாணிகளாம் ஆதுலர்களுக்கும், மரணமடைந்தோர்களுக்கும் உதவியாயிருந்து சகல காரியங்களையுங் குறைவற நடாத்திவர வேண்டியவன் உபாசகனென்னும் இல்வாழ்வோனே என்பது பொழிப்பு.

(க.) சமணமுநிவர்களை தங்கள் தங்கள் சாதனங்களில் நிலைபெறச் செய்பவனும், ஆதுலர்களாம் ஏழைகளுக்கன்னம் ஈய்ந்து ஆதரிப்பவனும், மரணமடைந்தப்பிணங்களைக் கொண்டுபோய் சுடலை சேர்ப்பவனுமாகியக் குடும்பியே துணையாவனென்பது கருத்து.

(வி.) துறவறஞ் சிறந்து புலன் தென்பட்டவர்களாகும் தென்புலத் தோர்க்கும், அஞ்ஞானமிகுத்து துற்கன்மிகளாய வாதுலர்களுக்கும், பாபகன்மப் பெருக்கத்தால் தன்னை யாயாது மரணமடைந்தோர்களுக்கும் இல்வாழ்வோனே துணையென்பது கண்ட தெய்வப்புலவர் இல்லற வாழ்க்கை முதற்பாடலில் மூவர்க்கும் இல்வாழ்வான் துணையென்று பாடியுள்ளவை சகலருக்கும் விளங்காதென்பதுணர்ந்து இரண்டாவது பாடலில் துறந்தார், துவ்வாதவர், இறந்தோரென மேல் மூவரை விளக்கி இல்லற தன்மமும் இல்லறத்தோன் ஈகையையும் விளக்கி சுருக்கத்தில் துறவறசுகமடையும் படிவரைந்து நல்லறமே இல்லறமாக ஒழுகும்படி செய்தவற்றுள் இல்லறத்தையுந் துறவறத்தையுந் தெள்ளற விளக்கி தெய்வகதிபெறச் செய்துவைத்தவர் புத்தரேயென்பது அடியிற்குறித்த செய்யுளால் விளங்கும். யாப்பருங்கலைக்காரிகை "வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக், கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின், மாலைதாழ் கூந்தலார் வரன்முறையான் வந்தேத்தச், சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தார்தன் சொன்முறையான், மனையறமுந் துறவறமு மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும், வினையறுக்கும் வகைதெரிந்து ஈடொடுகட்டிவையுரைத்த, தொன்மெசால் கழிகுணத் தெந்துறவாசை தொழுதேத்த, நன்மெசால் வீடெய்துமாறு” என்று முதனூலுணர்ந்த ஆசான் தனது வழிநூலில் இல்லறவொழுக்கத்தைத் தெள்ளற விளக்கித் துறவற வழியைக் காட்டியுள்ளாரென்பது விரிவு.

3.தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கு மென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை.

(ப.) தென்புலத்தார் - புலன்கள் தென்படவுழைக்கும் சமண முநிவர்களுக்கும், தெய்வம் - ஆறாவது தோற்றமாம் மக்களிலிருந்து யேழாவது தோற்றமாம் தேவகதிபெற்றவர்களுக்கும், விருந்தொக்க - ஒத்த விருந்தின ரென்றளிக்கும், தமென்றாங் - யீகையையுடையோனை, கைம் புலத்தார் - ஐம்புல வவாவுள்ளோர் யாவரும், றலை - தங்கள் சிரங்களிலேந்தி, றோம்ப கொண்டாடுவார்களென்பது பதம்.

(பொ.) புலன் தென்பட உழைப்போர்களுக்கும், புலன் தென்பட்டு தேவகதியடைந்த யேழாவது தோற்றத்தோர்களுக்கும் நன்னோக்க விருந்தளித்துக் காக்கும் குடும்பியை தங்கட்சிரமீது ஏந்திக்கொண்டாடுவர், ஐம்புல அவாவில் உழலுங் குடிகளென்பது பொழிப்பு.

(க.) புத்தசங்கத்திற் சேர்ந்து தங்கட்புலன்கள் தென்பட சாதிக்கும் சமணமுநிவர்களுக்கும், சமணமுநிவர்களுள் சித்திபெற்ற அறஹத்துக்களுக்கும் அன்புடன் அன்னமூட்டிவரும் உபாசகக்குடும்பியை மற்றுங் குடும்பிகள் தங்கட் சிரமீதேற்றிக் கொண்டாடுவார்களென்பது கருத்து.