பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/620

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

610 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(பொ.) தன்மத்தைச் செய்தற்கு அன்பே ஆதாரமாயிருந்துச் செய்வதுபோல் ஏழைகளது தன்மமில்லாச் செயலுக்கும் அன்பே ஆதாரமாயிருந்து தன்மத்தை செய்விக்குமென்பது பொழிப்பு.

(க.) கனதனவான்கள் செய்துவருந் தன்மத்திற்கு அன்பே ஆதாரமாய் இருந்துவருவதுபோல் ஏதுமற்ற யேழைகளுக்கும் அவ்வன்பே ஆதாரமாயிருந்து மறக்கருணையைப்போக்கி அறக்கருணையை யுண்டுசெய்யுமென்பது கருத்து.

(வி.) கனதன மிக்கோன் ஒருவன் மறமாம் உலோபநிலையுற்று அன்பற்று தன்மத்தை மறக்கின்றான். தனமில்லா னொருவன் அறமாம் யீகைநிலையுற்று அன்புற்று தன்மத்தைச் செய்கின்றான். இவ்விருவருள் தனமில்லானுக் கன்பும், தனமுள்ளோனுக் கன்புமில்லாமலிருப்பது சகஜமேயாயினும் ஓர்கால் அவ்விலோபிக்கும் அன்பே ஆதாரமாகி தன்மத்தை செய்விப்பது சகஜமாதலின் அறத்திற்குஞ் சார்பு அன்பு, மறத்திற்குஞ் சார்பு அன்பு என்பதை விவரித்த விரிவாம்.

7.என்பி லதனை வெயிற்போலக் காயுமே
அன்பி லதனை யறம்.

(ப.) என்பிலதனை - என்பிலாப்புழுவை, வெயில்போலக் - சூரியனது வெப்பம்போலக், காயுமே - தீய்ப்பதுபோல், அன்பிலதனை யறம் - தன்மமே சுடுமென்பது பதம்.

(பொ.) எலும்பில்லாப் புழுவை சூரிய வெப்பமானது தகிப்பதுபோல் அன்பில்லாதவனை அறந் தகிக்குமென்பது பொழிப்பு.

(க.) அன்பில்லாதோன் தனம் எடுப்பதற்குஞ் சுடும், கொடுப்பதற்குஞ் சுடும். அவை யெவ்வகைத்தென்னில் என்பில்லாப் புழுவானது சூரியனின் வெப்பத்தினால் எழுகையிலுஞ் சுடும், தவழ்கையிலுஞ் சுடுமென்பது கருத்து.

(வி.) என்பில்லாப் புழுக்கள் சூரியனது வெப்பத்தால் சூடுகொண்டழிவது போல் அன்பில்லாதோன் செய்யுந் தன்மமானது அவனுக்குள்ள உலோப அக்கினியால் சூடுகொண்டு தன்னிற்றானே கெடுவானென்பது விரிவு.

8.அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றன் மாந்தளிர்த் தற்று.

(ப.) அன்பகத்தில்லா - உள்ளத்தின்கண் அன்பில்லா, வுயிர்வாழ்க்கை - சீவியச் செயலானது, (எவ்வகைத்தென்னில்) வன்பாற்கண் - கொடிய பாலைநிலத்திடத்தே, வற்றன் - காய்ந்த, மரம் - விருட்சம், தளிர்த்தற்று - துளிர்த்ததற் கொக்குமென்பது பதம்.

(பொ.) அகத்தி னிடத்தே அன்பிலாதோன் வாழும் வாழ்க்கையானது பாலை நிலத்திற்பட்ட மரந் துளிர்ப்பதற்கொக்குமென்பது பொழிப்பு.

(க.) இல்லறவாழ்க்கையை இனிதுநடாத்துவோன் உள்ளத்தில் அன்பென்பது இல்லாமற்போமாயின் அவ்வாழ்க்கைக்கு சுகமில்லையாகும். எவ்வகையென்னில் பாலை நிலத்திற் பட்ட மரந் துளிர்க்காததுபோ லென்பது கருத்து.

(வி.) கொடிய பாலைநிலமானது நன்னிலமல்லாக் காந்தளாதலின் அதனிற்பட்ட மரந் துளிர்க்காதென்பது துணிபு. அதுபோல் அகத்துள் அன்பில்லா வன்னெஞ்சரது வாழ்க்கை எஞ்ஞான்றுஞ் சுகத்தைத் தாராவென்பது விரிவு.

9.புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பில வர்க்கு.

(ப.) யகத்துறுப் - உள்ளத்தின்கண், பன்பிலவர்க்கு - அன்பில்லாதவர் களுக்கு, புறத்துறுப்பெல்லா - மற்ற புறவுறுப்புகளெல்லாம், யாக்கை - உடலுக்கு, மெவன் செயும் - என்னபயனைத் தருமென்பது பதம்.

(பொ.) உள்ளன்பில்லா வுடலுக்குப் பலவுறுப்புகளிருந்தும் பயனில்லை யென்பது பொழிப்பு.