பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

620 / அயோத்திதாசர் சிந்தனைகள்

காலமறிந்து செய்த அவ்வுதவி பூமியின்கண் மிக்க மேலாயது என்றே ஏற்கவேண்டும் என்பது பொழிப்பு.

(க.) ஒருவன் ஆபத்து காலமறிந்து செய்தவுதவியானது மிக்கச் சிறிதேயாயினும் அவனது கேட்டின் காலமறிந்து செய்தவுதவியால் உலகத்தில் அவ்வுதவி மிக்கமேலாயது என்பது கருத்து.

(வி.) உலகத்தாருக்குச் செய்யும் உதவிகளில் அவனவனுக்கு நேரிடுந் துன்பகாலங்களை அறிந்து செய்யும் உதவியே மிக்கமேலாய உதவியென்றுணர்ந்த மேலோன் காலத்தினாற் செய்தவுதவி சிறிதேயாயினும் ஞாலத்தில் அஃதே பெரிதென்பதற்குச்சார்பாய் அறநெறிச்சாரம் “இன்சொல்விளைநிலமா ஈதலேவித்தாகி, வன்சொற்களைகட்டு வாய்மெ-யெருவட்டி, அன்புநீர்பாய்ச்சி அறக்கதிரீன்றதோர், பைங்கூழ் சிறுகாலைச்செய்” என்னும் இனிய மொழியையுங் காலமறிந்து செய்யும் பேரானந்தவுதவியையும் விளித்த விரிவு,

3.பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
னன்மெ கடலிற் பெரிது.

(ப.) பயன்றூக்கார் - எதிரியின் பயனைக் கருதாது, செய்தவுதவி - கொடுக்கும் உபகாரமானது, நயன்றூக்கி - குணவாராச்சியில், னன்மெ - சுகநிலையானது, கடலிற்பெரிது - கடன்மடை திரண்டோடும் எழுகடலினுஞ் சிறந்ததென்பது பதம்.

(பொ.) எதிரியின் பயனைக் கருதாது செய்யும் உதவியின் நயத்தை சீர்தூக்கி ஆராயுங்கால் அதனது சிறப்பு கடலினும் பெரிது என்பது பொழிப்பு.

(க.) யாதொரு பயனையுங்கருதாது செய்யும் உதவியின் நயத்தை யாராயுங்கால் உலகத்தில் மடைதிரண்டோடும் எழுகடலினும் மேலாயது என்பது கருத்து.

(வி.) உலகத்திற் கடல் மடைத்திரண்டோடி யாதொரு பிரிதிபயன் ஏற்காது உபகாரமாக விளங்கும் பாற்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், தேன்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், உவர்நீர்கடல், நன்னீர்க்கடல் ஆகிய எழுகடலினும் மேலாய உதவியாதெனில் எதிரியின் பயனை சீர்தூக்கி சிந்தியாது செய்யும் உதவியே பெரிது என்பது விரிவு.

4.தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்றெரி வார்.

(ப.) தினைத்துணை - தினையரிசியி னளவாக, நன்றி - உபகாரஞ், செயினும் - செய்வதாயினும், பனைத்துணையாக் - அவற்றை பனைமரத்திற் கொப்பாய பேருதவியாக, கொள்வார் - ஏற்பர், பயன்றெரிவார் - அதன் பயனையறிந்த மேலோர்கள் என்பது பதம்.

(பொ.) தினை அரிசியினளவாகப் பெற்ற உபகாரத்தைப் பனைமரத்துக்கு ஒப்பாக கொள்ளுவர் பெரியோர் என்பது பொழிப்பு.

(க.) விவேக மிகுந்த மேன்மக்கள் தினை அரிசிக்கு ஒப்பாய சிறிய உபகாரத்தைப் பெறினும் அவற்றைப் பனைமரத்திற்கு ஒப்பாய பேரூபகாரமாகக் கருதுவார்கள் என்பது கருத்து.

(வி.) கருணை மிகுந்த மேன்மக்கள் சிறிய உபகாரத்தைப் பெறினும் அந்நன்றி மறவாதச் செயலால் அதனைப் பேருபகாரமாகக் கருதி மேலும் மேலும் அதன் பயனை உள்ளத்துணர்வதுடன் ஏனையோருக்கும் அதன் பயனை உணர்த்தி இனிது விளக்குவான் வேண்டி உதவியின் பெரிது சிறிதைத் தினைக்கும் பனைக்கும் ஒப்பிட்டு உரைத்த விரிவு.

5.உதவி வரைத்தன் றுதவி யுதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

(ப.) உதவி - செய்தவுதவியின், வரைத்தன் - நன்றியை மறவாதோர்க்கு, றுதவி யுதவி - மேலு மேலு முபகாரத்தை, செயப்பட்டார் - செய்துவருவோர், சால்பின்வரைத்து - என்றென்று மன்னன்றியைப் பெறுவாரென்பது பதம்.