பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/632

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

622 / அயோத்திதாசர் சிந்தனைகள்


8.நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.

(ப.) நன்றி மறப்பது - ஒருவர் செய்த வுபகாரத்தை மறப்பது, நன்றன்று - நல்லதல்லவாகும், நன்றல்ல - ஒருவர் செய்த தீங்கினை, தன்றே மறப்பது - அப்பொழுதே மறந்துவிடுவது, நன்று - நல்லதாகும்.

(பொ.) ஒருவர் செய்த உபகாரத்தை என்றும் மறவாதிருத்தலே நல்லதாகும். ஒருவர் செய்த துன்பத்தை அன்றே மறந்துவிடவேண்டும் என்பது பொழிப்பு.

(க.) ஒருவர் செய்த தீங்கினை அப்போதே மறந்துவிடுவது நலமாகும். ஒருவர் செய்த உபகாரத்தை மட்டிலும் எக்காலும் மறக்கலாகாது என்பது கருத்து.

(வி.) ஒருவர் செய்த உதவியை எக்காலும் மறவாதவர்கள் அதன் புண்ணிய பலத்தால் பட்டாடை உடுத்தி சுகசீவ வாழ்க்கையிலிருப்பார்கள். அவ்வுதவியை மறப்போர் வாட்டமுற்று உணர்வற்றிருப்பாரென்னுங் கேட்டை நாலடியார் நானூறு “புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணிய மோவேறே, யுணர் வுடையாரிருப்ப வுணர்விலா, வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே, பட்டுந்துகிலுமுடுத்து" என்றும் நாலடியார் நல்லோர்க்குறி "செய்நன்றி மறவாதபேர்களும் ஒருவர்செய் தீமெயை மறந்தபேரும்" என்னும் ஆதாரங்கொண்டு நன்றியை மறவாதிருத்தலே நற்பயனென்றறிந்தொழுகற்கு எதிரடையாக, ஒருவர் செய்த தீங்கினை மறவாதிருப்பதாயின் உள்ளங்கொதித்து மேலும் மேலும் தீங்கினை வளர்த்து அதிதுன்பம் உண்டாவதை உணர்ந்த பெரியோன் ஒருவர் செய்த தீங்கினை அன்றே மறந்துவிடவேண்டும் என்று கூறிய விரிவு.

9.கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்.

(ப.) கொன்றன்ன - கொல்லத்தக்க, வின்னா - பலவகையாய துன்பங்களை, செயினும் - செய்தபோதினும், மவர்செய்த - அவரால் செய்யப்பட்ட, வொன்று - ஒரு நன்றுள்ள - உபகாரத்தையுள்ளத் துணர்வதாயின், கெடும் - அத்துன்பங்கள் யாவும் விலகிப் போமென்பது பதம்.

(பொ.) ஒருவர் கொல்லத்தக்கப் பலவகைத் துன்பங்களைச் செய்யினும் அவரால் செய்துள்ள உபகாரத்தை உள்ளத்துணர்வதாயின் அத்துன்பங்கள் தானே அகலும் என்பது பொழிப்பு.

(க.) ஒருவர் செய்த உபகாரத்தை மறவாதிருப்போனை யாதொரு துன்பஞ்செய்யினும் அணுகாது என்பது கருத்து.

(வி.) செய்நன்றியை மறவாத நல்லோனை நன்றிசெய்தவனே ஓர்கால் துன்புறுத்தின் அத்துன்பம் அவனை அணுகாதென்னுஞ் காரணம் யாதெனில் அவனோர்கால் செய்த நன்றியை எக்காலும் மறவாது உள்ளத்து இறுத்தி யுள்ளவனாதலின் தீவினையாம் கள்ளம் அகன்று உள்ளபடி முடியுமென்னும் ஆதாரத்தால் நன்றிமறவாத நல்லோர்பால் தீவினை அணுகாது என்பது விரிவு.

10.எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

(ப.) எந்நன்றி - எத்தகைச் செயலையும், கொன்றார்க்கு - கெடுத்தோர்க்கு, முய்வுண்டா - சுகமுண்டாம், செய்நன்றி - உபகாரச்செயலை, கொன்ற - கெடுத்த, மகற்கு - மக்களுக்கு, முய்வில்லை - சுகமில்லையென்பது பதம்.

(பொ.) எத்தகையச் செயல்களைக் கெடுத்தோருக்கும் சுகமுண்டாம். ஒருவர் செய்த நன்றியைக் கெடுப்போருக்கு சுகமில்லை என்பது பொழிப்பு

(க.) எவ்வகையாயச் செயல்களை மறக்கினும் சுகமுண்டாம். ஒருவர் செய்த வுபகாரத்தை மறக்கின் எக்காலும் சுகமில்லை என்பது கருத்து.

(வி.) ஒருவர் செய்துள்ள நன்றியை மறந்த மக்களுக்கு எக்காலும் சுகமில்லையென்னுங் காரணம் யாதெனில் நன்றியை உள்ளத்து உள்ளானுக்கு