பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/633

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 623

சகல தீவினைகள் அறும் என்பதும், நன்றியை மறந்தோனுக்குத் தீவினை யறாது என்பது விரிவு.

12. நடுவு நிலைமெய்

அதாவது தன் சுகம் பிறர் சுகமென்னும் பேதமின்றியும், தன்னவ ரன்னியர் என்னும் பேதமின்றியும், தன்னலம் அன்னியர் நலமென்னும் பேதமின்றியும், சகல மக்களையும், சகலர் சுகத்தையும், சகலர் நலத்தையும், தன்னவர் சுகம்,தன்னவர் நலமென நிற்கும் நிலையையே நாடி நிற்றல் நடுவு நிலைமெயாதலின் செய்நன்றியை அறிதலுக்குப் பின் நடுவுநிலைமெயை விளக்குகின்றார்.

1.தகுதியென வொன்று நன்றே பகுதியாற்
பாற்பட் டொழுகப் பெறின்.

(ப.) தகுதியென - தகுந்தகு மென்னும் நடுநிலைமொழி, வொன்று - ஒன்று, நன்றே - நல்லதாகும், பகுதியாற் - பிறிவினையால், பாற்பட்டொழுகப் - நெறியற்றிருக்கப், பெறின் - பெறுவோரென்னும் பதம் நன்றன் றென்பதைக் குறிக்குங் குறுக்காம்.

(பொ.) பலராலும் நடுவு நிலைமெயோன் என மதிக்கத்தக்க நிலையே நன்றாம். நடுவு நிலைமெயற்றோன் தீயன் எனப்படுவான் என்பது பொழிப்பு.

(க.) சகலராலும் இவன் நெறியை உடையவன், நடுவு நிலைமெயோன் என்னுந் தகுந்த பெயர் ஒன்றைப் பெறுதலே நன்றாம். அதற்கு மாறாக நெறிபிறழ்ந்து நடுவுநிலைமெயற்று நிற்றல் நன்றன்றென்பதை கூறாமற் குறித்த கருத்து.

(வி.) இவன் தன்னவன் அன்னியனென்னும் பேதம் பாராதவன் தன்னலத்தைப்போல் பிறர் நலங் கருதுகிறவன், தன்சுகம்போல் பிறர்சுகங் கோருகிறவன் நெறிபிறழா நடுநிலைமெயுடையவனென்னத்தகும் பெயரொன்றைப் பெறுதலே நன்றென்றும் அவற்றிற்கு மாறாய் நெறி பிறழ்தலை கேட்டின் ஒழுக்கமென்று குறிப்பிட்டுள்ளவற்றிற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "விதிப்பட்ட நூலுணர்ந்து வேற்றுமெ நீக்கிக், கதிப்பட்ட நூலினைக் கையிகந்தாக்கி, பதிப்பட்டு வாழ்வார் பழியாயசெய்தல், மதிப்புறத்திற் பட்ட மறு." நடுவு நிலைமெயாம் ஒழுக்கநெறி நிற்றலே நன்றென்றும் தெற்கு மாறாம் பகுதியாய பாற்பட்டொழுகல் தீதென்றுங் கூறிய விரிவாம்.

2.செப்ப முடையவ னாக்கஞ் சிதைவின்றி
யெச்சத்திற் கேமாப் புடைத்து.

(ப.) செப்ப முடைய - சொல்லத்தக்க நடுவுநிலைமெயுடையவனது, னாக்கஞ் - தன சம்பத்தானது, சிதைவின்றி - யாதொரு சேதமுமின்றி, யெச்சத்திற் - புத்திரபௌத்திரர்களுக்கும், கேமாப்புடைத்து - இல்லையென்னா துதவுமென்பது பதம்.

(பொ.) சகலராலும் நடுவுநிலைமெயுடையவனெனப் போற்றப் பெற்றவனது தன்சம்பத்து யாதொரு சேதமுமின்றி தனது புத்திர பௌத்திரர் களுக்கும் உதவுமென்பது பொழிப்பு.

(க.) கஸ்தூரியுள்ள பாண்டம் கஸ்தூரியகலினும் அதன் மணம் நீங்காதது போல் நடுவுநிலைமெயுள்ளோன் மறையினும் அந்நற்செயல் நீங்காது அவனது தனசம்பத்து அவனுக்குதவியது போல் தனது புத்திர பௌத்திரர்களுக்குங் குறைவற உதவும் என்பது கருத்து.

(வி.) இவன் நீதிமான் நடுவுநிலைமெயுடையவனென சகலராலுங் கொண்டாடப் பெற்றவனது செல்வம் நாளுக்குநாள் பெருகுவதுடன் தனது புத்திர பௌத்திரர்களுக்கும் அச்செல்வம் பெருகி சுகச்சீர்பெறுவார்கள் என்பதற்குச் சார்பாய் காக்கைபாடியம் "நெறியிற் பிறழா நடுநிலையாளர், பொறியும் புலனும் போற்றுதற்கினிதாய், செறியுஞ் செல்வச் சேர்தனம் யாவுங், குறியா முரவோர்க் குதவுவ தாமே" என்னும் மொழிகொண்டு நடுவு