பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/638

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

628 / அயோத்திதாசர் சிந்தனைகள்


4.நிலையிற் றிரியா தடங்கியான் றோற்ற
மலையினு மாணப் பெரிது.

(ப.) நிலையிற்றிரியா - நடுவுநிலைபிறழாது, தடங்கியான் - ஒடுங்கியவன், றோற்ற - காட்சியானது, மலையினு - அசலத்தினும், மாண - மிக்க, பெரிது - மேலாக விளங்கும் என்பது பதம்.

(பொ.) நடுவுநிலைமெய்ப் பிறழாது ஒடிங்கினவன் மலையினும் பெரிதாக விளங்குவான் என்பது பொழிப்பு.

(க.) திரிகரண ஒடுக்கத்திலும் நடுவுநிலைமெ பிறழாது நிற்பவன் ஓர் மலைபோல் தோற்றுவான் என்பது கருத்து.

(வி.) அடக்க முடைய நடுவு நிலைமெயோன் தோற்றம் சகலருக்குங் குறிப்பிட வகல விளங்குகின்றபடியால் நடுவுநிலைமெயில் அடங்கிய பெருங்காட்சியை மலைக்கு ஒப்பிட்டுக் கூறிய மாணவிரிவாம்.

5.எல்லார்க்கு நன்றாம் பணிதல வருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந்த கைத்து.

(ப.) எல்லார்க்கு - சகலருக்கு மொடுங்கி, பணித - வணக்கமுறுதல், நன்றாம் நல்லதாம், லவருள்ளுஞ் - அத்தகையோருள், செல்வர்க்கே - செல்வமுள்ளார்க்கு, செல்வந் - செல்வமானது, தகைத்து - மேலுமேலுந் தழைக்குமென்பது பதம்.

(பொ.) எல்லோருக்கும் ஒடுங்கி வணக்கமுற வாழ்தலே நன்றாம். அவ்வகை அடக்கமுடையார்க்கு செல்வம் இருக்கின் அச்செல்வம் மென்மேலும் பெருகும் என்பது பொழிப்பு.

(க.) சகலரிடத்தும் அன்பு பொருந்த அடங்கி வாழ்தலே அழகாம். அவ்வகை வாழ்க்கைப் பெறுவோரது செல்வம் மேலும் மேலும் பெருகி சுகவாழ்க்கைப் பெறுவார்கள் என்பது கருத்து.

(வி.) எல்லோராலும் அடக்கமுடையான், வணக்கமுடையானென்னும் பெயரைப் பெருதலே அழகாம். அத்தகையோர்க்குக் கிஞ்சித்து செல்வமும் இருக்கின் அஃது மேலும் மேலும் பெருகுமென்பதற்குச்சார்பாய் அடக்கமுடையாரைத் துன்பமணுகா என்பதுடன் உயர்கதிக்கு மாளாக்குமென நாலடியார் "அறிவதறிந்தடங்கியஞ்சுவதஞ்சி, யுறுவதுலகுவப்பச் செய்து-பெறுவதனா, லின்புற்றுவாழு மியல்புடையா ரெஞ்ஞான்றுந் துன்புற்றுவாழ்தலரிது". அறநெறிச்சாரம் "இம்மெடக்கத்தைச்செய்து புகழாக்கி, உம்மெயுபரகதிக்குய்த்தலால்-மெய்ம்மெயே, பட்டாங் கறமுரைக்கும் பண்புடையாளரே, நட்டாரெனப்படுவார்” என்பது கொண்டு அடக்கத்தை விளக்கிய விரிவு.

6.ஒருமெயு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமெயு மேமாப் புடைத்து.

(ப.) ஒருமெயு - வோர்தேகத்துள், ளாமைபோ - ஆமையைப்போல், லைந்தடக்கலாற்றி - ஐம்பொறியடக்கியமைந்தோன், னெழுமெயு - இனிதோற்று மெழுவகைப் பிறப்பினையும், மேமாப்புடைத்து - தோற்றாதகற்றிக் கொள்ளுவானென்பது பதம்.

(பொ.) ஆமையைப்போல் ஐம்பொறியையும் அடக்கி ஆற்றலுற்றவன் இனி தோற்றும் எழுவகைப்பிறப்பையும் வெல்லுவான் என்பது பொழிப்பு.

(க.) ஆமையானது ஓர் தலையையும் நான்கு கால்களையும் அடக்கி சுகம் பெறுவதுபோல் ஓர் புருடன் மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் வாய ஐந்தினையுங் கண்டடங்குவானாயின் எழுபிறப்பினுந் தோற்றுந் துன்பங்களற்று சுகநிலை பெறுவான் என்பது கருத்து.

(வி.) அன்னியரால் தனக்குத் தீங்கு நேரிடாவண்ணம் ஆமையானது ஐந்துறுப்பினையும் அடக்கிக்கொள்ளுவதுபோல் புருடன் எழுபிறவி களாலுண்டாந் துன்பங்களை அகற்றிக்கொள்ளற்கு ஐம்பொறி வாயல் கண்டடங்கலே யாதாரமென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம்