பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/639

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 629

“உணர்ச்சியச்சாக வுசாவண்டியாகப், புணர்ச்சிப் புலனைந்தும் பூட்டி-உணர்ந்ததனை, ஊர்கின்றபாக னுணர்வுடைய னாகுமேல், பேர்கின்றதாகும் பிறப்பு" என்பதுகொண்டு ஐம்புலன் அடக்கத்தால் எழுவகைப் பிறப்பின் துன்பங்களும் அகலும் என்பது விரிவு.

7.யாகாவா ராயினு நாகாக்க காவாக்கான்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

(ப.) யாகாவாராயினு - எவராயிருப்பினும், நாகாக்கக் - நாவை யடக்கிக் காக்கல் வேண்டும், காவாக்கால் - அடக்கிக் காக்காவிடின், சோகாப்பர் - மயக்கத் துன்புறுவதுடன், சொல்லிழுக்கப்பட்டு - பலராலு மிழிவடையப் படுவார்க ளென்பது பதம்.

(பொ.) யாவாராயினுந் தனது நாவைக்காக்கல்வேண்டும். காக்காது போவாராயின் பற்பல துன்பங்களை அடைவதுடன் பல்லோராலும் இகழப்படுவார்கள் என்பது பொழிப்பு.

(க.) எத்தகைத்தோ ராயினுந் தனது நாவிலிருந்து கோட்சொல், கொடுஞ்சொல், புறச்சொல் முதலிய வழுச்சொல் எழாது காக்கல் வேண்டும். அவ்வகைக் காக்காவிடின் பலவகைத் துன்பங்களை அடைவதுடன் சகலராலும் இழிச்சொற் பெறுவார்கள் என்பது கருத்து.

(வி.) கனவானாயினும், ஏழையாயினும், கற்றோனாயினும், கல்லானாயினும், அடங்கிப் பேசவேண்டியதே அழகாம். அங்ஙனமடங்காது வித்தியா கர்வத்தாலும், தனகர்வத்தாலும் தனது நாவைக் காவாது கொடுஞ்சொல்லாலும் கோட் சொல்லாலுங் குறளைச் சொல்லாலும் மற்றோரைப் புண்படக் கூறியும் இழிபடக்கூறியுங் குடிகெடக்கூறியுங் கலம்பெறக் கூறியும்வருவார்களாயின் துன்பத்திற்கு ஆளாவதுடன் எக்காலும் இழிவடைப்படுவார்கள் என்பதற்குச் சார்பாய் இளையோராயினும் தேகவடக்கம், மனோவடக்கம், நாவடக்கம், பெறவேண்டுமென்பதை நாலடியார் “ஆர்த்தவறிவின ராண்டிளையராயினுங், காத்தோம்பிதம்மெ யடக்குப-மூத்தொறுஉந், தீத்தொழிலே கன்றித் திரிதந்தெரிவைபோற், போத்தறார் புல்லறிவினார் என்பது கொண்டு மூத்தோராகி நாவடக்கம் பெறாதுகெடினும், இளைஞராயினும் அடக்கமுற்று வாழ்தலே இனிது என்பது விரிவு.

8.ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும்.

(ப.) பொருட்பய னுண்டாயி - பயனுண்டாம் பொருளைக் கருதி பேசுங்கால், ஒன்றானுந் - ஒருமொழியாயினும், தீச்சொற் - கொடுமொழியா யிருக்குமாயின், நன்றாகாதாகிவிடும் - பயனடைவதற் கேதுவில்லாமற் போமென்பது பதம்.

(பொ.) ஒரு பொருளின் பயனைக் கருதி பேசுவோன் கொடுமொழி ஒன்றைக் கலந்து பேசுவானாயின் அம்மொழியால் நாடிய பொருள் கிட்டாதென்பது பொழிப்பு.

(க.) பயனுண்டாம் எப்பொருளை நாடிப்பேசினும் இனியமொழியால் பேசுதலே பயன்தரும். அங்ஙனமிராது ஓர் பயனைக் கருதியுங் கொடுமொழி எழுமாயின் கூடிய பயன் கெடுமென்பது கருத்து.

(வி.) தனக்கு வேண்டும் ஓர் பொருட் பயனைக் கருதிப் பேசுகிறவன் அடக்கமுறப் பேசுதலே அழகாம். அங்ஙனம் பேசாது ஓர் கொடுமொழி கலந்துவிடுவானாயின் "துரும்புங் கலத்தண்ணீரைத் தேக்கு" மென்னும் பழமொழிக்கிணங்க பலநற்பயனுங் கெடுமென்பது விரிவு.

9.தீயினால் சுட்டப் புணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு.

(ப.) தீயினால் - நெருப்பினால், சுட்டப் - வெதுப்பிய, புணுள்ளாறு - புண்ணானது தானே யாறிப்போகும், நாவினாற் - தனது வாயினால், சுட்ட - புண்படக்கூறியக் கொடுமொழியின், வடு - வருத்தமானது, மாறாதே - என்றும் ஆறாவென்பது பதம்.