பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/641

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 631

எழுஉங் கொடிய வார்த்தைகள் எழாமல் ஒடுங்கியும், தேகத்தால் செய்யுங் கொடியச் செயல்களைச் செய்யாமல் ஒடுங்கியும் வாழ்தலே மக்களது சிறந்த வாழ்க்கையாதலின் ஒழுக்கத்தை உயிரினும் மேலாகக் காத்தல் வேண்டுமென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் "மக்களுடம்பு பெறற்கரிது பெற்றபின், மக்களறிவு மறிதரிது - மக்கள், அறிவதறிந்தாரறத்தின் வழுவார், நெறித்தலை நின்றொழுகுவார்” என்னும் ஆதாரங்கொண்டு உயிரினுந் திரிகரண ஒடுக்கநெறியே மேலாயதென்பது விரிவு.

2.பரிந்தோம்பிக் காக்க வொழுக்கத் தெரிந்தோம்பித்
தேரினு மஃதே துணை.

(ப.) பரிந்தோம்பிக் காக்க - ஒன்றைக் கருதிக்காக்கலினும், வொழுக்கந் - ஒடுங்க வேண்டியவை யிவையென, தெரிந்தோம்பித் - கண்டுகருதி, தேரினு - முன்னேறுவதாயின், அஃதே துணை - அதுவே இவனுக்குத் துணையாமென்பது பதம்.

(பொ.) ஒன்றைப் பரிந்து செய்வதினும் இதுவே சரியாய நெறியென்று அறிந்து தேறுதலே அவனுக்குத் துணையாகும் என்பது பொழிப்பு.

(க.) ஒருவன் அவாக்கொண்டு செய்யும் செயலில் நீதிநெறியொழுக்கச் செயலைத் தெரிந்து செய்வானேயாயின் அச்செயலே அவனுக்குத் துணையாமென்பது கருத்து.

(வி.) நீதிநெறிவாய்மெயாம் ஒழுக்கமே சகலவற்றினுஞ் சிறந்ததென்று உணர்ந்து அவ்வழி ஒழுகுபவன் எவனோ அவனை அவ்வொழுக்கமே காக்குமென்பது அனுபவக் காட்சியாதலின் ஒருவனுக்குத் துணையாக நின்று காத்தலே இவனது ஒழுக்க மென்பதற்குச் சார்பாய் நாலடி நானூறு “வேற்றுமெயின்றி கலந்திருவர் நட்டக்காற், றேற்றா வொழுக்க மொருவன் கணுண்டாயி, னாற்றுந் துணையும் பொறுக்கப் பொறானாயிற், றூற்றாதே தூரவிடல்" என்பது கொண்டு மக்களுக்கு ஒடுக்கமே உற்ற துணையாம் என்பது விரிவு.

3.ஒழுக்க முடைமெ குடிமெ யிழுக்க
மிழிந்த பிறப்பாய் விடும்.

(ப.) ஒழுக்கமுடைமெ - நல்லொழுக்கத்தையுடையானென்பான், குடிமெ - குடும்பத்தோரால், யிழுக்க - இழிவடையப்படுவானாயின், மிழிந்த - தாழ்ந்த, பிறப்பாய் விடும் - பிறவியிற் றோன்றுவா னென்பது பதம்.

(பொ.) நல்லொழுக்கச் செயலை நாடுவோன் தனது குடும்பத்தில் ஒடுக்கமிராது இழுக்கடைவானாயின் தாழ்ந்தபிறப்பை அடைவானென்பது பொழிப்பு.

(க.) குடும்பத்தில் நல்லொழுக்கமில்லாதவன் பிறரிடத்தும் ஒழுக்கமற்று விலங்கும் பேயும் நரகருமாகத் தோற்றுவானென்பது கருத்து.

(வி.) தனது இல்லத்தில் தீயொழுக்கச் சாதனமுள்ளவன் பிறரிடத்தும் தீயொழுக்கமாங் கொலை, களவு, காமம், வெஃகல், வெகுளல், பொல்லாகாட்சி, பொய், குறளை, கடுஞ்சொல், பயினிற் சொல் ஆகியவற்றைப் பெருக்கி மிருக தோற்றங்களாம் பலவகைத் தாழ்ந்த பிறவிக்கேகுவானென்பது விரிவு.

4.மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

(ப.) மறப்பினு - தன்னை மறந்திருப்பானாயினும், மோத்துக்கொளலாகும் - சம்மதித்துக்கொள்ளலாம், பார்ப்பான் - தன்னைத்தானாராயக் கூடிய, பிறப்பொழுக்கங் - மானிடனெனப் பிறந்துள்ளோனது வொழுக்கம், குன்றக்கெடும் - குறையக் கெடுவானென்பது பதம்.

(பொ.) தன்னை அறிந்து ஆராயாதவன் ஆயினுங் குற்றமில்லை, தன்னை அறிந்தாராய்வோன் எனத் தோன்றிய மானிடன் நல்லொழுக்க நெறியினில்லானேல் கெடுவானென்பது பதம்.

(க.) மக்கட் பிறப்பிற் தோன்றியும் தன்னைத்தான் அறியாதவனாயினுங் குற்றமில்லை. மக்கட்பிறப்பாம் மானிடனெனப் பிறந்து தன்னை ஆராய முயன்றும் நல்லொழுக்க நெறியில் தவறுவானாயின் கெடுவானென்பது கருத்து.