பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/645

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 635

அவரினும் இழிவுள்ளோர் வேறுளரோ என்பதற்குச் சார்பாய் நாலடிநானூறு “புக்கவிடத்தச்சம் போதரும் போதச்சந், துய்க்குமிடத்தச்சந் தோன்றாமற் காப்பச்ச, மெக்காலுமெச்சந் தருமா லெவன்கொலோ, வுட்கான் பிறனில் புகல்” நன்மெய்க் கடைபிடிப்போராம் அறன்கடையாளர் இவ்வச்சங்களுக்கு ஆளாகார் என்பது விரிவு.

3.விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரிற்
றீமெபுரிந் தொழுகுவார்.

(ப.) விளிந்தாரின் - கண்டுதெளிந்தோரினும், வேறல்லர் - மற்றுஞ்சிறந்தோரில்லை, மன்ற - மற்றும், தெளிந்தாரிற் - கண்டுதெளியாதோர், றீமெ - கொடுங்காமச் செயலையே, புரிந்தொழுகுவார் - செய்துழலுவா ரென்பது பதம்.

(பொ.) நன்கு தீதெனக் கண்டு விளிந்தோரின் சிறந்தோர் வேறில்லை. அங்ஙனங் கண்டு தெளியாதவர்கள் அன்னியர் தாரத்தை இச்சிக்குங் கொடுமெயில் உழல்வார்களென்பது பொழிப்பு.

(க.) இஃது நற்செயல் அது தீச்செயலெனக் கண்டு அடங்கினோர்களினும் சிறந்தோர் வேறில்லையாக்கும். மற்றுமத்தீச் செயல் நற்செயலைக்கண்டு தெளியாதோர் காமவெறியால் அன்னியர் தாரத்தை இச்சிக்குந் தீமெயில் ஒழுகுவார் என்பது கருத்து.

(வி.) மக்களுக்குண்டாய நற்செயல் ஈதீது என்றும் துற்செயல்கள் ஈதீது என்றுங் கண்டு விளித்தோர் சகலருக்கும் நல்லவர்களாக விளங்குதலும் நன்மெய்க் கடைபிடித்தலுமாகியச் செயலால் அவரினுஞ் சிறந்தோர் வேறில்லையென்றும், இது தீயச்செயல் அது நற்செயலென்று கண்டுதெரியாதுங் கேட்டுணராதும் காமப்பெருக்கால் தங்கள் மனம்போனவாறு அன்னியர் தாரத்தை இச்சித்தும் அவரது குடியைக் கெடுப்பித்தும் கொடுமெயாம் தீமெபுரிந்து உழலுவார்களென்பது விரிவு.

4.எனைத்துணைய ராயினு மென்னாத் நினைத்துணையுந்
தேரான் பிறனில் புகல்.

(ப.) எனைத்துணையராயினு - எத்தகைத்தான உதவியிருப்பினும், மென்னாந் - என்னவாகும், தினைத்துணையுந் - ஓர் திணையரிசிக் கொப்பாய வுதவியுந், தேரான் - பெறான், பிறனில் புகல் - அன்னியன் மனையாளை நாடி அவளிட மணுகலென்பது பதம்.

(பொ.) ஒருவனுக்கு எவ்வகையான உதவிகளிருந்த போதினும் அவ்வுதவிகள் அன்னியன் மனையாளை நாடுவோனுக்கு அணுவளவும் உதவா என்பது பொழிப்பு.

(க.) அன்னியன் மனையாளை யிச்சித்து அவளிடம் அணுகுவோனுக்கு எவ்வகையானப் பேருதவிகள் இருப்பினும் அவைகள் யாவும் இவனுக்கு உதவாமற்போமென்பது கருத்து.

(வி. அன்னியன் தாரத்தை இச்சித்து உழலுவோனுக்கு அறமும், புகழும், சினேகமும், கீர்த்தியும் அகன்று பகையும், பழியும், பாவமும், அச்சமும் வந்தடைகின்றபடியால் ஒருவனுக்கு மக்களுதவியும் தனவுதவியும் தானியவுதவியும் நிறம்ப இருக்கினும் அன்னியன் மனையாளை ஆளுவோனுக்கு அஃதில் ஓர் தினையரிசி அளவேனும் உதவா என்பதற்குச் சார்பாய் நாலடிதானூறு "அறம் புகழ் கேண்மெ பெருமெயின்னான்கும், பிறன்றார நச்சுவார் சேரா - பிறன்றார, நச்சுவார்ச் சேரும் பகைபழிபாவமென், றச்சத்தோ டின்னாற் பொருள்" என்னும் ஆதாரங்கொண்டு எத்தகையத் துணையிருப்பினும் அத்தகைய துணைகள் யாவும் அன்னியன் தாரத்தை இச்சிப்பவனுக்கு தினையளவும் உதவாவென்பது விரிவு.