பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/649

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 639


(க.) பொறையில் ஒருவன் செய்த குற்றத்தை மடித்துவிடினும் மறுபடியும் அக்குற்றத்தை என்றுங் கருதாதிருத்தலே நலமென்பது கருத்து.

(வி.) பொறுமெயுடையோன் என்னுஞ் செயலைப்பெற்றவன் அன்னியனது குற்றத்தைக் கருதாது மடித்து விடினும் எதிரியினது குற்றம் மடிந்துவிட்டதென்றற்குச் சார்பாய் அதனை எக்காலுந் தோன்றவிடாமல் அகற்ற வேண்டியதே நலமென்பது விரிவு.

3.இன்மெயு ளின்மை விருந்தொரால் வன்மெயுள்
வன்மை மடவார் பொறை.

(ப.) இன்மெயு - ஒருபுருடனுக்கு, ளின்மை - பொருளிலாது, விருந்தொரால் - வரும்விருந் தோம்பாவிடினும், வன்மெயுள் - திடதேகி, வன்மை - பொருளிருப்பின், மடவார் - தனது விரோதிகளுக்கு மிட்டுண்பதே, பொறை - மன்னித்தலென்பது பதம்.

(பொ.) ஆதுலன் தனக்குப் பொருளிலாது விருந்தோம்பாவிடினும் உள்ளவன் தனது விரோதிக்கும் இட்டுண்பதே பொறையினது அழகென்பது பொழிப்பு.

(க.) பொருளில்லாத ஏழையா யிருப்போன் வருவிருந்தினரைக் காக்காவிடினும் பொருளுள்ள வல்லதேகி தனக்கு விரோதியாயுள்ளவன் வரினும் அவனுக்கு அன்புடன் விருந்தளிப்பதே பொறையுடையானின் அழகென்பது கருத்து.

(வி.) தெரிந்த விருந்தினரும் தெரியா விருந்தினரும் விரோத விருந்தினரும் அவிரோத விருந்தினரும் வரில் ஏழையாயுள்ளோன் தனது பொருளில்லாக்குறையால் தவித்து நிற்பான். பொருளுள்ள வல்லவனோ அங்ஙனமிராது தனக்கு விரோதியாயினும் அவிரோதியாயினும் வரின் பேதம்பாராது விருந்தளித்து அனுப்புவதே பொறுமெயின் குறியாதலின் மடவார் பொறை யென வற்புறுத்திக் கூறிய விரிவு.

3.நிறையுடைமெ நீங்காமை வேண்டிற் பொறையுடைமெ
போற்றி யொழுகப் படும்.

(ப.) நிறையுடைமெ - சாந்தரூபியென்றழைக்கப்பெற்றோன் பெயர், நீங்காமை வேண்டிற் - என்று மகலாதிருக்கவேண்டுமாயின், பொறையுடைமெ - பொறுமெயே உறுத்தி, போற்றி - அதனையே புகழ்ந்து, யொழுகப்படும் - நற்செயலில் நடக்கவேண்டுமென்பது பதம்.

(பொ.) சாந்தரூபி யென்னும் பெயரைப்பெற்றவன் அச்சாந்தத்தையே போற்றி ஒழுக வேண்டுமென்பது பொழிப்பு.

(க.) இவன் நல்லோன் சாந்தரூபி என்னும் பெயரைப் பெற்றவன். மேலும் மேலும் நல்லவனென்னுஞ் செயலைப்போற்றி ஒழுகவேண்டுமென்பது கருத்து.

(வி.) சகல நற்செயலும், நற்குணமும், நல்வாய்மெயும் நிறைந்த ஒருவன் அவைகள் நீங்காதிருக்க வேண்டுமாயின் தனக்குள் பொறுக்கும் செயலை பூரணப்படுத்தி அதனை கொண்டாடிவருவானாயின் அதுவே போற்றப்படு மென்பது விரிவு.

5.ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து

(ப.) ஒறுத்தாரை - யென்றுங் கோபக்குறி யுள்ளாரை, யொன்றாக - ஓர் மனிதனாக, வையாரே - மதிப்பில் வைக்கமாட்டார்கள், வைப்பர் - யாவரை மதிப்பில் வைப்பரென்னில், பொறுத்தாரைப் - முகமலர்ச்சியுள்ளாரை, பொன்போற் - சுவர்ணத்தைப்போல், பொதிந்து - பொருந்தவென்பது பதம்.

(பொ.) எக்காலுங் கோபக்குறி உள்ளாரை விவேகிகள் ஓர் மனிதனென மனதில் மதியார்கள்; பொறுமெ உள்ளாரைப் பொன்போல மதிப்பார்கள் என்பது பொழிப்பு.

(க.) எந்த காலத்திலுங் கோபக்குறியுள்ள முகத்தோனை விவேகிகள் மதிப்பில் வைக்க மாட்டார்கள். என்றென்றும் முகமலர்ச்சியுள்ள சாந்தரூபியை சுவர்ணம் போல் கருதி மதிப்பார்கள்.