பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/653

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 643

எழும் மனக்களங்கங்கள் ஆறினையும் அறுப்பான் என்று பேராசையின் களங்கை விளக்கிய விரிவாம்.

4.அழுக்காற்றி னல்லவை செய்யா கிழுக்காற்றி
னேதம் படுப்பாக் கறிந்து

(ப.) அழுக்காற்றி - அறுவகைக் களங்கங்களையு மகற்றி, னல்லவை - மக்களுக்குநல்லதை, செய்யா - செய்யாதவர்கள், கிழுக்காற்றி - சகலராலு மிழிவடைவதுடன், னேதம் - துன்பத்தையும், படுப்பாக்கறிந்து - அடைவதைக் காணலாமென்பது பதம்.

(பொ.) அறுவகைக் களங்கங்களையும் அகற்றி மக்களுக்கு நல்லதைச் செய்யாதவர்கள் சகலராலும் இழிவடைவதுடன் துன்பத்தையும் அடைவதைக் காணலாம் என்பது பொழிப்பு.

(க.) மனமாசுகள் ஆறினையும் அகற்றி மனுக்களுக்கு நல்லதைச் செய்யாதவர்கள் சகலராலும் இழிமொழிகளை அடைவதுடன் மீளா துன்பமடைவதால் படும் பாடுகளைக்கண்டே அறியலாம் என்பது கருத்து.

(வி.) உள்ளக் களங்கை அறுத்து உலகத்தோருக்கு நலஞ் செய்யாது வஞ்சினத்தாலும், பொறாமெயாலும், குடிகெடுப்பாலும், லோபத்தாலும், சூதினாலும், பேராசையாலும், மக்களுக்குத் தீங்குசெய்வோரை பலரும் இழிப்பதுடன் துன்பத்திற்கும் ஆளாவதைக் காணலால் களங்கறுத்து நல்லவை செய்யவேண்டுமென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் “உயிருமுடம்பும் பிரிவுண்மெயுள்ளிச், செயிருஞ் சினமுங் கடிந்து - பயிரிடைப், புற்களைந்து நெற்பயன் கொள்ளு மொருவன் போல், நற்பயன் கொண்டிருக்கற் பாற்று" என்பது விரிவு.

5.அழுக்கா றுடையார்க் கதுசாலு மொன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

(ப.) மொன்னார் - அன்னியரால், வழுக்கியுங் - மறுத்துங், கேடீன்பது - கெடுதிசெய்யாவிடினும், அழுக்கா றுடையார்க் - அறுவகைக் களங்கமுள்ளோர்க்கு, கதுசாலு - கெடுப்பதற் கதுவே போதுமென்பது பதம்.

(பொ.) அன்னியர் கேடுசெய்யாது அகலினும் அறுவகை அழுக்கினை உடையார்க்கு கேட்டை உண்டுசெய்தற்கு அதுவே சாலும் என்பது பொழிப்பு.

(க.) அறுவகை மனக்களங்கம் உள்ளாரை அன்னியர் கெடுக்காது விடினும் தனக்குள்ளக் களங்கே தன்னைக் கெடுப்பதற்குப் போதுமானதாம் என்பது கருத்து.

(வி.) வஞ்சினம், பொறாமெ முதலிய அறுவகைக் களங்கங்களால் அன்னிய மக்கள் துன்புற்று மறுத்துங் கேடுசெய்யாது விடினும் தனக்குள்ளக் களங்கே இரும்பைத் துரும்பு அரிப்பதுபோல் தன்னைத்தானே அக்களங்கு கெடுத்தற்குப் போதிய வழியாம் என்பது விரிவு.

6.கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்ற முடுப்பதூஉ
முண்பதூஉ மின்றி கெடும்.

(ப.) கொடுப்ப - ஒருவர் செய்யுந் தன்மத்தைக் கெடுக்கும், தழுக்கறுப்பான் - பேரவா வழுக்குடையான் கெடுவதன்றி, சுற்ற - தனதுரவின்முறையோரும், முடுப்பதூஉ - உடுக்க ஆடையு, முண்பதூஉ - புசிக்க சோறும், மின்றி - கிடையாது, கெடும் கெடுவார்களென்பது பதம்.

(பொ.) ஒருவர் செய்யுந் தன்மத்தைக் கெடுக்கும் பேரவா அழுக்குடையான் தான்கெடுவதுடன் தனது சுற்றத்தாரும் உடுக்கத் துணியில்லாமலும், உண்ண சோறில்லாமலுங் கெடுவார்களென்பது பொழிப்பு.

(க.) அன்பின் மிகுதியால் ஒருவருக்குச் செய்யுந் தன்மத்தைக் கெடுக்கும் அழுக்காறுடையோன் தான் உண்ண சோற்றிற்கும், உடுக்க வஸ்திரத்திற்கும் அலைவதுடன் தனது சுற்றத்தோருங் கெடுவார்களென்பது கருத்து.