பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/656

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

646 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வெதும்பி, பழிபடுவ - நிந்தைக்குள்ளாக, செய்யார் - செய்துகொள்ளாரென்பது பதம்.

(பொ.) பொதுவாய நிலையில் ஒடுங்கி நிற்பவர் கேட்டைத்தரும் பொருளை இச்சித்து, வெதும்பி, நிந்தைக்குரிய செயலுக்குள்ளாகார் என்பது பொழிப்பு.

(க.) தனக்குக் கிடைத்தவரையில் போதுமென்னுந் திருப்தியை உடையவர் கெடுதியை உண்டு செய்யும் பயனை இச்சித்து, வெதும்பி, நிந்தையை உண்டு செய்துக்கொள்ளமாட்டார்கள் என்பது கருத்து.

(வி.) நடுநிலைமெயிற் போதுமென்னுந் திருப்தியுற்று கிட்டியவரையில் ஒடுங்கிநிற்பவர் கிட்டாப்பயனைக் கருதி அதனால் வெதுப்புற்று தனக்கு இழிபழி நேரும்படிச் செய்துக்கொள்ள மாட்டார்கள் என்பது விரிவு.

3.சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்

(ப.) மற்றின்பம் - பேரின்பத்தை, வேண்டுபவர் - கோறி நிற்போர், சிற்றின்பம் - சொற்ப காம யின்பத்தில், வெஃகி - வெதும்பி, யறனல்ல - தன்மத்திற்கு மாறுபட, செய்யாரே - நடவார்களென்பது பதம்.

(பொ.) பேரின்பத்தைக் கோறிநிற்பவர்கள் சொற்பகால இன்பமாம் காமியத்தால் வெதும்பி தன்மத்திற்கு மாறுகொள நடவார்கள் என்பது பொழிப்பு.

(க.) சதா இன்பத்தைக் கருதி சுகசாதனஞ் செய்பவர்கள் சொற்பநேர இன்பமாங் காமியத்தால் வெதும்பி அறநெறியைக் கடக்க மாட்டார்கள் என்பது கருத்து.

(வி.) முத்தி பேறாம் பேரின்பத்தைக் கருதி உள்ளத்திலோர் களங்கமும் அணுகவிடாது அகற்றுஞ் சாதனமுடையவர்கள் சொற்பகால இன்பத்தைக் கொடுக்குங் காம இச்சையால் தன்மவழி தவறி தங்கள் உள்ளத்தை வெதும்பச் செய்து கொள்ளமாட்டார்கள் என்பது விரிவு.

4.இலமென்று வெஃகல் செய்யார் புலம்வென்ற
புன்மெயில் காட்சி யவர்.

(ப.) புலம்வென்ற - ஐம்புல நுகர்ச்சியினை வென்ற, புன்மெயில் - சிறந்ததேக, காட்சியவர் - தோற்றமுடையவர்கள், இலமென்று - ஒருபொருளுங் கிட்டவில்லையே யென்று, வெஃகல் செய்யார் - வெதும்பலடையார்களென்பது பதம்.

(பொ.) ஐம்புல நுகர்ச்சிகளை வென்ற சிறந்த தேகத்தோற்றமுடையவர்கள் தங்களுக்கு ஒருபொருளுங் கிடைக்கவில்லையேயென உள்ளம் வெதும்பார்கள் என்பது பொழிப்பு.

(க.) மெய், வாய், கண், மூக்கு, செவியென்னும் ஐம்புலன் உளவுகளை அறிந்த சுகதேகிகள் தங்களுக்கு யாதொன்றும் இல்லையே என வெதும்பார்கள் என்பது கருத்து.

(வி.) மெய்யினது உணர்ச்சியின்நிலையையும், கண்ணினது பார்வையின் நிலையையும், மூக்கினது முகரல் நிலையையும், செவியினது கேட்டல் நிலையையுங் கண்டுணர்ந்த சிறந்த தேகிகள் தங்களுக்கு வேறுபொருள் ஒன்றும் இல்லையேயென உள்ளம் வெதும்பித் ததும்பச் செய்துக் கொள்ளார்கள் என்பது விரிவு.

5.அஃகி யகன்ற வறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

(ப.) யார்மாட்டும் - யாவரையுங்கண்டு, வெஃகி - மனந்தாளாது வெதும்பி, வெறியசெயின் - பொல்லாங்கை செய்துவிட்டு, அஃகியகன்ற - பயந்தோடும், வறிவென்னாம் - விவேக மென்னவாமென்பது பதம்.

(பொ.) ஒவ்வொருவரையுங்கண்டு மனந்தாளாது வெதும்பி தீங்குசெய்துவிட்டு பயந்தோடுவது என்ன விவேகம் என்பது பொழிப்பு.