பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/666

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

656 / அயோத்திதாசர் சிந்தனைகள்


4.நல்லா ரெனப்படுவதியா தெனின் யாதொன்றுங்
கொல்லா மெசூழும் நெறி.

(ப.) நல்லாரெனப்படுவ - நல்லவரென்று சொல்லும்படியானவை, யாதெனின் - எதுவென்றால், யாதொன்றுங் - ஏதொரு சீவப்பிராணிகளையும், கொல்லாமெ - துன்பஞ்செய்யாதிருத்தலே, சூழும் - அமைந்த, நெறி - கடைப்பிடியாம் என்பது பதம்.

(பொ.) நல்லவன் என்று சொல்லும்படியானவை எதுவென்றால், ஏதொரு சீவப்பிராணிகளையும் துன்பஞ் செய்யாதிருத்தலே அமைந்த கடைப்பிடியாம் என்பது பொழிப்பு.

(க.) எல்லோராலும் நல்லவன் என்று சொல்லும்படியான அறிகுறி யாதெனில் சருவசீவர்களுக்குந் துன்பஞ்செய்யாத நிறைந்த வொழுக்கத்தினால் என்பது கருத்து.

(வி.) உலகத்தில் சகலராலும் நல்லவன் என்று சொல்லுமொழி ஏதெனில் மனுக்களுக்கு மட்டிலுங் நல்லவனென்று தோற்றமுற்று எறும்பு கடை யானை முதலாயுள்ள சீவராசிகளைத் துன்பஞ்செய்வானாயின் அவன் நல்லவனென்று அழைக்கப்படமாட்டான். சருவவுயிர்களின்மீதும் அன்புபொருந்தி கருணாநாயகனென்னும் நல்லொழுக்கஞ் சூழ்ந்து நன்னெறியில் நிலைத்தவனையே நல்லவனென்று அழைக்கலாம் என்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் “நல்வினைநாற்கால்விலங்கு நவைசெய்யுங் கொல்வினையஞ் சிக்குயக்கலம் - நல்வ, உறுதியுமல்லவும் நாட்பேர் மாப்பேர், இறுதியிலின்பந்தரும்” என்பதில் மிருகங்களும் நல்வினைச் செய்வதுண்டு, அதற்கொப்ப மனிதனும் ஏதோவோர் நல்வினைச் செய்வதிற் பயனில்லை கொல்வினையற்றிருப்பதே பயன் என்பது விரிவு.

5.நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சி
கொல்லாமெ சூழ்வான் றலை.

(ப.) நிலையஞ்சி - துக்கம் நிலையா யுள்ளதென பயந்து, நீத்தாரு - துறந்தாரி, ளெல்லாங் - யாவரினும், கொல்லாமெ - சீவர்களைத் துன்பஞ் செய்யாது. சூழ்வான் - கருணை நிறைந்தோனே, தலை - முதலவரென்பது பதம்.

(பொ.) துக்கம் நிலையாய் உள்ளதென்று பயந்து துறந்தார் யாவரினும் சீவர்களைத் துன்பஞ்செய்யாது கருணை நிறைந்தோனே முதலவன் என்பது பொழிப்பு.

(க.) துக்கமே என்றும் நிலையாய் உள்ளது என்றஞ்சி துறவுபூண்டவருள் சீவராசிகளுக்கு துக்கத்தை உண்டு செய்யாதவனே முதலவன் என்பது கருத்து.

(வி.) உலகத்தில் தோன்றியுள்ள மக்களுக்கு பிறவி துக்கம், பிணி துக்கம், மூப்பின் துக்கம், மரண துக்கமே நிலையாயுள்ளதுகண்டு பயந்து இல்லந் துறந்த வருள் சீவராசிகளுக்குத் துக்கத்தை விளைவிக்காத கருணை மிகுத்தோன் எவனோ அவனே துறந்தோருள் தலைவனாவன் என்பது விரிவு.

6.கொல்லாமெ மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்
செல்லா துயிருண்ணுங் கூற்று.

(ப.) கொல்லாமெ - ஒருயிரையும் வதையாச்செயலை, மேற்கொண்டொழுகுவான் - முக்கியமாகக் கருதிநடப்போன், வாழ்நாண்மேன் - சுகமாய வாழ்க்கை தினத்து, துயிருண்ணுங்கூற்று - மரணத்துக் கேதுவாய துன்பங்கள், செல்லா - நடவாது என்பது பதம்.

(பொ.) ஓருயிரையும் வதையாச் செயலை முக்கியமாகக் கருதிநடப்போன் சுகவாழ்க்கை தினத்து மரணத்துக் கேதுவாய துன்பங்கள் நடவாது என்பது பொழிப்பு.

(க.) சீவகாருண்ய முதிர்ந்து ஓருயிரினையுந் துன்பஞ் செய்யாதவனது வாழ்க்கையில் மரணத்துக்கேதுவாய யாதாமோர் துன்பமும் அணுகாது என்பது கருத்து.