பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 57

புத்தருடைய ஞான நீதிகளுக்கும் நேர்விரோதமாய் இருந்தபடியால் அதை ஜெயிப்பதற்கு பலவகைத் தருக்கங்களைச் செய்தும் சித்தியடையாமல் இத்தேசத்தில் அவரவர் தொழில்களுக்கென்று ஏற்படுத்தியிருந்த அந்தணன், அரசன், வணிகன், வேளாளன் என்னும் பெயர்களை கீழ்ச்சாதி மேற்சாதி என மாறுபடுத்திக் கொண்டு புத்தருடைய சம்மதத்தை சாதித்து வந்தவர்களும் வீரவாகு சக்கரவர்த்தி மாவிலி சக்கரவர்த்தி இவர்களின் வம்மிஸ வரிசையோர்களுமாகிய சாக்கையர்களை பறையர் பறையரென்னும் கீழ்ச்சாதிகளாக்கி நசித்துவிட்டால் புத்தமதம் தலையெடுக்காமல் நசிந்துவிடும் என்னும் கெட்ட எண்ணத்தினால் நமது குலத்தோரை 1,700 வருஷ காலமாகப் பறையர் பறையரென்னும் கீழ்ச்சாதியாக வகுத்து கல்வி விஷயத்திலும், நாகரீக விஷயத்திலும், உத்தியோக விஷயங்களிலும் தலையெடுக்கவிடாமல் நசித்துவந்த துன்பங்களினால் நாளுக்குநாள் சீர்குலைந்து சிந்தைநைந்து சற்குருவின் தியானத்தையும் மதசம்மத ஒழுக்கங்களையும் அவற்றின் பெயர்களையும் மறந்து செய்கைகளை முற்றும் மாறாமல் நிறைவேற்றிவருகின்றார்கள். இதன் சுருக்கத்தை சாக்கைய முநிவர் சரித்திரத்திலும் வேலூர் - மைசூர் முதலிய சுரங்கங்களில் எடுத்துள்ள செப்பேட்டு சாசனங்களிலும் புத்தமத அரசர்களின் சரித்திரங்களிலும் தெரிந்துக் கொள்ளலாம்.

நமது குலகுருவாகிய ஒப்பிலா அப்பன் சோதிமயமாய் நிருவாணதிசையடைந்த 3,475-வருடமானது இந்த பிலவங்க வருஷம் மார்கழி மீ 29 உக்குச்சரியான இங்கிலீஷ் 1908 வருஷம் ஜனவரிமீ 13உ சோமவாரம் விடியற்காலம் போதி பண்டிகை என்பது போகிபண்டிகை என்று வழங்கிவருகிறபடியால் புத்ததன்மக் குடும்பத்தோர் ஒவ்வொருவரும் அன்று விடியற்காலத்து எழுந்து நீராடி சுத்தவஸ்திரங்கள் அணைந்து வீடுகள் முழுமையும் தீபங்களால் அலங்கரித்து கற்பூரத்தட்டில் ஜலத்தை நிறப்பி வாசல்மத்தியில் வைத்து கற்பூரத்தைக் கொளுர்த்தி சலமுள்ள தட்டில் வைத்து சோதி சாட்சியாய் பஞ்சபாதகஞ் செய்யோமென்று உறுதிவாக்கு அளிப்பதற்கு அடியிற் குறித்துள்ள பஞ்ச சீலங்களை முதற்சொல்லி குறித்துள்ள பாடல்களால் சிந்தித்து கற்பூரசோதி அமர்ந்தவுடன் தட்டிலுள்ள சலத்தை எல்லோர் நாவிலும் தடவி வீடுகள் தோரும் தெளித்து விடிந்தவுடன் தங்கள் தங்கள் சக்திக்கியன்றவாறு பிக்ஷக்களுக்குப் புசிப்பளித்தவுடன் ஏழைகளுக்கு அன்னதானஞ் செய்து பசியாற்றித் தாங்களும் புசித்து சத்தியதன்மத்தைக் கொண்டாடும்படிக் கோருகிறோம். இந்த நிருவாண நாள் ஆதியில் பௌர்ணமிதிதி திருவாதிரை நட்சத்திரத்தில் வந்தது. தற்காலம் அப்போதிபண்டிகையை மார்கழி மாதம் கடைநாளில் வந்த கணக்கையே விசேஷித்து நடந்தேறியபடியால் பௌர்ணமி திதியையும் திருவாதிரை நட்சத்திரத்தையுங் குறிக்காமல் மாதக் கடைநாளில் நிறைவேறி வருகின்றது.

அறிவோம் குருவாழ்க குருவேத்துணை
அறிவோம் தன் மம்வாழ்க தன்மமேதுணை
அறிவோம் சங்கம்வாழ்க சங்கமேதுணை
முதலாவது சற்குருவின் செயலைப் பின்பற்றுகிறோம்.
இரண்டாவது அவர் சத்தியதன் மத்தைப் பின்பற்றுகிறோம்.
மூன்றாவது அவரது சாது சங்கத்தைப்பின்பற்றுகிறோம்.

பஞ்சசீலப்பிரதிக்கினை

பொய்சொல்லாம லிருப்போமாக
பிறர்பொருளை களவு செய்யாம லிருப்போமாக
பிறர் மனையாளை யிச்சியாமலிருப்போமாக
மயக்கவஸ்துக்களை யருந்தாம லிருப்போமாக
சீவப்பிராணிகளைக் கொலைச்செய்யாம லிருப்போமாக.

மணிவண்ணனென்னும் அரசனும் தனது தேவிமார்களும் போதி பண்டிகையன்று சோதியை வளர்த்தி புத்தரை தியானித்த பாடல்கள்.

சூளாமணி

ஒளியாகி யுலகாகி நீவிரிந்தா யென்கோ
வுலகெலா நின்னொளியினுள்ளடங்கிற்றென்கோ
வளியார வுலகநீயாள் கின்றா யென்கோ