பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/673

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 663

கூறக்கேட்டு அதனால் உணர்வுதோன்றி புறங்கூறலற்று மரிப்பானாயின் நல்லறத்தினின்று நல்லறம் புரிந்தோன் அடையும் பயனை யடைவான் என்பது விரிவு.

4.கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.

(ப.) கண்ணின்று - கண்டவிடத்தும், கண்ணறச் - காணாவிடத்தும், சொல்லினும் - சொல்லக்கூடா மொழியை, சொல்லற்க - சொல்லலாகாது, முன்னின்று - முகமுகமாக, சொல் - பகர்ந்தமொழியை, பின்னோக்கா - காணாவிடத்துப் பேசலாகாதென்பது பதம்.

(பொ.) கண்டவிடத்துங் காணாவிடத்தும் சொல்லக்கூடாமொழியைச் சொல்லலாகாது. முகமுகமாகப் பகர்ந்தமொழியைக் காணாவிடத்துப் பேசலாகாது என்பது பொழிப்பு.

(க.) ஒருவரைக் கண்ணினாற்கண்டு பேசுமிடத்து அவரைக் காணாதிருக்குங்காலத்தும் பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசலாகாது. அதனினும் முன்னில் வோர் வார்த்தையைப் பேசிவிட்டு அவர் சென்ற பின் கனக்குறைவாய வேறொரு வார்த்தையைப் பேசலாகாது என்பது கருத்து.

(வி.) ஒருவரைக்கண்டு பேசுமிடத்திலேனும் அவரைக் காணாவிடத் தேனுமோர் தீங்கினை விளைவிக்கும் வார்த்தைகளைப் பேசலாகாது. அதனினுங் கண்டவிடத்து இனியமொழிகளைக் கூறிவிட்டு காணாவிடத்துப் புறங்கூறி இழிவடையச்செய்யு மொழிகளைப் பேசலாகாது என்பது விரிவு.

5.அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மெ புறஞ்சொல்லும்
புன்மெயாற் காணப் படும்.

(ப.) அறஞ்சொல்லு - தன்மத்தைப் புகட்டும், நெஞ்சத்தா - உள்ளத்தை யுடையவனது, னன்மெய் - சுயவுருவம், புறஞ்சொல்லும் - அன்னியனைக் காணாவிடத்திழிவுகூறும், புன்மெயாற் - பொறாமெயால், காணப்படும் - விளங்கிப்போ மென்பது பதம்.

(பொ.) தன்மத்தைப் புகட்டும் உள்ளத்தை உடையவனது சுயவுருவம் அன்னியனைக் காணாவிடத்து இழிவு கூறும் பொறாமெய்யால் விளங்கிப்போம் என்பது பொழிப்பு.

(க.) ஒருவன் சத்திய தன்மத்தைப் போதித்தபோதினும் மற்றவர்களைப் புறம்பி இகழ்வானாயின் அவன் அசத்தியனே என்பது கருத்து.

(வி.) ஒருவன் நீதிநெறி வாய்மெகளைத் தெள்ளறப் போதிப்பவனாகக் காணப்படினும் அவன் மற்றவர்களைக் காணாவிடத்து அவர்கள் மீது இல்லாபழி மொழிந்தும், இழிவு கூறியுங், கேடுண்டாக்கத்தக்க ஏதுக்களைச் செய்துவிடுவானாயின் நீதிநெறி வாய்மெய்க் குரிய போதகனாகான் என்பது விரிவு.

6.பிறன்பழி கூறுவான் றன்பழி யுள்ளுந்
திறன்றெரிந்து கூறப் படும்.

(ப.) பிறன் - அன்னியனை, பழி கூறுவான் - குறைசொல்லுபவன், றன்பழி தனது குறைகளை, யுள்ளுந் - தன்னிற்றானே, திறன்றெரிந்து - தேற வுணர்ந்து, கூறப்படும் - சொல்லுகவேண்டுமென்பது பதம்.

(பொ.) அன்னியனைக் குறைச்சொல்லுபவன் தனது குறைகளை தன்னிற்றானே தேற உணர்ந்து சொல்லவேண்டும் என்பது பொழிப்பு.

(க.) அன்னியனது குற்றத்தைப் புறங்கூற ஆரம்பிப்பவன் தன்னுடையக் குற்றங்களை முற்றும் ஆய்ந்து கூறல் வேண்டும் என்பது கருத்து.

(வி.) தனக்குள்ள பொய், களவு, கள்ளருந்தல், விபசாரம், கொலை முதலிய பழிபாதகங்களைத் தன்னில் தானே உணர்ந்தவைகளை அகற்றாது பிறனது பொய்யையுங் களவையுங் கள்ளருந்தலையும் விபச்சாரத்தையுங் கொலையையும் புறங்கூறித் திரிதல் பயனில்லை என்பது விரிவு.