பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 667

சீர்மெயாந் தூயதேக ஒளிகுன்றி உள்ளக் கீர்த்தியும் அகன்றுப்போம் என்பது விரிவு.

6.பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.

(ப.) பயனில் - ஏதொரு பயனுமற்ற, சொல் - மொழிகளை, பாராட்டுவானை - பேசித்திரிவோனை, மகனெனல் - புத்திரனெனக் கூறுதலிலும், மக்கட் - அவனை மனுக்களுள், பதடியெனல் - பதரெனக் கூறலாமென்பது பதம்.

(பொ.) ஏதொரு பயனுமற்ற மொழிகளைப் பேசித் திரிவோனை புத்திரனெனக் கூறுதலிலும் அவனை மனுக்களுள் பதரெனக் கூறலாம் என்பது பொழிப்பு.

(க.) தனக்கும் பிறருக்கும் ஏதொரு பயனையுந்தாரா வீண்மொழிகளைப் பேசித்திரிவோனை பதருக்கு ஒப்பானவனெனக் கூறலாம் என்பது கருத்து.

(வி.) உலகமக்களுக்குந் தனக்கும் பயனைத் தரக்கூடிய கல்வி விருத்தியைப் பற்றியும், வித்தியா விருத்தியைப்பற்றியும் ஞானவிருத்தியைப்பற்றியும், நீதியின் விருத்தியைப் பற்றியும் பேசிப் பயனை உண்டு செய்யாது தானுமறியா தன்தந்தையும் அறியாப் பொய் மொழிகளையும் வீண்மொழிகளையும் பிதற்றித்திரிவோனைப் பதரென்று கூறலாம் என்பது விரிவு.

7.நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமெ நன்று.

(ப.) நயனில - இனிதற்ற, சொல்லினும் - மொழிகளைப் பேசினும், சொல்லுக - பேசலாம், சான்றோர் - பெரியோர்முன், பயனில - யாதொரு பயனுமற்ற மொழிகளை, சொல்லாமெனன்று - பேசாதிருப்பதே நல்லதென்பது பதம்.

(பொ.) இனிதற்ற மொழிகளைப் பேசினும் பேசலாம் பெரியோர்முன் யாதொரு பயனுமற்ற மொழிகளைப் பேசாதிருப்பதே நல்லது என்பது பொழிப்பு.

(க.) பலர் செவிகளுக்கும் இனியதான மொழிகளைப் பேசித்திரியினுந் திரியலாம் கற்றுணர்ந்து அடங்கியுள்ள மேன்மக்களிடத்து யாதொரு பயனுமற்ற மொழிகளைப் பேசலாகாது என்பது கருத்து.

(வி.) உலகமக்கள் நன்கு வாசித்தவன், நன்றாய் பேசுகிறான் மிக்க மிருதுவாய மொழிகளை உடையவனெனக் கூறும்படியாகப் பேசித்திரியினுந் திரியலாம் கற்று ஆய்ந்தடங்கிய மேன்மக்களாம் சான்றோர்களிடத்து யாதொரு பயனையுந்தாரா வீண்மொழிகளைப் பேசலாகாது என்பது விரிவு.

8.அரும்பய னாயு மறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.

(ப.) அரும் - அரியதாய, பயனாயு - பலனை யாராய்ந்துதிரியும், மறிவினார் - விவேகிகள், பெரும்பய - யாதொரு சிறந்த பலனும், னில்லாதசொல் - இல்லாதமொழிகளை, சொல்லார் - வீணிற்பேசார்களென்பது பதம்.

(பொ.) அரியதாய பலனை ஆராய்ந்து திரியும் விவேகிகள் யாதொரு சிறந்த பலனுமில்லாத மொழிகளை வீணிற்பேசார்கள் என்பது பொழிப்பு.

(க.) உலகத்திற் சிறந்தவை எவையென ஆராய்ந்துணரும் விவேகிகள் யாதொரு வீண்மொழிகளையும் பேசார்கள் என்பது கருத்து.

(வி.) தோற்றும் பொருட்கள் யாவும் கடிகைக்குள் கடிகை அழியும் என்றுணர்ந்து அழியாதவை எவையென ஆய்ந்து திரியும் அறிவுள்ளவர்கள் உலக மக்களுக்கு யாதொரு பயனையுந்தாரா வீண் மொழிகளைப் பேசமாட்டார்கள் என்பது விரிவு.

9.பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த
மாசறு காட்சி யவர்.

(ப.) மருடீர்ந்து - அஞ்ஞான விருளினின்றகன்று, மாசறு - களங்கமற, காட்சியவர் - தோன்றும்படியானவர்கள், பொருடீர்ந்த - அழியும் பொருட்க ளென்றுணர்ந்து, பொய்ச்சாந்தும் - மறந்து மதனுடன் கலந்தும், சொல்லார் - பேசார்களென்பது பதம்.