பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/681

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 671

தேகியாயினும், னாணுடை - அவனது வொடுக்கத்தால், பெண்ணே - பெண்தேகமே, பெருமெயுடைத்து - மிக்கச் சிறந்ததாமென்பது பதம்.

(பொ.) மனையாள்சொற் கடவாது அவள்சொல்லுந் தொழிலைச் செய்துவருவோன் புருட தேகியாயினும் அவனது ஒடுக்கத்தால் பெண்தேகமே மிக்கச் சிறந்ததாம் என்பது பொழிப்பு.

(க.) சிறந்ததோர் புருடதேகம் எடுத்தும் பெண்ணினது மாயபோதனைக்கு அடங்கி அவள்சொற் கடவாது நடப்பானாயின் புருடனென்னும் சிறப்புக் குன்றி பெண்ணே சிறப்படைவாள் என்பது கருத்து.

(வி.) சகலவற்றையும் அடக்கியாளுஞ் செயலால் ஆண்மெயாம் புருடனென்னும் பெயர் பெற்றோன் பேதைமெயாம் பெண் உருவினது ஏவலுக்குட்பட்டு அவள் ஏவுந் தொழிலைச்செய்து அடங்கிவாழ்வானாயின் புருடவுருவினும் பெண்ணுருவே சிறந்ததென்று கூறும் இழிவைத் தரும் என்பது விரிவு.

8.நட்டார்குறை முடியார் நன்னாற்றார் நன்னுதலாட்
பெட்டாங் கொழுகு பவர்.

(ப.) நன்னுதலாட் - தனக்கோர் சிறிய வின்பத்தைத்தரு மனைவியினது, பெட்டாங் - வாக்குக்கடங்கி, கொழுகுபவர் - வாழ்க்கைப் பெறுவோர், நட்டார் - தன்னைப் பெற்றுவளர்த்தோர், குறைமுடியார் - கோறிக்கையையும் முடிக்கமாட்டார், நன்னாற்றார் - தனக்காய நல்லாற்றலையு மடையார்களென்பது பதம்.

(பொ.) தனக்கோர் சிறியவின்பத்தைத்தரும் மனைவியினது வாக்குக்கடங்கி வாழ்க்கைப்பெறுவோர் தன்னைப்பெற்று வளர்த்தோர் கோறிக்கையையும் முடிக்கமாட்டார், தனக்காய நல்லாற்றலையும் அடையமாட்டார்கள் என்பது பொழிப்பு.

(க.) மனையாளினது சொற் கடவாது அவள் இன்பத்தில் ஆழ்ந்து நிற்போர் தன்னைப் பெற்று வளர்த்தோர் கோறிய விரதத்தையும் முடிக்கமாட்டார், தான் ஆற்றலடையுந் தவத்தையும் அடையமாட்டார்கள் என்பது கருத்து.

(வி.) தன்மனைவியினது சொற்கடவாமலும் அவளது வாக்குக்கு பயந்தும் அவளினது சிறியவின்பத்தில் ஆழ்ந்தும் வாழ்க்கை புரிவோர் தன்னைப்பெற்று வளர்த்தோர் குலம் விளங்கவேண்டிய புத்திரனைப் பெற்றெடுக்க விரதங்கார்த்து ஈன்ற அவர்களது கோறிக்கை நிறைவேறாமலும், தங்கள் துக்கமகன்று ஆற்றலடையும் நிலைபெறாமலும் போவார்கள் என்பது விரிவு.

9.அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வர்க ணில்.

(ப.) அறவினையு - தன்மச் செயலும், மான்ற - அதற்காய, பொருளும் - செல்வமும், பிறவினையும் - மற்றுந் தொழிற்களும், பெண்ணேவல் - பெண்களினது வாக்குக்கடங்குந் தொழில், செய்வர் - செய்வோரிடத்து, ணில் - நில்லாதென்பது பதம்.

(பொ.) தன்மச் செயலும் அதற்காய செல்வமும் மற்றுந் தொழில்களும் பெண்களினது வாக்குக்கு அடங்குந் தொழில் செய்வோரிடத்து நில்லாது என்பது பொழிப்பு.

(க.) பெண்களுடைய வாக்குக்கு அடங்கி அவர்களுக்கு ஏவல்புரிந்துவரும் புருடர்களிடத்து தன்மச்செயலும், செல்வமும், வேறு தொழிற்களும் நிலையாது என்பது கருத்து.

(வி.) புருடனானவன் தனது மனைவியுடைய வாக்குக்கடங்கியும் அவளுக்கு பயந்தும் தனது காரியங்களை நடத்திவருவானாயின் அவன் உதாரத்துவமாக நடத்தும் தன்மச்செயலற்று செல்வமும் ஒழிந்து தொழில்களும் ஒடுங்கி பெண்வழிசேர் பேதையாவான் என்பது விரிவு.